ஒருவருக்கு எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வலிமை மிகவும் முக்கியமானது.
எலும்புகள் வலிமையுடனும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், நம்மால் எந்த ஒரு செயலையும் தங்கு தடையின்றி சிறப்பாக செய்ய முடியும். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். ஒருவரது எலும்புகளின் அடர்த்தி குறைந்தாலே, வயதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
எலும்புகளின் அடர்த்தி 20 வயதில் இருந்தே குறைய ஆரம்பிக்கும். எனவே எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வலிமைக்குத் தேவையான கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒருவரது எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
இக்கட்டுரையில் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நினைவில் கொண்டு நடந்தால், எலும்புகளின் தேய்மானத்தைத் தவிர்க்கலாம்.
உடற்பயிற்சி
அன்றாட உடற்பயிற்சி எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை மேம்படுத்த உதவும். அதுவும் உடற்பயிற்சிகளான ஜாக்கிங், வேகமான நடைப்பயிற்சி, பளு தாங்கும் பயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். இல்லினாய்ஸ் பொது சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கைகளில் 30 நிமிடங்கள் ஈடுபடுவது என்பது எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது.
பல வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்கள் எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்துவதில் கணிசமாக பங்களிக்கிறது. எனவே இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் போது, ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். எப்போதும் உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகியே இருங்கள்.
கால்சியம் உணவுகள்
வயது அதிகரிக்க ஆரம்பிக்கும் போது, உட்கொள்ளும் கால்சியத்தின் அளவையும் அதிகரிக்க வேண்டும். அரிசோனா பல்கலைகழகத்தின் படி, கால்சியம் நிறைந்த உணவுகளான பால், யோகர்ட், மீன்கள், சீஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை எலும்புகளை அடர்த்தியை மேம்படுத்த உதவுகின்றன.
வைட்டமின் டி உணவுகள்
எலும்புகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்க வேண்டுமானால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், உப்பு நீரில் வாழும் மீன், பால் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுகளை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்து வாருங்கள்.
சூரிய ஒளியில் உலாவுங்கள்
உடலில் வைட்டமின் டி சத்தை அதிகரிக்க நினைத்தால், சூரிய ஒளியில் சிறிது நேரம் இருங்கள். தினமும் குறைந்தது 10 நிமிடம் சூரிய ஒளி நம் உடலின் மீது படுமாறு இருக்க வேண்டும். இதனால் உடலில் கால்சியத்தை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். ஒருவேளை போதுமான அளவு சூரிய ஒளியில் இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.
சப்ளிமெண்ட்டுகள்
உணவுகளின் மூலம் போதுமான கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் டி சத்து கிடைக்காவிட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் சத்து மாத்திரைகளை அவசியம் உட்கொள்ள வேண்டும். ஒருசில உடல்நல கோளாறுகள் ஒஒரு சில மருத்து பிரச்சனைகைளுக்கு ஒத்துப் போகாது. எனவே அத்தகையவர்கள் மருத்துவரை சந்தித்து, அவரிடம் தெரிவித்து, பின் அவர் கூறுவது போல் நடக்க வேண்டும்.
ஆஸ்டியோபோரோசிஸ் சோதனை அவசியம்
ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய், அதிகப்படியான எலும்பு அடர்த்தி குறைவால் ஏற்படுவதாகும். எலும்பு அடர்த்தி சோதனையை மேற்கொள்வதன் மூலம், எலும்புகளில் உள்ள பிரச்சனையை ப் போக்கலாம்.
மருந்துகள்
ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை இருப்பது பரிசோதனையில் தெரிந்தால், மருத்துவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும். இதனால் உங்கள் மருத்துவர் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார். இதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம்.
ஹார்மோன் அளவுகளைப் பரிசோதிக்கவும்
மெனோபாஸை நெருங்கும் பெண்கள் ஹார்மோன் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டினாலும், எலும்புகளின் அடர்த்தி குறைய வாய்ப்புள்ளது.
கார்போனேட்டட் பானங்கள் மற்றும் மதுவைத் தவிர்க்கவும்
கார்போனேட்டட் பானங்கள், மது மற்றும் கார்போனேட்டட் நீரைக் குடிப்பதால், உணவுக்குழாய் எரிச்சலுக்குட்பட்டு, செரிமானத்தை ஆற்றுவதற்கு கால்சியத்தைப் பயன்படுத்தும். இதன் விளைவாக உங்கள் உடல் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, எலும்புகளின் அடர்த்தியைக் குறைக்கும்.