பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பாலில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்களானது ஒவ்வொருவருக்குமே மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு பாலை அதிகம் கொடுத்தால், அவர்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். மேலும் எவ்வளவு தான் உடல் பருமனுடன் இருந்தாலும், அத்தகையவர்களும் தினமும் குறைந்தது 1 டம்ளர் பாலையாவது குடிக்க வேண்டும்.
சரி அதையெல்லாம் விடுங்கள். கர்ப்ப காலத்தில் பெண்கள் பாலை அதிகம் குடிப்பதால், அது கர்ப்பிணிகளுக்கு நன்மைகளைக் கொடுப்பது மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை வழங்கும். ஏனெனில் இருப்பதிலேயே பாலில் தான் கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் அதிக அளவில் பால் குடிக்கும் கர்ப்பிணிகளை விட, 1 கப்புக்கும் குறைவாக பால் குடித்த கர்ப்பிணிகளுக்கு குழந்தை மிகவும் சிறியதாக எடை குறைவாக பிறந்துள்ளதாக சொல்கிறது. ஆகவே குழந்தை நன்கு அழகாக, சற்று குண்டாக பிறக்க வேண்டுமானால், தினமும் குறைந்தது 3 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
அதிலும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது சிறந்தது. சரி, இப்போது கர்ப்பிணிகள் பால் அதிகம் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
கால்சியம்
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால்சியத்தின் அளவு அதிகம் தேவைப்படும். அத்தகைய கால்சியத்தை பெண்கள் அதிக அளவில் பால் குடித்து சேகரிக்க வேண்டும். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு கால்சியம் தேவைப்படுவதால், தாயில் உடலில் உள்ள கால்சியம் உறிஞ்சப்படுவதால், கர்ப்பிணிகள் தினமும் 3 கப் பாலாவது பருக வேண்டும்.
புரோட்டீன்
கர்ப்பிணிகளின் உடலில் புரோட்டீன் குறைவாக இருந்தால், அது குழந்தையின் எடையை குறைத்துவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் புரோட்டீன் உணவுகளை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதற்கு கொழுப்பு குறைவான பாலை தினமும் அதிக அளவில் பருகுங்கள்.
வைட்டமின் டி
பாலில் கால்சியம், புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் வளமாக உள்ளது. மேலும் வைட்டமின் டி இருந்தால் தான், கால்சியம் சத்தானது உடலால் உறிஞ்சப்படும். இப்போது பாலின் மகத்துவம் புரிகிறதா?
ஆன்டாசிட்
பால் ஒரு சிறப்பான ஆன்டாசிட். பொதுவாக கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய நெஞ்செரிச்சலை தடுக்க குளிர்ந்த பாலை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நீர்ச்சத்தை அதிகரிக்கும்
பால் குடிப்பதால் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆகவே கர்ப்ப காலத்தில் உடல் வறட்சியடையாமல் இருக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும் பால் குடிப்பதும் அவசியம்.