வீட்டில் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசிப்பதே ஒரு பெரிய கஷ்டம். எல்லோருக்கும் பிடித்ததாகவும் இருக்க வேண்டும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட குழம்பை தான் இன்று நாம் செய்யப் போகிறோம். வாங்க இந்த வெந்தயக் குழம்பை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்- 1 கப்
தக்காளி- 1
பூண்டு- 10 பல்
காய்ந்த மிளகாய்- 3
புளி- எலுமிச்சம் பழம் அளவு
வர மல்லி- 1 தேக்கரண்டி
மிளகு- 1/2 தேக்கரண்டி
அரிசி- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/8 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/8 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 2 கொத்து
நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக் குழம்பு செய்ய முதலில் ஃபிரஷாக நாம் ஒரு மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு வானலில் ஒரு தேக்கரண்டி வர மல்லி, 1/2 தேக்கரண்டி மிளகு, 1/2 தேக்கரண்டி அரிசி( எந்த அரிசி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்), 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய் சேர்க்கவும். உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
மிதமான சூட்டில் கருகி விடாதவாறு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு இதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும். வெந்தயக் குழம்பு, வத்தக் குழம்பு, புளிக் குழம்பு இதற்கெல்லாம் எண்ணெய் அதிகமாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.
எண்ணெய் காய்ந்ததும் 1/8 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, பத்தில் இருந்து பன்னிரண்டு வெந்தயம், ஒரு காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, பத்து பல் பூண்டை சேர்த்து வதக்கவும். பிறகு ஒரு கப் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதங்குங்கள். பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சுவை கூடுதலாக இருக்கும்.
வெங்காயம் கொஞ்சம் வதங்கியதும் ஒரு நறுக்கிய தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்றாக வதங்கி வெந்து வர வேண்டும். தக்காளி வெந்த பிறகு 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/8 தேக்கரண்டி பெருங்காயம், நாம் அரைத்து வைத்த மசாலா அனைத்தையும் போட்டு கிளறவும். அடுத்து ஒரு எலுமிச்சை பழம் அளவு புளியை முன்பே ஊற வைத்து அதன் சாற்றை பிழிந்து இப்போது சேர்த்து கொள்ளவும்.
குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குழம்பை கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வந்த பிறகு கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து சூடாக வெள்ளை சாதத்துடன் இந்த குழம்பை பரிமாறவும்.