குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து போவதாகவும் நீங்கள் அறிந்தால் உங்கள் குழந்தைக்கு இரத்த சோகை பாதிப்பு இருக்கலாம்.
இரத்த சோகையிலிருந்து மீள குழந்தைகளுக்கான உணவுகள்
உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும்.
குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து போவதாகவும் நீங்கள் அறிந்தால் உங்கள் குழந்தைக்கு இரத்த சோகை பாதிப்பு இருக்கலாம்.
ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்கு நிறைய கோபம் வரும். விளையாட்டு மற்ற செயல்பாடுகளில் சோர்ந்து காணப்படுவார்கள். உணவு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் மண்ணை எடுத்து ருசிப்பார்கள்.
இரும்புச்சத்துக் குறைவை உணவு மூலம் பெருமளவு சரிப்படுத்திவிடலாம். அவல், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், முருங்கைக்கீரை மற்றும் கீரைகள், தவிடு, பேரீச்சம் பழம், முந்திரிப்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
பழச்சாறுகளிலும் ‘அயர்ன்’ இருக்கிறது. காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் இரும்புச்சத்தை உடலில் ஏற்கும் தன்மை குறையும். எனவே இவற்றை தவிர்த்து சூப், பழரசங்களைப் பருகத் தரலாம். குழந்தைகளுக்கு மதிய உணவுடன் நெல்லிக்காய் துவையல், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்த சாலட் செய்து தந்து சாப்பிட வைக்கலாம். கேழ்வரகு, பச்சைப் பயிறு, கடலைப்பருப்பு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி இடம்பெற செய்தால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
* தேனில் ஊறிய நெல்லிக்காய் தினமும் தரலாம்.
* தினமும் ஏதேனும் ஒரு கீரையை உணவில் பிசைந்து கொடுக்கலாம்.
* சாப்பிட்ட பின் தினமும் ஒரு பழம் தரலாம். காலை, மாலை இருவேளையும் பாலில் பேரிச்சம் பழம் ஊற வைத்து தரலாம்.
* கருப்பட்டி பணியாரம், அவல் உப்புமா, சத்து மாவுக் கஞ்சி என, வெரைட்டியாக சமைத்துத் தரலாம்.
* உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்த சாற்றை குடிப்பது நல்லது.
* பனை வெல்லம், பொட்டுக் கடலையுடன் நெய் சேர்த்து உருண்டை செய்துக்கொடுக்கலாம்.