மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பிடமாட்டீர்களா? இந்த மதியம் என்ன பொரியல் செய்வதென்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் இன்று வெண்டைக்காய் பொரியல் செய்யுங்கள். இதனை செய்வது மிகவும் எளிமையானது மற்றும் இது ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெண்டைக்காயை பொரியலை ஈஸியாக எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு வெண்டைக்காய் பொரியலின் எளிய செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 10-12 வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) மஞ்சள் தூள் – 1 சிட்டிகை துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு… கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது) நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் வெண்டைக்காயை நீரில் நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்கு சுருக்கும் வரை வதக்கி விட வேண்டும். வெண்டைக்காய் சுருங்கி நன்கு வதங்கியதும், அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், வெண்டைக்காய் பொரியல் ரெடி!!!