காலை வேளையில் எளிமையான காலை உணவை செய்ய நினைத்தால், தேங்காய் அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள். இந்த ரெசிபியானது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும் வேலைக்கு செல்வோருக்கு இந்த ரெசிபி காலையில் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
சரி, இப்போது அந்த தேங்காய் அவல் உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Coconut Aval Upma
தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் – 1 கப்
சட்னிக்கு…
தேங்காய் – 1/2 கப்
வரமிளகாய் – 3-4
பூண்டு – 2 பற்கள்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1/4 கப்
செய்முறை:
முதலில் சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் அவலைப் போட்டு, அதில் தண்ணீர் தெளித்து கலந்து, 5 நிமிடம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் அவலைப் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.
இறுதியில் அதில் அவலை சேர்த்து தேவையான அளவு உப்பு தூவி 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், தேங்காய் அவல் உப்புமா ரெடி!!!