பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் ஏற்படுவது உண்டு. அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது வலி இவை இத்தாக்குதலின் அறிகுறிகளாக வெளிப்படும்.
பெண்ணின் பிறப்பு உறுப்பில் ஏற்படும் ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல்
பெண்ணின் பிறப்பு உறுப்பில் சிலருக்கு அடிக்கடி ‘யீஸ்ட்’ பூஞ்சை தாக்குதல் ஏற்படுவது உண்டு. இது 75 சதவீத பெண்களுக்கு ஒரு முறையாவது ஏற்படுவது உண்டு. அரிப்பு, எரிச்சல், கசிவு, சிறுநீர் செல்லும் பொழுது வலி இவை இத்தாக்குதலின் அறிகுறிகளாக வெளிப்படும்.
இது அதிகம் பெருகி வளர்வதற்கான சில காரணங்களைப் பார்ப்போம்.
* அதிக ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்பவர்களுக்கு இத்தாக்குதல் ஏற்படுவது உண்டு. இந்த ஆன்டிபயாடிக் லக்டோபசில்ஸ் எனும் நல்ல பாக்டீரியாவினை குறைத்து விடுவதால் தாக்குதல் ஏற்படுகின்றது.
* கர்ப்ப காலம்
* கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை அளவினை ரத்தத்தில் கொண்ட நீரிழிவு நோயாளிகளுக்கு இத்தாக்குதல் ஏற்படுவதுண்டு.
* நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோர்.
* சத்தில்லாத உணவு மற்றும் மிகக் குறைந்த உணவு உட்கொள்பவர்கள்.
* அதிக சர்க்கரை மற்றும் இனிப்பு வகை உணவுகளை உட்கொள்பவர்கள்.
* மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடு.
* ஸ்ட்ரெஸ் ஆகியவைகள் யீஸ்ட் பூஞ்சை பாதிப்பு பிறப்புறுப்பில் தாக்குதலை ஏற்படுத்துகின்றன.
சில பெண்களுக்கு அடிக்கடி இப்பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. வருடத்திற்கு 4 முறைக்கு மேல் இப்பாதிப்பு ஏற்படுவதும் சிலருக்கு நிகழும். இப்படி அடிக்கடி யீஸ்ட் பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாபவர்களுக்கு சில காரணங்கள் உண்டு.
* ஹார்மோன் சீரான அளவில் இன்மை
* கர்ப்ப காலம்
* அதிக எடை
* இறுகிய ஆடை
இவைகளும் காரணமாகும்.
யீஸ்ட் பூஞ்சை பாதிப்பின் முதல் அறிகுறி அரிப்பும். வெள்ளை நிற திட்டு வெளியேற்றமுமாய் இருக்கும். இதற்கான உள் மருந்தும், பூச்சு மருந்து, க்ரீம் இவை மருந்தாக மருத்துவர் பரிந்துரைப்பார்.
5 சதவீத பெண்களுக்கு இப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்களுக்கு மருத்துவர் 6 மாத தொடர் சிகிச்சை அளிப்பார். உணவில் கொழுப்பில்லாத தயிர் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். பருத்தி உள்ளாடைகளே அனைவருக்கும் சிறந்தது.
பிறப்புறுப்பில் பாக்டீரியா கிருமி திருமணமான பெண்களிடையே சற்று கூடுதலாகக் காணப்படும். சில நேரங்களில் இவை அறிகுறி இல்லாமல் இருக்கலாம். அநேகமாக நீர் போன்ற கசிவு, துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு இவை இதன் அறிகுறிகள். அநேகமாக ஆன்டிபயாடிக் சிகிச்சையில் இது எளிதாக சரியாகி விடும். மருத்துவ சிகிச்சை அவசியம். கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாய் உடனடி சிகிச்சை பெற வேண்டும்.
தினமும் காலை ஊற வைத்த வெந்தயம் நீருடன் எடுத்துக் கொள்வதும், கொழுப்பில்லாத தயிர் தினமும் எடுத்துக் கொள்வதும் சிறந்த நிவாரணமாக அமையும்.
இது போன்று சிறுநீர் பாதை நோய் தொற்று அடிக்கடி வருவதற்கும் சில காரணங்கள் உள்ளன.
* மருத்துவமனையில் இருப்பவர்கள்
* நீரிழிவு நோய் பாதிப்பு உடையவர்கள்
* சிறுநீரக கல்
* சிறுநீர் வெளியேற குழாய் பொருத்தப்பட்டவர்கள்
* இவ்வுறுப்புகளில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அறுவை சிகிச்சை பெற்றவர்கள்.
* பிறவியில் சில குறைபாடு உடையவர்கள்
இவைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையுமே நிரந்தர தீர்வாக அமையும்.