மருத்துவ குறிப்பு

மாமியார் vs மருமகள்: உளவியல் சொல்லும் தீர்வு என்ன ?

மாமியார் – மருமகள் என்றாலே எலியும் பூனையும்தான் என்பது காலங்காலமாக நிலவி வரும் கருத்தாக இருக்கிறது. மாமியார் மருமகளுக்கு ஒத்துப்போகாது என்ற எண்ணம் காரணமாகவே பலர் இன்றும் கூட்டுக்குடும்பங்களை விரும்புவதில்லை. ‘இப்படியே போயிட்டிருந்தா அதுக்கு முடிவே இல்லையா’ என்று வடிவேல் சொல்வதுபோல மாமியார் மருமகள் உறவில் இருக்கும் சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் பற்றி உளவியல் சொல்வது என்ன? மனநல மருத்துவர் கீர்த்திபாயிடம் பேசுவோம்…”குடும்பம் என்றால் கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்றே இன்றைய தலைமுறையினர் வரையறுக்கின்றனர். கணவரின் பெற்றோர் குடும்பத்தில் இருப்பது என்பது பெரிய விஷயமாகவும் அரிதான விஷயமாகவும்
ஆகிவிட்டது.

கணவருக்கு தாய், தந்தை இருவரும் இருந்தால் அவர்கள் இருவரும் தம்பதியராக தனியாக வாழ்வதில் எந்த பிரச்னையும் இருக்காது. அதேநேரத்தில் கணவருக்கு தந்தை இல்லாமல் தாய் மட்டும் இருக்கும் பட்சத்திலோ அல்லது தாய் இல்லாமல் தந்தை மட்டும் இருக்கும் பட்சத்திலோ, தன் அம்மாவை/அப்பாவை தன்னுடன் வைத்துக் கொள்ளவே ஒரு மகன் நினைப்பார். இதை பெரும்பாலான பெண் மனோபாவம்(மருமகள்) ஏற்றுக்கொள்வது இல்லை. இங்குதான் பிரச்னை தோன்றுகிறது. காரணம், மனைவியும் பெரிய கூட்டுக்குடும்பத்தில் இருந்தும் வந்திருக்க மாட்டார். அப்பா, அம்மா, மகள் என்றே வளர்ந்திருப்பார். அவரால் இந்தக் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கணவரின் குடும்பத்தை தன் குடும்பமாக பார்க்கவும் தவறி விடுகின்றார்.

அவர்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது கணவன், மனைவி குழந்தைகள் மட்டுமே என்ற மனநிலை மட்டுமே சிக்கலுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. மாமியார் உடல் நலம் குன்றியவராகவோ, மிக வயதானவராகவோ இருந்தால் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களையும் சேர்த்து பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை மருமகளுக்கு ஏற்படுகிறது. இதுவும் சிக்கலுக்கு காரணமாக இருக்கிறது. மருமகள் வேலைக்கு செல்பவராக இருக்கும் பட்சத்தில் கூடுதல் சிரமமாகிவிடும். மாமியார் நல்ல உடல் நிலையில் இருந்தாலும் பொசஸிவ்னெஸ், ஈகோ என்று வேறு விதமான பிரச்னைகளும் தோன்றும். இந்த மனோநிலையில் இருந்து சிலர் விதிவிலக்காக, திருமணமான புதிதில் பிரச்னைகள் இருந்தாலும் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பட்சத்திலும், தான் இல்லாத நேரத்தில் வீட்டை கவனித்துக் கொள்வதற்கு பெரியவர்கள் உதவுகிறார்கள் என்பதாலும் சில பிரச்னைகள் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் அவற்றை தவிர்த்து சுமுகமாக வாழவும் பழகுகின்றனர்.

தான் எதிர்பார்த்ததுபோல் மாமியார் அல்லது மருமகள் அமையவில்லை என்றாலும் பிரச்னை உருவாகிவிடுகிறது. எதிர்பார்ப்புகள் கொடுக்கும் ஏமாற்றத்தினாலும் அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இதை சரியாக கையாள தெரியாத கணவன்மார்கள் இடையில் சிக்கிக் கொள்கின்றனர். உடைகள் விஷயத்திலும் பிரச்னைகள் தோன்றுவதுண்டு. மாமியாரைப் பொறுத்தவரை அவர் கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்தவராக இருந்திருப்பார். மகனுக்கு பிரச்னை இல்லை என்றாலும் மருமகள் சேலை, சுடிதார் தவிர மாடர்னாக ஜீன்ஸ், டி.ஷர்ட் அணிவது அவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இதனால் தான் வாழ்ந்த கலாசாரத்துக்குள் அவரை கட்டுக்குள் கொண்டு வர நினைப்பார். அவருக்கு இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கைமுறை ஒத்துப்போகாமல் இருக்கும். அவரைப் பொறுத்தவரை மருமகள் என்பவர் வீட்டு வேலையை கவனித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பவராக இருக்கலாம்.

