25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
image
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் பாதிப்புக்கள் என்ன தெரியுமா?…

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் செல்போன்கள் எல்லோரின் ‘செல்லப்பிள்ளைகள்’ போல் மாறிவிட்டன. இணைய தகவல்களை அள்ளிக் கொண்டு வருவது முதல், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள், விளையாட்டுகள் என அத்தனை வாய்ப்புகளையும் ஸ்மார்ட்போன்கள் வாரி வழங்குகின்றன.

இதனால் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் சுட்டுவிரலுக்கும் வேலைப்பளு அதிகமாகிவிட்டது. வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் என்று ஸ்மார்ட் போன்களில் வரும் தகவல்கள், செய்திகள், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகையர் பற்றிய விமர்சன மீம்ஸ்களை பார்க்கும் ஆர்வம் மக்களிடையே ஆக்கிரமித்து இருப்பதே அதற்கு காரணம்.
image
செல்போன் நிறுவனங்களின் வியாபார போட்டிகள், உற்பத்தி அதிகரிப்பு, விலை மலிவு போன்றவற்றின் காரணமாக அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் போன்கள் வலம் வருகின்றன. இப்படி வீடுகள்தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்மார்ட் போன்களால் எந்த அளவுக்கு நல்ல விஷயங்கள் இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக பிரச்சினைகளும் கூடவே உள்ளன. குறிப்பாக குழந்தைச் செல்வங்கள், பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர், சிறுமியர் செல்போன்களில் உள்ள விளையாட்டுகளுக்கு அடிமையாகிப் போகிறார்கள்.

பெற்றோரின் கைகளில் செல்போனை பார்த்துவிட்டால் போதும். வெடுக்கென பிடுங்கிக் கொண்டு ஓடுவது, பெற்றோருக்கு தெரியாமல் செல்போனை எடுத்துக் கொண்டு தனியிடத்துக்கு சென்று விளையாட்டுகளை பார்ப்பது என்று சிறுவயதினரின் சேட்டைகள் சகஜமாகிவிட்டது. அவ்வாறு தூக்கிக்கொண்டு ஓடும் குழந்தைகளின் கைகளில் இருந்து செல்போன்கள் கீழே விழுந்தும், சில குழந்தைகள் கோபத்தில் செல்போனை தூக்கி எறிந்தும் பெற்றோருக்கு செலவு வைத்துவிடுவதும் உண்டு. தங்களது குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு செல்போனை கொடுத்துவிட்டு அதைப்பார்த்து மகிழும் சில பெற்றோரும் உண்டு. ஆனால் அதுவே, பிள்ளைகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதை ஏனோ அவர்கள் உணருவதில்லை.

முன்பெல்லாம் சிறுகுழந்தைகள் வீட்டு முற்றங்களில் நன்றாக ஓடி விளையாடுவது உண்டு. உடல் தசைகள் இறுக்கம் கொள்ளவும், அவர்களை திடகாத்திரமானவர்களாக அது மாற்றவும் உதவியது. அதனால்தான் முண்டாசுக் கவிஞன் பாரதி, ‘ஓடி விளையாடு பாப்பா…நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று மழலைகளுக்கு விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் இன்றைய நிலை ‘செல்லுக்குள் முடங்காதே பாப்பா…நீ செயலிழந்துபோவாய் பாப்பா’ என்று பாடவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்போது பல வீடுகளில் குழந்தைகள் எந்த நேரமும் செல்போன்களில் மூழ்கிக்கிடப்பதையே காணமுடிகிறது. நகரங்களில் மட்டுமல்ல…கிராமங்களிலும்கூட இந்த நிலை வந்துகொண்டிருக்கிறது. கிராமங்களுக்கே உரித்தான ஓடிப்பிடிக்கும் விளையாட்டு, பம்பரம் சுற்றுதல், கண்ணாமூச்சி ஆட்டம், கில்லி, எறிபந்து, நொண்டியடித்தல், போலீஸ்-திருடன் விளையாட்டு, கோலிக்குண்டு போன்ற விளையாட்டுகள்கூட இந்தக்கால குழந்தைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்டது.

