பால், தண்ணீர், மூலிகைச் சாறு போன்றவற்றைக் குழந்தைகளுக்கு வழங்குவதற்கு
விதவிதமான வண்ணங்களில் ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட டம்ளர்களையும், கப்களையும் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். பன்னெடுங்காலமாக மக்களிடையே புழக்கத்திலிருந்த பாலாடை என்ற சங்கு இன்று அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக இருக்கும் நிலையில் உள்ளது.
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழில் குறிப்பிடப்படும் பாலாடை என்ற சங்கு, பால் சங்கால் செய்யப்பட்டது. தற்போது வெள்ளி, தங்கம், அலுமினியம் என்ற உலோகங்களிலும் இது செய்யப்படுகிறது. இருப்பினும், பால் சங்கால் செய்யப்பட்ட பாலாடை என்ற சங்கையே மிகச் சிறந்ததாகச் சித்த மருத்துவம் கருதுகிறது.
வளரும் நாடுகளில், 2.5 கிலோ எடைக்குக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளை, எடைக்குறைவு குழந்தைகள் என்பார்கள். இந்தக் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையில் இருப்பதால் இவர்களுக்கு தொற்று நோய்ப் பாதிப்பு எளிதாக ஏற்பட்டு சமயங்களில் இறப்பு ஏற்படக்கூடச் சாத்தியமுண்டு.
எடை குறைந்த குழந்தைகளால், தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க முடியாதது, உறிஞ்சிக் குடித்த பாலை விழுங்க முடியாமல் போவது, தாய்ப்பாலைக் குடித்தாலும் அதிக நேரம் குடித்தல், தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காததால் தினமும் 10 கிராமுக்குக் கீழ் எடை கூடுதல், சுவாச எண்ணிக்கை குறைதல் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பால் புட்டிகளில் பால் குடிப்பதாகும் இந்தக் குழந்தைகளுக்கு இதே சிரமம் இருப்பதால், விழுங்க முடியாத சிக்கல் ஏற்படுகிறது. இந்தச் சிக்கல்கள் நீங்கி எடை குறைந்த குழந்தைகளைக் காப்பாற்ற உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த உபகரணம் தான் ‘பாலாடை என்ற சங்கு.’ தமிழினத்தின் அரிய அறிவியல் கண்டுபிடிப்பு.
அதனால் வண்ணமயமான ப்ளாஸ்டிக் குவளைகளுக்கும், தங்கம், வெள்ளி என்று உங்கள் ஆடம்பரத்தைக் காட்டுவதற்காகவும் இல்லாமல் இவற்றுக்கு பதிலாக பாலாடையின் மூலமாக குழந்தைகளுக்கு பால் புகட்ட துவங்குங்கள்.
தாய்ப்பாலைத் தனியாக எடுத்து எடை குறைந்த குழந்தைகளுக்குப் பாலாடை வழியாகப் புகட்ட வேண்டும். பாலாடை மூலம் பால் வழங்கும் முன் குழந்தை விழிப்புடன் இருத்தல் வேண்டும். பாலாடையின் நீண்ட காம்பு பகுதி குழந்தையின் வாயினுள் இருக்க வேண்டும். இதனால் தாய்ப்பால் சிந்துவது தடுக்கப்படும். குழந்தைகளுக்குப் போதும் என்ற நிலையில் அதன் உதடுகளை மூடிக் கொள்ளும். அதன்பின் அவர்களுக்கு வற்புறுத்திக் கொடுக்கக் கூடாது. தாய்ப்பாலை வழங்கிய பின் பாலாடையைச் சுத்தமான வெந்நீரில் கழுவிப் பாதுகாப்பான இடத்தில் வைத்தல் நல்லது.
தமிழர்களின் பாலாடை, எடை குறைந்த குழந்தைகள் உயிர் வாழ வைக்கும் பெரும்பணியைச் செய்வதால் தான் என்னவோ, உலக சுகாதார நிறுவனம், குழந்தை மருத்துவ நூல்கள், மருத்துவர்கள் ஆகியோர் இதற்கு ‘பாலாடை’ என்று தமிழ் சொல்லாக்கத்தையே பிற மொழிகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். உலகுக்குத் தமிழகம் அளித்த அறிவியல் கொடையே இந்தப் பாலாடை. அதை மீண்டும் பயன்படுத்துவோம், குழந்தைகளின் நலனை மேம்படுத்துவோம்.