இரவில் ஊற வைத்து மறுநாள் காலை வடிகட்டிச் சாப்பிடும் முறையும், அதுபோல இரவில் ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிடக் கூடிய உணவுப் பொருளும் நல்ல பலனை அளிக்கின்றன. அது போன்ற சில உணவு அல்லது நீர்ப்பொருட்களுக்கான உதாரணத்தை விளக்கி, நோய் மாற்றக் கூடிய விஷயங்களைக் கூற முடியுமா?
-கார்த்திகேயன், சிதம்பரம்.
முதல் நாளிரவு வடித்த அன்னத்தை நீர் ஊற்றி வைத்திருந்து காலை சிறிது புளித்துள்ள அந்த அன்னத்தைச் சாப்பிட்டால், மந்தத்தால் மலம் வெளுப்பாகப் போவது மாறும். உடல் உழைப்பிற்கு ஏற்ப வலிவு கூடும். வாந்தி புரட்டல் நிற்கும். மிகவும் புளித்த அன்னம் அதிகத் தூக்கம் மயக்கம் தரும்.
இது நல்லதல்ல. அதிகம் புளிக்காத சுவையான பழையதுடன் மோரும் தயிரும் கீரையும் மாவடுவும் மற்ற ஊறுகாய்களும் சேர்த்து உண்பது சுவையான உணவுத் திட்டம்.
புளித்த சாதத்தின் மேல் நிற்கும் தெளிந்த நீரை (நீராகாரம்) அதிகாலை வேளையில் சாப்பிட வயிற்றில் புளிப்பு தங்காது. மலக்கட்டும் நீங்கும். குடல் அழற்சி தணியும். சிறிது சீரகத்தூள் உப்பு சேர்த்துச் சாப்பிட குமட்டல் வாந்தி நிற்கும்.
கோதுமை நொய்யை முதல் நாளிரவு நீரில் ஊற வைத்துக் காலையில் நன்கு கரண்டியால் அடித்துக் கிளறிப் பசையாக்கித் துணியால் வடிக் கட்டிய கோதுமைப்பால் கப நோயாளிக்கு ஏற்ற பானம். காப்பிக் கொட்டையைப் போல் கோதுமையையும் வறுத்துத் தூளாக்கி வென்னீர் ஊற்றி எடுத்த நீருடன் பால் சேர்த்துச் சாப்பிடக் கபம் கட்டாது. கோதுமையின் வறுத்த மாவை மறுநாள் காலை தேன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவது கீல்வலி முதுகுவலிக்கு நல்லது.
முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்த தண்ணீரை மட்டும் சாப்பிட சிறுநீர் எரிவு சுருக்கு நீங்கும். உளுந்தை லேசாக வறுத்துத் தண்ணீரில் போட்டு இரவு ஊற வைத்து நீரை வடிக்கட்டிச் சாப்பிட வயிற்றைப் பிடித்திழுத்து ஏற்படும் வலி நீங்கும்.
எள்ளை ஊற வைத்த தண்ணீரைச் சாப்பிட மலமிளகிப் போகும்.
பச்சைக் கொள் தானியத்தை நீர் சேர்த்து மறுநாள் காலை இடித்துப் பிழிந்த சாற்றைத் தினம் பருகி வர வற்றிய உடல் பருக்கும். தூண்போல் உரத்து நிற்கும். வறட்சி, சளியுடன் இருமல், சளியால் மூச்சுத்திணறல் ஜலதோஷம் இவற்றை நீக்கும்.
காய்ந்த பட்டாணியை இரவில் ஊற வைத்து மறுநாள் பயன்படுத்துவதுண்டு. இதனால் நல்ல வாளிப்பான உடல், உடல் தழைத்துத் தசைகள் நிறைவுறும். நுரையீரலுக்குப் பலம் தரும்.
இரவு தண்ணீரில் ஊற வைத்த உளுந்தை மறுநாள் துணியில் இறுகக் கட்டி முளைக்க வைத்துப் பின் குத்திப் புடைத்து லேசாக வறுத்து நெய் சேர்த்துச் சாப்பிட மலக்கட்டு, வறட்சியால் ஏற்பட்ட வாயு ஆகியவை நீங்கும். காய்ச்சலின்போது இதுபோலச் செய்துச் சாப்பிட பயறு நல்லது. களைப்பு சோர்வுள்ள நிலையில் பயறு துவரை நல்லது. மாதவிடாய்ச் சிக்கல், இரவில் அதிகம் சிறுநீர் போகுதல் ஆகியவற்றுக்கு எள் நல்லது. வாயில் பற்களிடுக்கில், தொண்டையில், மலத்தில் ரத்தக் கசிவிருந்தால் துவரை நல்லது. மூலம் சிறுநீர்த் தாரையில் கல்லடைப்பு, விக்கல், மூச்சுத்திணறல் ஆகியவற்றுக்குக் கொள்ளு நல்லது.
சீமை அத்திப்பழத்தை பிரித்து பழத்தினுள் கற்கண்டுத் தூளைச் செலுத்தி இரவு பனியில் வைத்திருந்து காலையில் உண்டு வர உடல் உஷ்ணம் தணியும். பசுமையான பழங்களை 2 பங்கு தண்ணீர் விட்டுப் பிசைந்து ஊற வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டிய சாற்றுடன் சர்க்கரை சேர்த்துப் பானமாக்கிச் சாப்பிடலாம். கோடை காலத்திற்கேற்ற பானகம். இந்த பானகத்தைச் சற்று தடிப்புள்ளதாக்கினால் “ஜாம்”. பழங்களை இரவில் வென்னீரில் ஊறபோட்டுக் காலையில் பிழிந்து வடிகட்டிச் சாப்பிடலாம். உடல்ச் சூடு குறையும்.
மலமிளகி வெளியாகும்.
பேரீச்சங்காயைத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட சாராயம் முதலியவற்றின் விஷ சக்தி நீங்கும்.
ஓமத்தைப் பொடித்து வெந்நீரில் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை சிறிது இந்துப்புடன் சாப்பிட வயிற்றிலுள்ள வாயு தடை, வலி நீங்கும்.
இப்படி எண்ணற்ற உதாரணங்களைக் கூறலாம். ஆரோக்கியத்திற்கான எளிய வழிகளை இது போன்ற நீர்த் திரவங்களாலும் ஊற வைத்த உணவு வகைகளாலும் நாம் சிறப்பாகப் பெற முடியும்.