தண்ணீர் இல்லாமல் உடலில் எந்த செல்லும் இயங்க முடியாது. உடலில் உள்ள எல்லா செல்களுக்கும் தண்ணீர் தேவை. திசுக்களுக்குத் தண்ணீர் தேவை. ரத்த உற்பத்திக்கு, செல்களின் வளர்சிதைமாற்றப் பணிகளுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்குச் சரியான ஊடகம் தண்ணீர்தான். மேலும், ரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு, வியர்ப்பதற்கு, சிறுநீர் கழிப்பதற்கு, உடலின் வெப்பத்தைச் சமப்படுத்துவதற்கு என உடலின் முக்கியமான இயக்கங்களுக்கும் தண்ணீர் தேவை.
வயது, உடல் எடை, உடல் உழைப்பு, உணவுப் பழக்கம், கால நிலை, நோய் நிலை எனப் பல காரணங்கள் ஒருவருடைய தண்ணீர்த் தேவையை தீர்மானிக்கின்றன. என்றாலும், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் தினமும் 2.4-ல் இருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், ஒரு கிலோ உடல் எடைக்கு 3.5 லிட்டர் தண்ணீரை தினமும் அருந்த வேண்டும்.
ரத்த பிளாஸ்மாவில் 92 சதவீதம் தண்ணீர் உள்ளது. ரத்தச் சிவப்பணுவில் 70 சதவீதம் தண்ணீர் உள்ளது. தண்ணீரின் அளவு உடலில் சரியாக இருந்தால், இந்த அளவுகள் மாறாது. ரத்தம் திரவ நிலையில் இருக்கும். அப்போது இதயத்துக்குத் தேவையான ரத்தம் சரியாகக் கிடைக்கும். இதனால், இதயத்தின் அழுத்த விசையும் சரியாக இருக்கும்.
அடுத்து, ரத்தச் சுற்றோட்டத்தில் ரத்தம் உறைந்து விடுவதுதான் மாரடைப்புக்கு முக்கியக் காரணம். ரத்தத்தில் பைப்ரினோஜன் எனும் ரத்த உறைவுப் பொருள் உள்ளது. உடலில் ரத்தக்காயம் ஏற்படும்போது ரத்தக்கசிவைத் தடுப்பதும், கட்டுப்படுத்துவதும் இந்த பைப்ரினோஜன் தான். ரத்தம் திரவ நிலையில் இருந்தால் மட்டுமே பைப்ரினோஜன் தன் வேலையைச் சரியாகச் செய்யும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து, அது திடமாகிவிட்டால், ரத்தக் குழாய்க்குள்ளேயே ரத்தம் உறைவதற்கு பைப்ரினோஜன் ஏற்பாடு செய்துவிடும். அப்போது தான் மாரடைப்புக்கான அபாயம் உண்டாகும்.
ஒருவர் தேவைக்குத் தண்ணீர் அருந்தாவிட்டால், முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள கொலாட்டிரல்ஸ் எனும் மிக நுண்ணிய ரத்தக்குழாய்கள் மூடிக்கொள்கின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்ன? முதன்மை மின்சார இணைப்பு நின்று போனால், யு.பி.எஸ். கருவி தடங்கல் இல்லாமல் மின் வினியோகத்தைப் பார்த்துக்கொள்வது போலத்தான் இந்த நுண்ணிய ரத்தக்குழாய்கள் நமக்கு உதவுகின்றன.
அதாவது, இதயத் தசைகளுக்கு ரத்த வினியோகம் செய்யும் முதன்மை ரத்தக் குழாய்களான கரோனரி தமனிகளில் அடைப்பு உண்டாகி, மாரடைப்பு ஏற்படும்போது, இவை தான் இதயத்தசைகளுக்கு ஆபத்பாந்தவன்களாக ரத்தம் கொடுக்கின்றன. இதன் மூலம் மாரடைப்பு தள்ளிப்போகவோ மாரடைப்பின் கடுமை குறையவோ வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.