மாலையில் டீ அல்லது காபி தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம். சொல்லப்போனால் காபி, டீயை விட சூப் மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் முருங்கைக்கீரையை சூப் செய்து குடித்தால், மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த சூப் செய்து கொடுத்தால், அவர்களுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைத்து, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
சரி, இப்போது முருங்கைக்கீரை சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Healthy Drumstick Leaves Soup
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – 4 கப்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சின்ன வெங்காயம் – 4 (நறுக்கியது)
தக்காளி – 1 (நறுக்கியது)
தண்ணீர் – 6 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகு – தேவையான அளவு
எண்ணெய்/நெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், முருங்கைக்கீரை சூப் ரெடி!!!