நம் நாட்டில் 60 வயதைக் கடந்து விட்டால் ‘முதியோர்’ என்கிறார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சுவீடன், டென்மார்க் போன்ற பல நாடுகளில் 60 வயதையெல்லாம் ஒரு வயதாகவே கருதுவது இல்லை. இந்த வயதில் உள்ளவர்களை அங்கெல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள்.
நமக்கெல்லாம் 60 வயதிலேயே உடல் ஆட்டம் கண்டுவிடுகிறது. இதற்கு ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும், மினரல்களும் கிடைக்காதது தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்கள் அடிக்கடி நோய்களின் தாக்கங்களுக்கு ஆளாகாமல் தப்பிக்க வேண்டுமென்றால் சில முக்கியமான ஊட்டச்சத்துக்களை தினசரி நம் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும்.
முதுமைக்குத் தேவையான சத்துக்களுள் பீட்டாகரோட்டின் என்பதும் ஒன்று. இது பச்சை நிறம் கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள், கேரட், பீட்ரூட், தக்காளி, பப்பாளிப்பழம், மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.அடுத்து வைட்டமின் சி என்பதும் முக்கியமானது.
இது முளைகட்டிய தானியங்கள், கீரைகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு மற்றும் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களிலும் கிடைக்கிறது.
அடுத்து வைட்டமின் ஈ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சிறப்பாகச் செயல்படுகிறது. இது பாதாம் பருப்பு, பசலைக்கீரை, சூரியகாந்தி விதை, வேர்க்கடலை போன்றவற்றில் அதிகமாக இருக்கிறது.
செலீனியம் என்ற மினரல் முதுமையில் இருப்பவர்களுக்கு அவசியமான தாகும். இது முட்டை, கோழி, மீன், காளான், சிவப்பு அரிசி, வெண்ணெய், சோயாபீன்ஸ், எள் போன்ற உணவுகளில் கிடைக்கிறது.முதுமையில் துத்தநாக குறைபாடு ஏற்படுவது இயல்பாக இருக்கிறது.
இது பூசணி விதை, வெள்ளரி விதை, வறுத்த வேர்க்கடலை, காராமணி, ஆட்டு ஈரல் ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
முதுமையில் இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இரும்புச்சத்து ஆட்டுக்கல்லீரல், இறால் மீன், பசலைக்கீரை, பீட்ரூட், மாதுளை, ஆப்பிள், தர்ப்பூசணி, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் கிடைக்கிறது.
இவைகளை நாம் முடிந்த வரையில் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் முதுமையையும், முதுமைக்கால நோய்களையும் தடுக்கலாம்.
இவற்றுடன் தினமும் காலையிலோ, மாலையிலோ முக்கால் மணி நேரத்திற்குக் குறையாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
இவைகளைக் கடைப்பிடித்து வந்தால், முதுமையை வெல்லலாம். 80-90 வயதுகளிலும் ஆரோக்கியமாக வாழலாம்.