எதுவுமே அளவோடு இருந்தால் தான் ஆரோக்கியமாகும். ஒரு விஷயத்திற்கு அடிமையாகி போவது என்பது முற்றிலும் கொடிய ஒன்றாகும். அடிமைத்தனம் என்பது ஆல்கஹால், புகையிலை, உடலுறவு, மதுபானங்கள் போன்றவற்றின் மீது உண்டாகிறது. இந்த அடிமைத்தனத்தினால், நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் அதிகப்படியான தீமைகள் உண்டாகின்றன. இத்தகைய தீமைகளை கொடுக்கும் இந்த அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வரவே முடியாது என்பது எல்லாம் ஒன்றும் இல்லை. கட்டாயமாக நீங்கள் நினைத்தால் இதிலிருந்து மீண்டு வர முடியும். இந்த பகுதியில் எப்படி போதைக்கு அடிமையாவதில் இருந்து மீண்டு வருவது என்பது பற்றி காணலாம்.
எழுதுதல் இந்த போதைக்கு அடிமையாதல் உங்களை எந்த விதத்தில் எல்லாம் பாதித்துள்ளது என்பது பற்றி முழுமையாக ஒரு பேப்பரில் எழுதுங்கள். உங்களது உறவுகளில் இதனால் உண்டான பிரச்சனைகள், போதைப்பழக்கத்தால் உடலில் உண்டான ஆரோக்கிய பிரச்சனைகள், நிதிப்பிரச்சனைகள், போதைப்பழக்கத்தில் உள்ள உங்களை பிறர் எவ்வாறு அவமதிக்கிறார்கள்? உங்களது மரியாதை சமூகத்தில் குறைந்துள்ள விதம் என்பது பற்றி எல்லாம் நீங்களாகவே உணர்ந்து எழுதுங்கள். இதிலிருந்து நீங்கள் இதனால் வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை எல்லாம் இழந்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரியும்.
தேவையான மாற்றங்கள் உங்களது போதைப்பழக்கத்தை நீங்கள் ஏன் கைவிட நினைக்கிறீர்கள், இந்த பழக்கத்தை கைவிடுவதால் உங்களது வாழ்க்கையில் என்னென்ன கிடைக்க போகிறது என்பது பற்றி எழுதுங்கள். உங்கள் ஆரோக்கியம், உறவுகள், பணம் போன்றவற்றில் நல்ல மாற்றம் தெரியும் என்கின்ற போது நீங்கள் போதை பழக்கத்தை கைவிடுவதில் தவறு ஒன்றும் இல்லையே…
நாள் தேர்வு போதைப்பழக்கத்தை விடுவதன் மூலமாக உங்களுக்கு அதிக நன்மைகள் வருகிறது என்றால் அதனை விடலாம் அல்லவா.. இதனை கைவிடுவதற்காக ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்யுங்கள். அது உங்களது பிறந்த நாள், திருமணநாள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று முடிவு செய்து நாளையே போதைப்பழக்கத்தை விடுவது எல்லாம் நடக்காத காரியமாகும். ஒருமுறை போதையை விட்டுவிட்டால் இனி அந்த பக்கம் போகவே கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள்.
ஆதரவு உங்களது நெருக்கமானவர்கள், மனைவி, நண்பர்கள் என பிறரது ஆதரவை நாடுங்கள். உங்களது நலனில் அக்கறை உள்ளவர்களுடன் பேசினால் உங்களுக்கு நல்ல மனநிலை உண்டாகும். நீங்கள் மீண்டும் போதையை நாடும் சூழ்நிலை வரும் போது எல்லாம் அவர்களின் துணை உங்களுக்கு தேவைப்படலாம். மருத்துவரின் ஆலோசனை பெறுவதும் சிறந்த தீர்வாக இருக்கும்.
தூண்டுதல்கள் நீங்கள் எதற்காக போதைப் பழக்கத்தில் ஈடுபடுகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். வீட்டில் பிரச்சனையா, கடன் தொல்லையா, அலுவலக பிரச்சனையா எது உங்களை தூண்டுகிறது என்பதை அறியுங்கள். கண்டிப்பாக போதைப்பழக்கம் இவை எதற்கும் சரியான தீர்வாக அமையாது. பிரச்சனையை அதிகரிக்க வேண்டுமானால் செய்யும்.
படிப்படியாக.. முழுமையாக ஒரு விஷயத்தை கைவிடுவது நிச்சயம் சிரமமானது தான். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இதனை குறைத்துக் கொள்ளுங்கள்.
வாழும் சூழல் உங்களது வாழும் சூழலை மாற்றியமைக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். பாடல் கேளுங்கள். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் அடிக்கடி வழிபாட்டில் ஈடுபடுங்கள்.
வெளியிடங்கள் இயற்கையான இடங்கள், குளிர் பிரதேசங்கள் புண்ணிய தலங்கள் என்று சென்று வாருங்கள். உங்களது மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்.
யோகா யோகா வகுப்புகளுக்கு செல்லுங்கள். இதன் மூலமாக நிச்சயமாக உங்களது மனதும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். வாழ்வில் நல்ல மாற்றம் தெரியும்.