வீட்டிலேயே பிட்சா செய்ய தெரியுமா? இல்லையெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு முட்டை பிட்சாவை எப்படி எளிய முறையில் வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த முட்டை பிட்சாவின் செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்: பிட்சா பேஸ் – 1 எண்ணெய் – 1 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) பூண்டு – 2 பற்கள் (நறுக்கியது) முட்டை – 1 (வேக வைத்தது) தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சில்லி ப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் – 1 டீஸ்பூன் சீஸ் – தேவையான அளவு (துருவியது)
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் அதில் தக்காளி கெட்சப் சேர்த்து கிளறி, உப்பு, மிளகாய் தூள், உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்பு ஒரு மைக்ரோ ஓவனில் வைக்கும்படியான தட்டில், பிட்சா பேஸை வைத்து, அதன் மேல் வதக்கிய கலவையை பரப்பி வைத்து, முட்டைகளை நீளவாக்கில் நான்கு துண்டுகளாக்கி வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம், தக்காளியைத் தூவி விட வேண்டும். பின் துருவிய சீஸை தூவி, மேலே உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள் மற்றும் சில்லி ப்ளேக்ஸை தூவி மைக்ரோ ஓவனில் 1 நிமிடம் அல்லது தவா என்றால் மூடி வைத்து குறைவான தீயில் 2 நிமிடம் வேக வைத்து இறக்கி பரிமாறினால், முட்டை பிட்சா ரெடி!!!