நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும்.
சிசு ஆசனம் என்பது குழந்தையை போன்ற தோற்றத்தில் செய்யப்படுவதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஆசனம் யோகாவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். கழுத்துவலியை குறைத்து முதுகிற்கு பலமளிக்கும்.
செய்முறை :
முதலில் முட்டி போட்டு அமருங்கள். இருகால்களும் இணைந்தபடி இருக்கவேண்டும். இப்போது மெதுவாக உடலை குனியுங்கள். தொடை மீது உடல் இருக்கும்படி வளையுங்கள். நெற்றி தரையில் படும்படி வைத்து, கைகளை பக்கவாட்டில் தரையில் பதியுங்கள். இப்போது மார்பை தொடையில் அழுத்தவும். கைகளையும் தரையில் நன்றாக அழுத்தவும். இவ்வாறு செய்யும்போது முதுகுத் தண்டிலும் ஒரு அழுத்தம் உணர்வீர்கள்
இப்போது சௌகரியமாக இருந்தால், ஆழ்ந்து மூச்சு விடுவதில் கவனம் செலுத்துங்கள். சில நொடிகள் இதே நிலையில் தொடருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும்.
பலன்கள் :
மன அழுத்தத்தை போக்கவும், முதுகுத்தண்டிற்கு நெகிழ்வுத்தன்மை உண்டாகும். முதுகு வலி குணமாகும். தசைகளுக்கு பலம் தரும். இடுப்பு தொடைகளுக்கு வளையும் தன்மை அதிகமாகும்.
மூட்டு அறுவை சிகிச்சை, கர்ப்பிணிகள், ஆகியவர்கள் இந்த யோகாவை தவிர்ப்பது நல்லது.