மனிதன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதற்கு தூக்கம் அத்தியாவசியத் தேவை என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
தேவையான அளவு தூக்கம் இல்லாமல் போனால் பலவிதமான நோய்கள் நம்மைத் தாக்கும். சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்றவை தூக்கமின்மையால் ஏற்படக்கூடும். இப்படிப்பட்ட உடல் உபாதைகளைத் தவிர்க்க போதிய அளவு தூக்கம் மிக மிக அவசியம்.
தற்போது அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகர விஞ்ஞானக் கழகம் ஒன்றில் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன்படி நல்ல தூக்கம் நல்ல அறிவைக் கொடுக்கும். அதாவது நன்றாகக் கல்வி கற்பதற்கும் படித்ததை நன்கு நினைவில் வைப்பதற்கும் தூக்கம் மிகவும் அவசியம் என்று சொல்கிறது இந்தக் கழகம். வெகுநாட்கள் இதுபற்றி ஆராய்ச்சி செய்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆராய்ச்சி செய்த போது பகல் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக பல்வேறு வகையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை விட பகலிலும் தேவையான அளவு தூங்கியும் மற்ற உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
இனிமேல், “பகலில் என்னடா/என்னடி தூக்கம் வேண்டிக் கிடக்குது. எந்திருச்சு படி…’ என்று அம்மாவோ அப்பாவோ அல்லது வகுப்பறையில் ஆசிரியரோ திட்டினால் கவலைப் பட வேண்டாம் என்று நினைத்து விடாதீர்கள். பகலில் தேவையான அளவுதான் தூங்க வேண்டும் என்பதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயருங்கள்.