உலகிலேயே மிகப் பெரிய கடினமான வேலை எதுவென்று கேட்டால், குழந்தை பராமரிப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பிறந்த குழந்தை எதற்காக அழுகிறது, என்ன கொடுத்தால் அழுகையை நிறுத்தும், எங்கேனும் வலிக்கிறதா என பல்வேறு கேள்விகள் மனதிற்குள் எழத்தான் செய்யும். அதுவும் இதுப்போன்ற பிரச்சனையை புதிய பெற்றோர்கள் சந்தித்தே ஆவர்.
பெற்றோர், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பார்க்கும் அனைவரும் அறிவுரை சொல்லும் விஷயம் என்றால் குழந்தை வளர்ப்பை பற்றி தான். பாட்டி வைத்தியம், கை வைத்தியம் என பல சிறுசிறு வீட்டு வைத்தியங்கள் இன்றைய காலத்திலும் பின்பற்ற தான் செய்கின்றனர்.
ஆனால், எவற்றையெல்லாம் பின்பற்றலாம், எதையெல்லாம் தவறிக்கூட செய்துவிடக் கூடாது என்று உள்ளது அல்லவா? அதை விவரிக்க தான் இந்த கட்டுரை. இங்கு குழந்தை வளர்ப்பில் எவற்றையெல்லாம் செய்யலாம், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் பார்க்கலாம்…
செய்ய வேண்டியவை:
முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் அவசியம்
தாய் மற்றும் சேய்க்கு இடையேயான பிணைப்பிற்கு அடிப்படையே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். பிரசவத்திற்கு பின்பு, முதன்முதலில் சுரக்கத் தொடங்கும் சீம்பாலில் தான், குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கக் கூடும். குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்காவது தாய்ப்பால் கொடுத்தே ஆக வேண்டும். இது தான் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், ஊட்டச்சத்து தேவைக்கும் முக்கிய மூலமாகும். அதுமட்டுமல்லாது, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்களுக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படுவதும் தடுக்கப்படும். குறிப்பாக தாய்ப்பால் கொடுத்து வரும் தருணங்களில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்று கூறி வீட்டில் தயாரித்த எந்தவொரு மருந்தையும் குழந்தைக்கு கொடுக்கவே கூடாது.
சுகாதாரம் மிகவும் முக்கியம்
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவற்றில் நோய் தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். எனவே, அடிப்படை சுகாதாரத்தை பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. குழந்தையை பார்க்க வருபவர்கள் நிச்சயம் தொட்டு தூக்க தான் செய்வார்கள், அப்படிப்பட்டவர்களை கைகளை சுத்தம் செய்து விட்டு தூக்கும் படி அறிவுறுத்த வேண்டும். இதில் தவறாக நினைத்துக் கொள்ள ஒன்றுமில்லை. அனைவரும் செய்ய வேண்டிய ஒரு அடிப்படை விஷயம் தான் இது. சுத்தமான கைகளுடன் குழந்தைகளை கையாளுவதே சாலச் சிறந்தது. குழந்தைகள் இருக்கும் அறையில் எந்தவொரு பூச்சியோ அல்லது கொசு தொல்லையோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தொற்றுகள் பரவ கொசுக்கள் முக்கிய காரணமாக உள்ளன. கொசுத் தொல்லையில் இருந்து நீங்க குழந்தைக்கு க்ரீம் அல்லது வேறு எதாவது பயன்படுத்துவதாக இருந்தால் முதலில் குழந்தைகள் நல மருத்துவரின் அனுமதியை பெற்றுவிட்டு பின்னர் பயன்படுத்தவும். ஏனென்றால், பயன்படுத்தும் க்ரீம் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏதேனும் நேரக்கூடும்.
தொப்புள் பராமரிப்பு
குழந்தை பிறந்து 10 நாட்களில் தொப்புள் கொடி உதிர்ந்துவிடும். அது உதிர்ந்த பின்னர், தொப்புளில் காயம் ஏற்பட்டிருக்கும். எனவே, முதல் 4 வாரங்களுக்கு தொப்புளை கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எப்படியெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை, தொப்புளில் இரத்தக் கசிவோ அல்லது துர்நாற்றமோ அல்லது சீழ் வடிதலோ ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.
குழந்தையின் உறக்கம்
குழந்தை நாளொன்றிற்கு 16 முதல் 18 மணி நேரத்திற்கு தூங்குவது என்பது இயல்பு தான். நாள் முழுவதும் தூங்கி கொண்டே இருக்கிறது என ஆச்சரிப்படவோ, கவலைக் கொள்ளவோ தேவையில்லை. ஒவ்வொரு 2 முதல் 4 மணி நேரத்திற்கும் குழந்தைகள் தூங்கத் தான் செய்வார்கள். அதற்கென்று இரவு முழுவதும் தூங்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துவிடக் கூடாது. ஏனென்றால், சிறிய செரிமான அமைப்பு என்பதால் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை குழந்தைகள் பாலூட்ட வேண்டியது அவசியம். கட்டாயம் 4 மணி நேரத்திற்கு மிகாமல் பால் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கு பகல் மற்றும் இரவிற்கு வித்தியாசம் ஒன்றும் தெரியாது. எனவே, அவர்கள் பகலில் உறங்கி, இரவில் விழித்திருப்பது சாதாரணம் தான். அதுபோன்ற தருணங்களில், இரவில் சப்தம் எதுவும் இல்லாமல் அமைதியான சூழ்நிலையை உருவாக்கினால், இரவில் தூங்க பழகிவிடுவர். மேலும், பகல் நேரங்களில் குழந்தையுடன் விளையாடி, தூங்கும் நேரத்தை குறைத்திடுங்கள்.
