மாதவிடாய் நாட்களில் உடற்பயிற்சி செய்யலாமா? எந்த மாதிரியான பயிற்சி களை தவிர்க்க வேண்டும்?
ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் புவனேஸ்வரி…பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும்.
உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.மாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம். குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள் இந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
உடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலை கீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக் கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும். மாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு.
அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். அதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.