27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p40c1
மருத்துவ குறிப்பு

அப்பெண்டிசைட்டிஸ் அறிவோம்

வயிற்றில் வலி வந்ததும், அது வாய்வுக்கோளாறாக இருக்கும். இல்லைன்னா அல்சர் பிரச்னையா இருக்கும் என்பதே பெரும்பாலானவர்களின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. வாய்வுக்கோளாறை விரட்ட வெள்ளைப்பூண்டு சாப்பிடுவது அல்லது மெடிக்கல் ஷாப்புக்குப் போய் ஒரு வாய்வு மாத்திரை, வலி நிவாரணி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது என இருக்கின்றோம். ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாய்வு மட்டுமே பிரச்னை. அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது, சிறுநீரகக் கல்,

ஹெர்னியா, பித்தப்பைக் கல், அப்பெண்டி சைட்டிஸ், குடல் அழற்சி நோய்கள் எனப் பல்வேறு நோய்த் தாக்குதலின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். குறிப்பாக, அப்பெண்டிசைட்டி ஸுக்கான அறிகுறிகள் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. சிறுநீரகக் கல்லின் அறிகுறிகளும் அப்பெண்டி சைட்டிஸ் அறிகுறி களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்; இரண்டுக்குமான வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. அப்பெண்டி சைட்டிஸ் என்பது என்ன? அது யாருக்கெல்லாம் வரும்? அதன் அறிகுறிகள், அதற்கான சிகிச்சைகள் குறித்த சந்தேகங்களுக்கு இங்கே விடை காணலாம்.

அப்பெண்டிசைட்டிஸ் என்றால் என்ன?
அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்புக்குக் குடல்வால் (Vermiform Appendix) என்று பெயர். இதன் நீளம் சுமார் 7 செ.மீ முதல் 10 செ.மீ வரை இருக்கும். இதில் ஏற்படும் நோய்த் தொற்றினால் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு உருவாகும் தேவையில்லாத கட்டி அல்லது அதில் ஏற்படும் கல் ஆகியவற்றுக்கு அப்பெண்டிசைட்டிஸ் (Appendicitis) என்று பெயர்.
என்ன காரணம்?
உடலுக்குள் நுழையும் என்டெரோக்காக்கஸ் (Enterococcus), ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (Streptococcus), எஸ்செரிச்சியா கோலி (Escherichia coli) போன்ற பாக்டீரியாக்கள் சிறுகுடலை அடையும்போது, அவை ரத்தத்தில் கலந்து குடல்வாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதன் விளைவால் குடல்வாலில் அழற்சி உண்டாகிறது.

எந்த வயதினருக்கு வரும்?
இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக, 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் என்னென்ன?
வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். மேலும் அந்தப் பகுதியை மென்மையாக அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ அசையும்போதோ வலி அதிகரித்தல், இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படுதல் அப்பெண்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும்.
எப்போது மருத்துவரைச் சந்திப்பது?
கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப் பிடிப்பும் ஏற்படுமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
பரிசோதனைகள் என்னென்ன?
முதற்கட்டமாக, வலி உள்ள இடத்தை மென்மையாக அழுத்திப் பார்த்து, அப்பெண்டிசைட்டிஸ் இருக்கிறதா என்பதை மருத்துவரால் மதிப்பிட முடியும்.
ரத்தப் பரிசோதனை: உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை (White Blood Cell Count) சரிபார்ப்பதன்மூலம் தொற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.
சிறுநீர்ச் சோதனை: சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும்.
அல்ட்ராசவுண்ட் (Ultrasound), சி.டி ஸ்கேன் (CT Scan) போன்ற பரிசோதனைகள் மூலமும் நோயை உறுதி செய்யலாம்.
எத்தனை வகைகள் உள்ளன?
இரண்டு வகையான அப்பெண்டிசைட்டிஸ் உள்ளன. ஒன்று, ‘அக்யூட் அப்பெண்டிசைட்டிஸ்’ எனும் திடீர் குடல்வால் அழற்சி (Acute Appendicitis). மற்றொன்று, ‘க்ரானிக் அப்பெண்டிசைட்டிஸ்’ எனும் நாள்பட்ட குடல்வால் அழற்சி (Chronic Appendicitis).
அக்யூட் அப்பெண்டிசைட்டிஸ்
இளம் வயதினருக்கு இந்த வகைப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம். இவ்வகை நோயினால் அதிகப்படியான வயிற்று வலி ஏற்படும். உடனடியாக வலி தெரிவதால் மருத்துவர்களால், இதனை எளிதில் கண்டறிய முடியும். இதற்கு உடனடி அறுவைசிகிச்சை தேவை.
க்ரானிக் அப்பெண்டிசைட்டிஸ்
வயதில் பெரியவர்களுக்கு இந்த வகை அழற்சி ஏற்படும் வாய்ப்பு அதிகம். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்குச் சில நேரங்களில் உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இல்லாதபட்சத்தில் மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் அவ்வகை நோயாளிகளுக்கு நோயின் அறிகுறிகள் முழுமையாக மறைந்துவிடும். உடலின் எதிர்ப்புச்சக்தி குறைந்தாலோ அல்லது நோய்த் தொற்று ஏற்படும்போதோ, நோயின் அறிகுறிகள் மீண்டும் தோன்றும். இந்த நிலை மீண்டும் மீண்டும் தோன்றும்போது, நோயாளி திடீரென ஆபத்தான நிலைக்குச் சென்றுவிடுவார். அதனால், அறுவை சிகிச்சை மூலம் குடல் வாலை அகற்றிவிடுவதே மிகவும் சிறந்தது.