இதேபோல் கணவரை பேர் சொல்லி அழைப்பது, அவருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவது, காரில் கணவருடன் முன்சீட்டில் அமர்வது போன்ற சாதாரண விஷயங்களையும் பல மாமியார்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. குறிப்பாக, சமையலறையையும், தன் மகனுக்கு சாப்பாடு பரிமாறுவதையும் தன் உரிமையாக கருதி மாமியார் மருமகளுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கின்றனர். இது நாள் வரை தாய் – மகன் என்று இருந்த நிலைமை மாறி நடுவில் மூன்றாவதாக ஒரு ஆள் நுழையும் போது இயற்கையாகவே அங்கு பொஸசிவ்னஸ் ஏற்படுகிறது. வேலைக்குச் செல்லும் மகன் – மருமகள் இருவரும் மன ஓய்வுக்காக வார இறுதியில் தனியாக வெளியில் செல்வது, ஷாப்பிங் செல்வது போன்றவற்றையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.தனிப்பட்ட சுதந்திரம் என்பது முக்கியமான ஒன்று.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களைத் தவிர மூன்றாவதாக ஒரு நபர் அல்லது மாமியார் தலையிடுவது என்பது மருமகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. அவர் தனது மகனுக்கு பரிந்து பேசுவதால் சிறு கருத்து வேறுபாடு கூட பெரிதாக்கப்படுகிறது. முன்பெல்லாம் குடும்ப ஒற்றுமை மற்றும் விட்டுக்கொடுத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இன்றைய தலைமுறையில் தனக்கான இடம், தனக்குரிய மரியாதை போன்றவற்றை மருமகள் தரப்பில் எதிர்பார்க்கின்றனர். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைபார்க்கும் அவர்கள் அங்கு கிடைக்கும் மரியாதையை குடும்பத்திலும் எதிர்பார்க்கின்றனர். எனவே, குடும்பத்தில் மாமியார் மருமகளுக்கிடையில் யார் முக்கியமானவர் என்ற போட்டி நிலவுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட மருமகள் இருக்கும் போது அங்கே பெரியவள், சிறியவள் என்ற வேறுபாடும் நிலவுகிறது. விட்டுக்கொடுத்தல் என்பது இல்லாமல்
போகிறது.”

இதற்கு என்னதான் தீர்வு?

”மாமியார் – மருமகள் பிரச்னை அனைத்தும் சொத்து பிரச்னையாலோ, உறவுக்காரர்களாலோ வருவதில்லை. சிறு சிறு விஷயங்களால்தான் அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. பொதுவாகவே நம் நாட்டில் மாமியார் என்பவர் மருமகளுக்கு எதிரியாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மருமகள் என்பவரும் மகனை தாயிடமிருந்து பிரித்து விடுபவர் என்ற கருத்தும் நிலவுகிறது. இது பிரச்னைக்கான அடிப்படை காரணம். எனவே, இருவரும் விட்டுக்கொடுப்பது என்பது அவசியமானது. புதிதாக ஒரு நபர் தன் குடும்பத்திற்குள் வரும்போது அவரை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது அவசியம். இது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் மட்டுமல்லாமல் காதல் திருமணத்திலும் தேவை.

இந்தக் காலத் தலைமுறையினர் திருமணத்துக்கு முன்பாகவே குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான உளவியல் ரீதியான அறிவுரைகளை மனநல மருத்துவரிடம் சென்று பெற்றுக் கொள்கின்றனர். திருமணத்துக்கு முன்பு பெண் மகளாக, ராணியாக அவரது குடும்பத்தில் நடத்தப்பட்டிருப்பார். திருமணத்துக்குப் பின்பும் அதே நிலை தொடராது. கணவர் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்பவளாகவும், வீட்டைப் பராமரிப்பவராகவும் இருக்க வேண்டியதாகிறது. இந்த நிலையை ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் தேவைப்படுகிறது. இதற்கு Pre marital counselling தரப்படுகிறது. தனது மகளுக்கு திருமண வாழ்க்கையை புரிய வைப்பதற்காகவும், அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வதற்காகவும் கவுன்சிலிங் தேவைப்படுவதை அறிந்து பெண்களின் பெற்றோரே இந்த முறையை அணுகுகின்றனர்.

கணவர் அல்லது மகன் என்பவர் தனக்கு மட்டுமே உண்டான ஒரு பொருளாக கருதப்படாமல் அவருக்குண்டான தந்தை, நண்பன், சகோதரன் போன்ற வடிவங்கள் இருப்பதை மாமியார் மருமகள் இருவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் அமைதி நிலவும். மகன் மற்றும் அவனது திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில தியாகங்களை இந்த தலைமுறை மாமியார்கள் செய்வதையும் மறுப்பதற்கில்லை. இதனால் குடும்பத்திலும் மற்றும் மகனுக்கும் அமைதியான வாழ்க்கை நிலவுகிறது.

குடும்பத்தில் எந்தவொரு முடிவு எடுக்கப்பட்டாலும் மாமியார் தன்னுடைய அல்லது மகன் நலன் சார்ந்த அளவிலே முடிவுகள் எடுக்காமல் மருமகளின் விருப்பத்திற்கேற்றவாறும் முடிவுகள் எடுப்பது நல்லது. அதேபோல் மருமகளும் குடும்பத்தில் எந்தவொரு பிரச்னை என்றாலும் முதலில் தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்துகின்றனர். அவர்கள் தன் மகளுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கற்பிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் வேறு விதமாக வீட்டை விட்டு வந்துவிடு, தனிக்குடும்பம் செல்லுமாறு மகளுக்கு அறிவுரை வழங்கினால் குடும்பத்தில் விரிசல் ஏற்படும். குடும்பத்தில் எந்த மனக்கசப்பு என்றாலும் இருவரும் அமர்ந்து பேசுவதே இதற்கு தீர்வு!”ld461305277

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button