எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அந்த சிரசு நன்றாக தோற்றமளிக்க பற்களே பிரதானம் என்றால் அது மிகையில்லை.
பொதுவாக பெண்கள் எல்லோருமே , தான் அழகாகத் தெரிய வேண்டுமென்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அழகாகத் தோன்றுவதோடு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியமல்லவா? முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மற்ற அவயங்களுக்கு கொடுக்கும் பராமரிப்பினை பற்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார், பாலாஜி பல் மருத்துவ மனை மற்றும் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் டாக்டர் நளினி அஸ்வத்:
“பற்களில் வரக்கூடிய பற்சொத்தை, ஈறு நோய் , நிலை மாறிய பற்கள், நிறம் மாறிய பற்கள், பல் ப்ளூரோசிஸ், தாடை மூட்டு எலும்பு நோய் , வாய்ப்புண் , பல் தாடை முறிவு, மற்றும் வாய் புற்று நோய் என பல வகைப்படுத்தலாம். இவைகளில் பற்சொத்தை, மற்றும் ஈறு நோயானது உடலில் , தோல், மூட்டு, இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் நோயை உண்டாக்குவதோடு கர்ப்பிணிகளுக்கு முன் கூட்டியே பிரசவம் மற்றும் எடை குறைவான சிசுக்களைப் பிரசவிக்கும் சூழலையும் உண்டாக்கும்.
கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பற்களை , தாயாகப் போகிறவர்கள் கருவறையில் இருக்கும் சிசுவின் நலம் கருதி , வாய் மற்றும் பல் சுகாதாரத்தினை காப்பது மிகவும் அவசியம்.
ஒரு பெண் கருவுற்றிருக்கும் பொழுது அவள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களினால், “கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய்’ எனும் நோய் வரலாம். அதனால் பற்களை சுற்றி இருக்கும் ஈறு வலுவிழந்து காணப்படுகிறது. அதனால் ஈறுகளில் வீக்கம், வாய் துர்நாற்றம், பற்களில் கூச்சம் ஏற்படலாம். கருவுற்றிருக்கும் தாய்மார்கள், பற்படலம் உண்டாகாமல் வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை படிந்திருந்தால் பல் மருத்துவரை அணுகி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு , வாயில் உமிழ் நீர் சுரக்கும் அளவில் மாற்றம் ஏற்படலாம். அதனால், வாய் துர்நாற்றம் , பற்சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு புளிப்பு மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.
ஆரம்ப மகப்பேற்றின் பொழுது தாய்மார்களுக்கு வாந்தி அடிக்கடி ஏற்படும். அச்சமயம் புளிப்பு மிகுந்த அமிலமும் வயிற்றி லிருந்து வாயினுள் வருவதால், பல் அறிப்பு ஏற்படலாம். ஆகையால், வாந்தி எடுத்த பின், தண்ணீரால் வாயை பலமுறை நன்கு கொப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்வதால், அமிலத்தால் ஏற்படும் சேதங்கள் குறையும்.
கருவுற்ற ஆறாவது வாரத்தில், சிசுவிற்கு பால் பற்கள் உருவாக ஆரம்பிக்கின்றது. இருபதாவது வாரத்தில், நிலை பற்கள் உருவாகாத் தொடங்குகின்றன . இவைகள் தொடர்ந்து கர்ப்ப காலத்தில் வெவ்வேறு நிலைகளில் உருவாகின்றன. இக்காலத்தில் ஊடுகதிரின் [x ray] தாக்கம் கருவில் இருக்கும் சிசுவின் பற்களின் உருமாற்றத்தைத் தாக்கும். ஆகையால், ஊடுகதிர் எடுக்கச் சென்றால், மருத்துவரிடம் கர்ப்பமாக இருப்பதை தெரிவிக்க வேண்டும்.
சிசு வளரும் காலத்தில், பற்கள் நன்றாக உருவாக கால்சியம் மற்றும் பல வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும். அதனால் கால்சியம் போலிக் ஆசிட் மற்றும் புரதச் சத்து மிகுந்த உணவுகளை அதாவது பால், முட்டை, காய்கறி போன்றவற்றினை சாப்பிட வேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரையுடன் மாத்திரைகளையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாய் மற்றும் பல் சுகாதாரத்தை பேணுவதற்கு கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டியவை…
* ஒரு நாளைக்கு இரு முறைகள் பல் துலக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையுடைய பல் துலப்பானில் , ஒரு கடலைக்காய் அளவு பற்பசையை வைத்து, மூன்று நிமிடங்கள் , பற்களின் அனைத்துப் பகுதிகளிலும் படுமாறு மேலும் கீழும் துலக்க வேண்டும். அண்ணம் , கன்னத்தின் உட்புறம், நாக்கு, ஈறு பகுதிகளையும் நன்றாக துலக்க வேண்டும்.
* எந்த உணவு உட்கொண்டாலும் உடனுக்குடன் வாயை கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்க முடியாத சமயத்தில், குடிக்கும் நீரையே கொப்பளித்தாற்போல் செய்து உட்கொள்ள வேண்டும்.
* இரவு உறங்கும்முன் , சிறிதளவு தண்ணீரில், உப்பு கலந்து வாய் கொப்பளித்தல் சிறந்தது. கடைகளில் விற்கும் அமிலத்தன்மை மிக்க வாய் கொப்பளிப்பான்களை தவிர்த்தல் நல்லது.
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டால் தேவையான சத்துகள் உடலில் சேர்வதுடன் வாய் மற்றும் பல் சுகாதாரம் மேம்படும்.
* பல்லில் சிறு தொல்லையானாலும் உடனுக்குடன் பல் மருத்துவரை அணுகுவதால் வலியற்ற பராமரிப்பிற்கு வழி வகுக்கும்.
ஆகையால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான வாய் மற்றும் பல் சுகாதாரத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் . “பல்லு போனால் சொல்லு போச்சு’ என்பது அனைவரும் அறிந்ததே” என்கிறார்.