மென்மையாக கையாளுவது
குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி. குழந்தையை தூக்கி விளையாடுகிறேன் எனும் பேரில் குழந்தையை குலுக்குவது, தூக்கி போட்டு விளையாடுவது போன்ற விஷயங்களை தவிர்த்தே ஆக வேண்டும். இதுபோன்ற, செயல்களால் குழந்தையின் மூளை பாதிக்கக் கூடும். குழந்தையை தூங்க வைப்பதற்காக குலுக்குவது கூட தவறு தான். குழந்தையை எழுப்பும் போது கூட மென்மையாக தொட்டு, கன்னங்களை தடவி எழுப்ப பழகிக் கொள்ளுங்கள். பிறந்த குழந்தை, முரட்டுத்தனமான விளையாட்டிற்கெல்லாம் தயாராக இருக்க மாட்டார்கள். இதுபோன்ற விளையாட்டுகள் அவர்களை காயப்படுத்தக் கூடும்.
செய்யக் கூடாதவை:
பதற்றம் வேண்டாம்
புதிய பெற்றோர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை தான் இந்த பதற்றம். குழந்தை மருத்துவருடன் எப்போதும் தொடர்பில் இருப்பது நல்லது. குழந்தை என்று இருந்தால் துப்பும், வாந்தி எடுக்கும், விக்கல் எடுக்கும், அடிக்கடி மலம் கழிக்கும். இது போன்ற விஷயங்களுக்கு கவலை கொள்ள தேவையில்லை. குழந்தை மருத்துவரை ஒருமுறை சந்தித்து உங்கள் சந்தேகங்களை எல்லாம் கேட்டு போக்கிக் கொள்ளுங்கள். மேலும், குறிப்பிட்ட இடைவெளியில் குழந்தையின் உடலை பரிசோதித்து கொள்வதும் சிறந்தது. குழந்தைகளுக்கு தங்களை சுற்றியுள்ள சூழ்நிலையை ஈர்த்துக் கொள்ளும் குணம் உள்ளது. எனவே, குழந்தையை சுற்றி அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, ஆரோக்கிய வளர்ச்சிக்கு வழிவகுத்திடுங்கள்.
அழுகையை நிறுத்த வேண்டாம்
குழந்தை சாதாரணமாக அழுதால் கூட அய்யய்யோ குழந்தை அழுது, என்ன ஆச்சு? என்ற பதற்றம் தான் முதலில் ஏற்படும். குழந்தைக்கு தெரிந்த ஒன்றே ஒன்று அழுவது மட்டும் தான். அதையும் செய்யக்கூடாதென்றால் எப்படி? தாங்கள் சொல்ல விரும்புவதை குழந்தைகள் அழுகை மூலம் தான் தெரியப்படுத்தும். மணிக்கணக்காக குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என்றால் மட்டும் மருத்துவரை அணுகுங்கள். முன்னதாக, ஏதேனும் கடித்துவிட்டதா, சிவந்திருக்கிறதா, காய்ச்சல் அல்லது காயம் ஏற்பட்டுவிட்டதா என்பதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
வாய் பராமரிப்பை தவற வேண்டாம்
பிறந்த குழந்தை தானே, இதற்கு எதற்கு வாய் பராமரிப்பு என்று கேட்க வேண்டாம். பற்கள் இல்லையென்றால், வாய் பராமரிப்பு தேவையற்ற ஒன்றாகிவிடுமா? ஆரோக்கிய வாய் பராமரிப்பிற்கு வயது ஒரு தடையே இல்லை. ஒரு ஈரத் துணியால் குழந்தையின் ஈறுகளை மெதுவாக தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். வாய் சுத்தத்திற்கு, கேவிடீஸ் ஏற்படாமல் இருக்க போதுமான அளவு நீரை குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு வைத்தியத்தை முயற்சிக்க வேண்டாம்
குழந்தையின் ஆரோக்கியம் குறித்து தாத்தா-பாட்டி, உறவினர்கள் அல்லது நண்பர்கள் என யார் கூறிய அறிவுரையாக இருந்தாலும் தவிர்த்திடுங்கள். உங்கள் குழந்தை நல மருத்துவரை முதலில் நம்புங்கள். மருத்துவ அறிவுரையை முறையாக பெறுங்கள். எவற்றிற்கு வீட்டு வைத்தியம் பார்க்கலாமோ, அது தவிர காய்ச்சல், சளி, சொறி, அமைதிப்படுத்த முடியாத அழுகை, வீக்கம் போன்றவற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது. குழந்தையின் ஆரோக்கியத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதே எனது அறிவுரை.