< இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்‘ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. மராட்டியம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படுகிறது.
நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி., இரும்புச் சத்து 2.0 மி.கி., தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோபிளவின் 0.03 மி.கி., நியாசின் 0.02 மி.கி., வைட்டமின் சி 6.1 மி.கி.
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், ரத்தபேதி குணமாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து.
சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை, கருப்பட்டி பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.