குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல. குறிப்பாக 3-4 வயதிற்கு மேலான குழந்தைகளை வளர்ப்பது என்பது சலாவான ஒன்று. இன்றைய ஃபாஸ்ட் புட் உலகில் எங்கும் ஆரோக்கியமற்ற உணவுகள் கிடைப்பதால், வளரும் குழந்தைகளுக்கு ஜங்க் உணவுகளின் மீது அலாதியான விருப்பம் ஏற்படுகிறது.
அந்த ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொண்டு, பல குழந்தைகள் மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படுகின்றனர். இந்த மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைகளுக்கு வராமல் இருக்க, ஜங்க் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதைத் தவிர்ப்பதோடு, ஒருசில இயற்கை உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும்.
கீழே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இருக்க கொடுக்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
தண்ணீர்
தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அதிலும் வளரும் குழந்தைகளுக்கு தினமும் குறைந்தது 1 லிட்டர் தண்ணீர் கொடுத்து வந்தால், அவர்களின் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
வாழைப்பழம்
உங்கள் குழந்தைக்கு தினமும் வாழைப்பழத்தைக் கொடுத்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.
ஆப்பிள்
ஆப்பிளிலும் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளதால், தினமும் உங்கள் குழந்தைக்கு ஒரு ஆப்பிளைக் கொடுத்து வர, உடலின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் ஏற்படுவதும் தடுக்கப்படும்.
ஆலிவ் ஆயில்
உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் தீவிரமாக இருந்தால், அப்போது அவர்களுக்கு ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயிலைக் கொடுங்கள். இதனால் மலமிளகி, உடனே மலச்சிக்கல் விலகும்.
கற்றாழை
மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைக்கு தீவிரமாக இருப்பின், ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் கலந்து, குழந்தைக்கு கொடுக்க, அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை உடனே சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.
தயிர்
தயிர் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதற்கு தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாவான புரோபயோடிக்ஸ் தான். எனவே உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தயிரை தினமும் அவர்களது உணவில் சேர்த்து வாருங்கள்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது ஆரஞ்சு ஜூஸைக் கொடுத்து வாருங்கள். இதனால் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையடையும்.