பெண்கள் நேரத்தை அதிகமாக செலவிடும் இடங்களில் சமையல் அறையும் ஒன்று. சமையல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால், அன்றைய நாளில் முடிக்க வேண்டிய மற்ற வேலைகளிலும், பாதிப்பு ஏற்படுகிறது. திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும். அதற்கான வழிகளை இங்கு பார்ப்போம்.
சமையல் அறையில் உள்ள பொருட்களை சரியான முறையில் அடுக்கி வைக்க வேண்டும். பயன்படுத்தி முடித்ததும் மீண்டும் அவற்றை உரிய இடத்தில் வைப்பதன் மூலம் எந்த பொருள், எந்த இடத்தில் இருக்கிறது என்பதை எளிதாக அறிய முடியும்.
அடிக்கடி பயன்படுத்தும் வாணலி, குக்கர், கரண்டி போன்ற பொருட்களை கைக்கு எட்டும் தூரத்தில் இருக்குமாறு வைக்கலாம். சமையல் எண்ணெய், உப்பு, தாளிப்பு பொருட்கள் ஆகியவற்றை எளிதாக எடுக்கும் வகையில் வைத்திருப்பது நல்லது.
ஒரு வாரத்துக்கான சமையலை முன்பே திட்டமிட்டு பட்டியல் தயாரித்துக்கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் உணவு தயாரிப்பது நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு உதவும்.
சமையல் வேலையை முடிந்தவரை எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். காலை வேளையில் எளிமையான உணவு வகைகளை மட்டுமே தயார் செய்ய வேண்டும்.
வார இறுதி நாட்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி சில வேலைகளை முன்னேற்பாடாக செய்து கொள்ளலாம். பூண்டு தோலுரித்து வைக்கலாம். இஞ்சி – பூண்டு விழுது தயாரிக்கலாம். புளியை ஊறவைத்து, வடிகட்டி வைக்கலாம். இவற்றை குளிர் சாதன பெட்டியில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அந்த வாரம் முழுவதும் பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு வேலைக்கும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்துக்குள் அதை முடிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் நிறைய வேலைகளைச் சுலபமாகச் செய்ய முடியும்.
மேற்கண்ட வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம், ஒரு நாளில் நீண்ட நேரம் சமையல் அறையிலேயே கழிக்காமல் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். அந்த நேரத்தில் புத்தகம் படிப்பது, திறன்களை வளர்த்துக்கொள்வது போன்ற பயனுள்ள வகையில் செலவழிக்கலாம்.
Courtesy: MalaiMalar