தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து இடங்களிலும், தானே வளரும் ஒரு கொடி வகை மருத்துவ மூலிகைத் தாவரம், கிருஷ்ணவல்லி, பாதாள மூலி எனும் பெயரில் அழைக்கப்படும் நன்னாரி. எதிர் எதிர் அடுக்குகளில் நீண்டு காணப்படும் இலைகளுடன் பசுமை நிற மலர்களைக் கொண்டு, மெலிதான தண்டுப் பகுதியுடன்தோன்றினாலும், நன்னாரி வேர் அதிக உறுதி மிக்கது, நறுமண மிக்க நன்னாரி வேரே, நன்னாரியின் சிறப்புக்கு முக்கிய காரணமாகிறது.
வேரில் மகத்துவ மிக்க ஆற்றலைக் கொண்டு விளங்கும் நன்னாரி, தற்காலங்களில், அதன் மருத்துவ தன்மைக்காக, பரவலாகப் பயிரிடப்பட்டு வருகிறது. உள்நாட்டு மருந்து உற்பத்தியிலும், வெளிநாட்டு மருந்து உற்பத்திக்காக, அதிக அளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இனிப்புடன் சிறிதளவு கசக்கும் சுவையுடைய நன்னாரி வேர், குளிர்ச்சியானது, உடல் வெப்பத்தை அகற்றி, உடலை உறுதிப்படுத்தும், வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும் இயல்பு மிக்கது.
உடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையுள்ள நன்னாரி வேரில் இருந்து எடுக்கப்படும் சாறு, சிறுநீரைப் பெருக்கும், வேர்வை சுரப்பை அதிகரிக்கும், சரும பாதிப்புகளைத் தீர்க்கும், மூட்டுவலி உடல் வெப்பம் தணிக்கும் மருந்தாக பயன் தருகிறது. வாத, பித்த பால்வினை வியாதிகளைப் போக்கும் மற்றும் மைக்ரேன் எனும்ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த மருந்தாகிறது.
நமது நாட்டில் பொதுவாக வயல் வெளி, ஆற்றங்கரையோரம், சம வெளிப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்பட்டாலும், கடற்கரையோரம் மற்றும் மலைப்பகுதிகளில் வளரும் நன்னாரியின் வேர்கள் மிகவும் தடிமனாக, பெரிய அளவில், உறுதி மிக்கதாகக் காணப்படும். நறுமண மிக்க மருத்துவத் தன்மையுள்ள உலர்ந்த நிலையில் உள்ள நன்னாரி வேர்கள், நன்னாரி வேர்ப் பட்டைகள், இலை சூரணம் போன்றவை, சித்த மருந்துகள் விற்பனையாகும் கடைகளில் கிடைக்கும்.
நன்னாரியின் இலை, பட்டை மற்றும் வேர்கள் அதிக அளவில் மருத்துவ பயன்கள் மிக்கவை. இலை மற்றும் வேர்களில் இருந்து, எண்ணைகள் தயாரிக்கப்படுகின்றன. பல சித்த மருத்துவ தைலங்களில், இலேகியங்களில் துணை மருந்தாகவும் மணமூட்டியாகவும் நன்னாரி வேர் சேர்க்கப்படுகிறது.
நன்னாரி சமூல மருந்து! நன்னாரியின் இலைகள், மலர்கள், வேர், பட்டை தண்டு இவற்றை நன்கு உலர்த்தி, இளஞ்சூட்டில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வதக்கி, அதில் மிளகுத்தூள், இந்துப்பு சிறிது புளி சேர்த்து, அம்மியில் அரைத்து, துவையல் போல தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, அதீத உடல் வியர்வையால், உடலில் ஏற்பட்ட துர்நாற்றங்கள் நீங்கிடும்.
நன்னாரி வேர் குடிநீர்! நன்னாரி வேரை, நன்கு அலசி உலர்த்திய பின், சற்று அரைத்து, தண்ணீரில் இட்டு சிறிது நேரம் சுட வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் காலையில் எழுந்தவுடன் சிறிது பனங் கற்கண்டு சேர்த்து பருகி வர, நீர்க் குத்தல் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் ஆகியவை விலகும்.
கண் எரிச்சலுக்கு : நன்னாரி வேர்ச் சாற்றை, இரு துளிகள் கண்களில் விட, கண் குளிர்ச்சியாகி, கண் எரிச்சல் விலகும்.