இதனால் மழலைகளின் உடல் போதிய வலுப்பெறுவதில்லை. சுறுசுறுப்பு குறைந்து, இயல்பான செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள். மேலும் செல்போனின் கதிர்வீச்சு குழந்தைகளை எளிதாக தாக்கும். செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் சிறுவயதிலேயே கண்பார்வை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. போதிய சுய சிந்தனை, கற்பனைத்திறனை பெறும் சக்தி அவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள், அவர்கள்.

அதுமட்டுமின்றி, இப்போதெல்லாம் கடும் போட்டி காரணமாக உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் தரமில்லாத பல போன்கள் அவ்வப்போது வெடித்துச் சிதறவும் செய்கிறது. இதனால் உடல்சேதம் மட்டுமல்லாமல் சில சமயங்களில் உயிர்ச்சேதமும் ஏற்பட்டுவிடுகிறது. அதற்கு, குழந்தைகளிடம் செல்போன்களை தராமல் இருப்பதே அவர்களது நல்வாழ்வுக்கு நலம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதேபோல் குழந்தைப் பருவத்தை தாண்டி பள்ளி பருவத்தினரும், செல்போன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருவதும் அதிகரித்து வருகிறது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியவர்கள் செல்போனில் படம் பார்ப்பதிலும், விளையாடுவதிலுமாக இருக்கிறார்கள். இது அவர்களது நல்ல எதிர்காலத்துக்கு அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் முட்டுக்கட்டையாக வாய்ப்பு உள்ளது.

இதற்கு பெற்றோர் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலத்தை கருதி அவர்கள் கல்வியில் வெற்றிமகுடம் சூட்டும்வரை செல்போன்களை வாங்கிக் கொடுப்பதை தவிர்ப்பதோடு, தங்களது செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தாதவாறு கண்காணிக்கலாம். ஆரோக்கியமானவர்களாக தங்களது மழலைச் செல்வங்கள் உருவாக அவர்களை நான்கு சுவற்றுக்குள் அடைத்துவிடாமல், உடலுக்கு உற்சாகத்தை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும்.

அதோடு பிள்ளைகளுக்கு கற்பனைத்திறன் ஊற்றெடுக்கும் வகையில் நூல்களை படிக்க வைத்தல், கதை, கட்டுரைகளை எழுத பயிற்சி அளித்தல், தனித்திறன்களை வெளிப்படுத்த உறுதுணையாக இருத்தல், பொது அறிவை புகுத்த நூலகங்களுக்கு அனுப்பி வைத்தல், வாழ்வில் ஒழுக்கநெறி கொண்டவர்களாக உருவாக நீதிக்கதைகள், நன்னெறிக்கதைகளை கற்றுவித்தல் ஆகியவற்றில் பெற்றோர்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும். எதிர்கால இந்தியாவுக்கு தேவை வெறும் அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல… ஆரோக்கியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை கட்டிக்காக்கும் இளைய சமுதாயமே. மொத்தத்தில் ஓடிவிளையாட வேண்டிய வயதில் சின்னஞ்சிறுசுகள் நான்கு சுவற்றுக்குள் முடங்கும் சூழல் முடிவுக்கு வந்தால் நலம்.

Related posts

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை -செரிமானம் சீராக செயல்பட

nathan

தரையில் படுத்து தூங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

sangika

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

இந்திய பாரம்பரிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த அழுத்தத்தை குறைக்கும் சந்தன எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்..!!

nathan

தூங்குவதற்கு சிரமமாக இருக்கிறதா? இரவில் வெகுநேரம் ஆகியும் தூக்கம் வரவில்லையா?

nathan

இவ்வளவு எளிதாக எடையைக் குறைக்க முடியும்…..

sangika

குழந்தையின் பார்வை திறனும், மூளையின் செயல்பாடுகளும் மேம்பட….

sangika