நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம் பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன் மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகப்பூசி காய்ந்ததும் கழுவவும்.
இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால் கழுத்து சுருக்கம் நீங்கி சங்கு போல மின்னும்! தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது அரை டீஸ்பூன் மாம்பழ சதை அரை டீஸ்பூன் நல்லெண்ணை கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய் தோலின் பளபளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாகும்.
மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து அதை ஐஸ் டிரேயில் இட்டு ப்ரீஸரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி உதட்டின் மேல் தடவுங்கள். ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ப்ரீஸரில் வைக்கவும். புருவங்களில் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயை ஒரு துளி தடவி இந்த ஐஸ்கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள்.
தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால் புருவத்திலும் இமையிலும் முடி வளரும். நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டு சிட்டிகை பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன் வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க் மாதிரி தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழு கொழு வென்று தோற்றம் அளிக்கும். வாரம் இருமுறை இதை செய்ய வேண்டும்.