சிறு நீரக பாதிப்புகளை போக்க : நன்னாரி வேரைப் பொடியாக்கி, அதை பாலில் சிறிது சேர்த்து கலக்கி பருகி வர, சிறுநீர் பிரியாமல் வேதனை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் வறட்டு இருமல் தொல்லை விலகும். இதையே தொடர்ந்து சில நாட்கள் பருகி வர, இள நரை பாதிப்புகள் விலகி, தலைமுடி நன்கு வளரும்.
பித்த வியாதிகள் : நன்னாரி வேர்ப் பொடியுடன், கொத்த மல்லி விதைப் பொடியை கலந்து, காய்ச்சி பருகி வர, பித்தம் தொடர்பான வியாதிகள் விலகும், வயிற்றில் உள்ள வியாதிகளின் பாதிப்புகள் யாவும் விலகி விடும்.
மஞ்சள் காமாலை : நன்னாரி வேர்ப் பொடியுடன், நன்கு அலசிய சோற்றுக் கற்றாழை ஜெல்லைக் கலந்து சாப்பிட, விஷக்கடி பாதிப்புகள் அகலும். நன்னாரி வேர்ப் பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டுவர, மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்கும்.
நன்னாரி சிரப் நன்கு தூளாக்கிய நன்னாரி வேரை, வெல்லம் கலந்த தண்ணீரில் இட்டு, பாகாக காய்ச்சி வைத்துக் கொண்டு, அந்த சிரப்பை, தினமும் சிறிதளவு சாப்பிட்டு வர, உடல் வெப்பம் குறைந்து, உடல் நலமாகும்.
சுவாச பிரச்சனை : நன்னாரி வேரை தண்ணீரில் இட்டு காய்ச்சி, சுண்டிய பின், தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, ஆண்மைக் குறைபாடுகள் விலகும், செரிமான, சுவாச பாதிப்புகள், வாதம் சார்ந்த வியாதிகள், சரும பாதிப்புகள் நீங்கிவிடும்.
சிரங்கு நோய்கள் : நன்னாரி வேரை, அரைத்து, தண்ணீரில் நாள் முழுவதும் ஊற வைத்த பின்னர், தினமும் இரு வேளை பருகி வர, விஷக்கடி, சர்க்கரை பாதிப்புகள், அதிக தாகம், அதிக பசி, சிரங்கு போன்ற உடல் நலக் கோளாறுகள் யாவும் நீங்கிவிடும். இந்த மருந்து எடுக்கும் காலங்களில், புளி விலக்கிய உணவுக் கட்டுப்பாடும், புலன்களின் அடக்கமும் அவசியம் தேவை.
இருமல், வயிற்றுப் போக்கிற்கு : நன்னாரி வேர்ப் பட்டையை தண்ணீரில் ஊற வைத்த பின்னர், அந்த தண்ணீரில் பால் மற்றும் பனங் கற்கண்டு சேர்த்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர, அவர்களின் உடலில் சதைப் பிடிப்பு ஏற்படுவதோடு, நாட்பட்ட இருமல் மற்றும் வயிற்றுப் போக்கு குணமாகும்.
கோடை வெப்பத்திற்கு : நன்னாரியில் காணப்படும் பெரு நன்னாரி வகையில், அதன் வேரில் காணப்படும் கிழங்குகளை உலர்த்தி, காய வைத்து, ஊறுகாய் போல செய்து உணவில் பயன்படுத்துவர். இதன் மூலம், ஒவ்வாமையை போக்கி, செரிமான ஆற்றலை மேம்படுத்தி, உடல் வெப்பத்தை குறைத்து, கல்லீரல், காமாலை பாதிப்புகளை சரிசெய்யும்.
நன்னாரி சர்பத்! கோடைக் காலங்களில், வெயிலில் செல்லவேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு, வெயிலில் உடலில் உள்ள சத்துக்கள் வற்றி, தாகம் ஏற்படும். தாகத்தைத்தணிக்க, கண்களைக் கவரும் விதத்தில் டிசைன் செய்யப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்டு, குளிர்ச்சியாக்கி விற்கப்படும் பன்னாட்டு செயற்கை பானங்களைப் பருகி, உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாமல், வீதிகளில், எளிமையான இயற்கை நன்னாரி சர்பத் விற்கும் கடைகளுக்குச் சென்று, எலுமிச்சை சாறு பிழிந்த, சர்க்கரைப்பாகில் சேர்ந்த நன்னாரி சர்பத்தை குளிராகவோ, சாதாரண வெப்ப நிலையிலோ பருகி வர, தாகத்தை தீர்த்து, உடலுக்கு குளிர்ச்சியைத்தரும், உடலின் பித்த வாத கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் மிக்க, நன்னாரி பானம், சிறுநீரை, சீராக வெளியேற்றும் தன்மைமிக்கது.