தற்போது பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. எப்போது ஒருவரது உடலில் ஆரோக்கியமற்ற அளவிற்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
ஆனால் நம்மில் பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருப்பது தெரிவதில்லை.
குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதற்கான அறிகுறிகளை வழக்கமாக நாம் கவனிக்கமாட்டோம்.
பெரும்பாலும் இதன் அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளாகத் தான் இருக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பரிசோனையின் மூலமே அறிய முடியும்.
உயர் இரத்த அழுத்தம் உடலின் எந்த உறுப்புக்களைப் பாதித்து, எம்மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
மாரடைப்பு
உயர் இரத்த அழுத்தம் தமனிகளை சேதப்படுத்தி, அடைப்பை உண்டாக்குவதோடு, இதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இதன் விளைவாக மாரடைப்பை உண்டாக்கும்.
பக்கவாதம்
உயர் இரத்த அழுத்தம் தீவிரமானால், அது மூளையில் உள்ள இரத்த நாளங்களில் எளிதில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதத்தை உண்டாக்கும். சில சமயங்களில் அந்த அடைப்பினால் மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.
இதய செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தத்தினால் அதிகரிக்கும் பணிச்சுமையால் இதயம் பெரிதாகி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கு இரத்தத்தை வழங்கத் தவறிவிடும். இதன் விளைவாக ஏற்படுவது தான் இதய செயலிழப்பு.
சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிக் குழாய்களை சேதப்படுத்துவதோடு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் செயல்திறனில் இடையூறை ஏற்படுத்தும்.
ஆஞ்சினா
உயர் இரத்த அழுத்தம் பல காலமாக நீடித்திருந்தால், அது இதய நோய் அல்லது மைக்ரோவாஸ்குலர் நோய்க்கு வழிவகுக்கும். இதன் பொதுவான அறிகுறி ஆஞ்சினா அல்லது மார்பு வலி ஆகும்.
பாலியல் செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது தீவிரமாகி, அதன் விளைவாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டையும், பெண்களுக்கு பாலுணர்ச்சி குறைபாட்டையும் உண்டாக்கும்.