முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

ஒரு மாலுக்கு சென்றாலும் சரி அல்லது ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றாலும் சரி… அழகு சாதனப் பொருட்கள் இருக்கும் பகுதியை விட்டு நம் பெண்கள் அவ்வளவு விரைவாக நகர்வதே இல்லை. எத்தனை வகையான பொருட்கள், எந்த கம்பெனி தயாரிப்புகள், எவ்வளவு விலை என்று அத்தனையையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

முக்கியமாக, தங்கள் மேனியையும், சருமத்தையும் பராமரிப்பதற்குத் தேவையான பொருட்களைப் பெண்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அது தொடர்பாக மார்க்கெட்டுக்குப் புதிது புதிதாக ஏதாவது தயாரிப்புகள் வந்திருந்தாலும், அவற்றை வாங்கி ஒரு கை பார்த்து விடுவார்கள். செலவைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை.

இவ்வளவு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்திய போதிலும், சருமம் சரியாக வெளுக்கவில்லையே என்ற நிலை வரும் போது தான் செலவைப் பற்றிய கவலையும் அவர்களுக்கு அதிகரிக்கும். எதற்கு இத்தனை சிரமம்? சருமத்தை எப்போதும் வெண்மையாக வைத்துக் கொள்ள சில இயற்கையான வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதும்.

அத்தகைய வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தாலே உங்கள் சருமம் மின்னலடிக்கும் வெண்மையாக மிளிரும். வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இவற்றை நாம் செய்யலாம். இதனால் கரும்புள்ளிகள் மறையும்; பருக்கள் ஓடிப் போகும்; சருமம் இறுகி மிருதுவாகும். அந்த சூப்பரான 10 வழிகளை இப்போது நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஆரஞ்சு தோல், தயிர்

உலர்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் தயிர் ஆகியவை நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆரஞ்சு தோலை பொடி செய்து, சூரிய ஒளியில் நன்றாக உலர வைத்து, காற்றுப்புகாத சிறு பெட்டியில் அடைத்து வையுங்கள். பின் ஒரு ஸ்பூன் ஆரஞ்சுத் தோலுடன் தயிரைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை காய விட்டு, பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடியாக ஒளிரும்.

தேங்காய் எண்ணெய்

தினமும் உங்கள் முகத்திலும் சருமத்திலும் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தாலே போதும். விரைவில் இது உங்கள் சருமத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

பச்சை பயறு மாவு – மஞ்சள் மாஸ்க்

இது ஒரு எளிய நிவாரணம் தான். 2 ஸ்பூன் பச்சை பயறு மாவுடன், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு அல்லது தயிரைக் கலந்து, முகத்தில் மாஸ்க் செய்யவும். சுமார் 25 நிமிடங்கள் கழித்து, மாஸ்க்கைக் களைந்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பால், தேன், எலுமிச்சை சாறு

இது மற்றொரு எளிய வழி. ஒரு ஸ்பூன் பால், தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து கொள்ளவும். பின், அந்தப் பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, சாதாரண நீரில் கழுவினாலே போதும். வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும். சருமமும் மிருதுவாகும்.

ஓட்ஸ், தயிர், தக்காளி மாஸ்க்

ஒரு ஸ்பூன் ஓட்ஸ் உடன் தேவையான அளவு தக்காளி ஜூஸையும், தயிரையும் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை முகத்திலும் கழுத்திலும் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை கழித்து சுத்தமான நீரால் கழுவவும். மாஸ்க்கை ஸ்க்ரப் செய்து துடைக்கும் போது தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை வெள்ளரி மாஸ்க்

இது கோடைக் காலத்திற்கு மிகவும் ஏற்றது. சருமத்தை எலுமிச்சை ப்ளீச் செய்யும்; அதே சமயம் வெள்ளரி குளுமை தரும். எலுமிச்சைச் சாற்றையும் வெள்ளரி சாற்றையும் தலா ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து கொள்ளவும். அதை முகத்தில் நன்றாக மாஸ்க் செய்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும். பின், சாதாரண நீரில் கழுவினால் முகம் பளிச்சிடும்.

தேன் மற்றும் பாதாம்

சருமத்தை ஒளிரச் செய்வதில் தேனுக்கும் பாதாமிற்கும் மிக முக்கியப் பங்கு உள்ளது. ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை சருமத்தில் தடவி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், சூரிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சருமம் பளபளப்பாக மாறும்.

தக்காளி, பச்சை பயறு மாவு மாஸ்க்

2 ஸ்பூன் பச்சை பயறு மாவுடன் 3 ஸ்பூன் தக்காளிச் சாற்றைக் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகமும் மேனியும் பளிச்சிடும்.

எலுமிச்சை தேன் மாஸ்க்

இவை இரண்டுமே நமக்கு எளிதாகக் கிடைப்பவை தான். ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காகத் தடவி, 20 நிமிடங்கள் வரை உலர வைத்து, பின் சாதாரண நீரில் கழுவினால், முகம் பளபளப்பாகும். சருமமும் மிருதுவாகும்.

கொத்தமல்லி தக்காளி மாஸ்க்

2 ஸ்பூன் தக்காளிச் சாற்றுடன் 2 ஸ்பூன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் அவற்றுடன் எலுமிச்சைச் சாற்றையும் சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சருமத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவினால் எண்ணெய் பசை மறைந்து, சருமம் பளபளக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button