குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தையும் படிப்படியாகத் தான் கற்றுக் கொள்ள ஆரம்பிப்பார்கள். பேச்சில் கூட குழந்தைகள் ஒவ்வொன்றாகத் தான் கற்று கொள்வார்கள். சில குழந்தைகள் 3 அல்லது 4 வயது வரைக் கூட சரியாக பேச மாட்டார்கள். ஒவ்வொன்றையும் யோசித்து பேசுவது, பேசும் போது உளறல், திக்கி திக்கி பேசுவது, திருத்தம் இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
ஒரு சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் விளையாடும் போது பள்ளிக் கூடத்திற்கு போய் கற்கும் போது இந்த பிரச்சினைகள் காலப்போக்கில் சரியாகிவிடும். ஆனால் சில குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் இந்த பேச்சு திணறல் பிரச்சனை உண்டாகிறது. இதனால் பாதிப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சக பிள்ளைகளின் கிண்டல், சுய மரியாதை குறைவு போன்ற பிரச்சினைகளை இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கின்றனர்.
இந்த பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றி இங்கே காண்போம்.
காரணங்கள்
குழந்தைகளுக்கு பேச்சுத் திணறல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் ஒரு சில காரணங்களை கூறுகின்றனர்.
வளர்ச்சி திணறல்
இந்த வளர்ச்சி திணறல் 18 மாதங்களில் இருந்து 2 வயது வளரும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. அவர்கள் முதல் முதலாக பேச கற்றுக் கொள்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. அவரும் பேசும் திறன் முழுமையாக வளர்ச்சி அடையாத போது இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர். காலப்போக்கில் இது சரியாகி விடும்.
நரம்பு பிரச்சனை (நியூரோஜெனிக் திணறல்)
இந்த பிரச்சினை மூளைக்கு செல்லும் பேச்சு நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையே சிக்னல் சரியாக செல்லாததால் ஏற்படுகிறது. இதற்கு சிகச்சைகள் இருக்கின்றன. மருத்துவரிடம் உங்கள் குழந்தைகளை காட்டி பேச்சை மேம்படுத்தலாம்.
மரபணு ரீதியாக
உங்க குடும்பத்தில் வேறு யாராவது பேச்சு திணறல் பிரச்சனையை சந்தித்து வந்தால் மரபணு ரீதியாக இந்த பிரச்சினை உங்க குழந்தைக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆபத்து காரணிகள்
இந்த காரணிகள் தென்பட்டால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
குடும்ப வரலாறு
கிட்டத்தட்ட 60 % குழந்தைகள் தங்கள் குடும்ப பின்னணியால் இந்த பிரச்சினைகளை சந்திக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் யாராவது இந்த பேச்சு திணறல் பிரச்சனையை பெற்று இருந்தால் அவர்களும் இதை சந்திக்கின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வயது
ஒரு குழந்தை 3 வயதுக்குள் திக்க ஆரம்பித்தால் அது பேசும் திறன் வளராததை குறிக்கிறது. பிறகு பேசும் திறன் வளர வளர 6 மாதத்தில் சரியாகிவிடும்
பாலினம்
பேச்சு திணறல் பிரச்சனை பொதுவாக ஆண் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகிறது. ஒரு பெண் குழந்தைக்கு 3-4 ஆண் குழந்தைகள் திக்குகின்றன. இதற்கு காரணம் ஆண் குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதில் வேறுபடுவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
சிகிச்சைகள்
பேச்சு தெரபி
இந்த சிகிச்சையின் மூலம் உங்க குழந்தைகள் பேசும் போது ஏற்படும் தடங்கலை குறைக்கலாம். மேலும் அவர்களுடைய சுய மரியாதையும் சமூகத்தில் மேம்படுத்துகிறது. பேச்சு வீதம், சுவாச ஆதரவு மற்றும் குரல்வளை பதற்றம் ஆகியவற்றைக் கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர். இதைத் தவிர உங்க குழந்தைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி பேச்சு சொல்லிக் கொடுங்கள்
மின்னணு சாதனங்கள்
பேச்சு சரளத்தை மேம்படுத்த பல மின்னணு சாதனங்கள் உள்ளன. காது கேளாதவர் பயன்படுத்தும் கருவி போல இதை நீங்கள் உபயோகித்து பேச்சை உணர்ந்து பேச முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதனால் திக்காமல் பேச பயிற்சி எடுக்க முடியும்.
அறிவார்ந்த நடத்தை சிகிச்சை
இது குழந்தைகளின் தடுமாற்றத்தையும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பேச்சு திக்கும் போது ஏற்படும் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் இதன் மூலம் நீங்கள் குறைக்க முடியும்.