ஏழைகளின் இறைச்சி என்று கூறப்படும் பயறு வகைகள் உடலை வலுவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் பயறு வகைககள் அசைவ உணவுக்கு இணையாக கூறப்படுகின்றன.
அதிலும் சோயாவில் சுமார் 48% புரதமும், 30% மாவுச்சத்தும் காணப்படுகிறது. சாதாரணமாக சாப்பிடுவதை விட , முளைகட்டிய பயறு வகைகள் உடலுக்கு இருமடங்கு ஆற்றலை வழங்க கூடியவை.
சத்துக்கள்..
உடலுக்கு நிறைய ஊட்டச்சத்துகளை அளிக்க கூடிய முளைகட்டிய பயறு வகைகளை வேக வைத்தோ அல்லது வேக வைக்காமலோ சாப்பிடலாம். முளைகட்டிய பயறு வகைகளில் புரதம் கார்போ ஹைட்ரேட், பீட்டா கரோட்டின் போன்றவை மிகுதியாக உள்ளன. மேலும் வைட்டமின் சி மற்றும் இ சத்துக்களும் நார் சார்த்துக்களும் நிறைந்துள்ளன. அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்டும், நோய்களை எதிர்க்க கூடிய சக்தியும் முளைகட்டிய பயறு வகைகளில் உள்ளது. புரதம், பொட்டாசியம், கலோரி, பாஸ்பரஸ், பாலிக் ஆசிட் அதிக அளவில் இருக்கின்றன. பச்சைப் பயறு மற்றும் தட்டைப்பயறில் புரதச்சத்துக்கள் மிகுதி. எனவே அதை அப்படியே உட்கொள்வதை விட, முளைக்கட்டி சாப்பிடுவதால் நல்ல பலனை பெறலாம்.
எப்படி.?
ஏதாவது ஒரு பயறு வகையை 100 கிராம் அளவு எடுத்து கொண்டு அதனை பாத்திரம் ஒன்றில் வைத்து நீரில் ஊறவிட வேண்டும். சுமார் 10 மணி நேரம் வரை ஊற வைத்த பின்னர், தண்ணீரை வடிகட்ட வேண்டும். தண்ணீரில் நன்றாக ஊறிய பயறை, சுத்தமான காட்டன் துணியில் வைத்து கட்டி விட வேண்டும். பின் 12 மணி நேரம் கழித்து எடுத்து பார்த்தால் பயறு முழுவதுமாக முளை கட்டியிருக்கும். தினமும் ஒரே வகை தானியத்தை முளைகட்டி எடுத்து கொள்வதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் வேறு வேறு தானிய வகைகளே முளைகட்டி சாப்பிட்டால் அது சிறந்த பலனை தரும். பச்சை பயறு , கொண்டை கடலை, கொள்ளு, சோயா, வெந்தயம், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயறு வகைகளை முளைகட்டி சாப்பிடலாம்.
எவ்வளவு அளவு.?
காலை உணவாக பயறு வகைகளை எடுத்து கொள்ள வேண்டும் எனில், 50 முதல் 65 கிராம் வரை சாப்பிடலாம். மதிய உணவு எனில் 70 முதல் 80 கிராம், இரவு உணவு எனில் 70 முதல் 75 கிராம் என்ற அளவில் முளைகட்டிய தானியங்களை உட்கொள்ளலாம். உணவுடன் முளைகட்டிய பயறு வகைகளை சாப்பிடும்போது , பாதியளவு சாப்பாடு பாதியளவு முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். இந்த அளவு குறைந்தால் பாதிப்பு இல்லை. ஆனால் அதிகமாக கூடாது என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
வெறும் வயிற்றில்..?
அதே போல காலையில் வெறும் வயிற்றில் முளைகட்டிய தானியங்களை சாப்பிட கூடாது. தானியங்களை தண்ணீரில் ஊற வைத்து முளைகட்ட செய்வதால் அமிலத்தன்மை அதிகரித்து இருக்கும். காலை எழுந்தவுடன் நம் வயிற்றில் அமில சுரப்பு சற்று அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் முளைகட்டிய தானியத்தை சாப்பிட்டால் வயிற்றுபுண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். பிரச்சனைகளை தவிர்க்க காலை உணவுடன் சேர்த்து முளைகட்டிய பயறு வகைகளை சாப்பிடலாம்.
ஜீரண கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை, சிறுநீரகப் பாதிப்புக் கொண்டவர்கள் சில பயறு வகைகளை குறைவான அளவில் சாப்பிடுது நல்லது. முளைக்கட்டியப் பயறை சாப்பிட்டால் சிலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதை தவிர்க்க முளைகட்டிய பயறை வெந்நீரில் மிதமாக வேக வைத்துச் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்ட பின் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.