பாதிப்புகள் என்ன?
மருத்துவம் செய்யாமல் இருந்தால் நோய்த்தொற்று பரவி, வயிற்றுப்பை அழற்சியை (Peritionitis) ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தீர்வும் தவிர்க்கும் முறைகளும்
அப்பெண்டிசைட்டிஸ் பிரச்னைக்கு அறுவைசிகிச்சை மட்டுமே தீர்வு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும் சுகாதாரமான உணவைச் சாப்பிடுவதன்மூலமும் அவர்களுக்கு அப்பெண்டிசைட்டிஸ் வராமல் தடுத்துவிடலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை
என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
திறந்த அறுவைசிகிச்சை (Open Surgery) முறையில் வயிற்றைத் திறந்து, குடல்வாலை வெட்டி எடுத்துவிட்டு, அந்த இடத்தில் தையல் போட்டு மூடிவிடுவார்கள். இந்த அறுவைசிகிச்சை முறை மருத்துவர்களால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவதில்லை.
‘லேப்ராஸ்கோபிக்’ (Laparoscopic) அறுவைசிகிச்சை முறையில், வயிற்றைக் கிழிக்காமல் 3 அல்லது 4 துளைகள் போட்டு, அவற்றின் வழியாகக் குடல்வாலை அகற்றிவிடலாம். இத்தகைய அறுவை சிகிச்சையில் தழும்புகள் ஏற்படுவதில்லை. வலியும் குறைவு. இந்த அறுவைசிகிச்சை செய்து கொண்டு 4 நாள்களில் நோயாளி வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும். சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாத நிலை ஏற்படும். அத்தகையோருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து கள் பரிந்துரைக்கப்படும். லேப்ராஸ்கோபிக்’ அறுவைசிகிச்சை என்பது ரொம்ப சிம்பிளானது. வயிற்று வலியை அலட்சியப் படுத்தாமல் ஆரம்பத்திலேயே அப்பெண்டி சைட்டிஸ் பிரச்னையை அடையாளம் கண்டுவிட்டால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஆரோக்கியமாக வாழலாம்

சிறுநீரகக் கல், அப்பெண்டிசைட்டிஸ் இடையேயான வேறுபாடுகளை எப்படி அறிவது?
அப்பெண்டிசைட்டிஸ் அறிகுறிகள் சிறுநீரகக் கல் வலியைப் போன்றுதான் இருக்கும். இதனால் இது சிறுநீரகக் கல் என்று முடிவுக்கு வந்துவிடுபவர்களே அதிகம். ஆனால், சிறுநீரகத்தில் கல் இருந்தால் அந்த வலி அடிவயிற்றில் தொடங்கி முதுகு, கழுத்து, தோள்பட்டை வரை கூடப் பரவும். அதேபோல, சிறுநீர்ப்பையில் கல் இருந்தால் அது தொடைப்பகுதி வரை பரவும். ஆனால், அப்பெண்டிசைட்டிஸ் வலியானது தொப்புளைச் சுற்றியும் அடிவயிற்றிலும் மட்டுமே இருக்கும். மற்ற இடங்களுக்குப் பரவாது. மேலும், சிறுநீர் கழிக்கும்போது வலி இருக்காது.p40c1

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

nathan

நம்மை காக்கும் இம்யூனிட்டி! – ஹெல்த்தி வழிகாட்டி

nathan

ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது.

nathan

கர்ப்பகாலத்தில் அதிகமாக இனிப்பு சாப்பிட்டால் குழந்தைக்கு ஆஸ்துமா வருமா?

nathan

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கும் வீட்டுத் தீர்வுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா காலை எழுந்ததும் இந்த பானத்தை குடித்தால் நாள் முழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம்!

nathan

உங்க கண்ணைக் காத்திட எளிய வழிகள்!அவசியம் படிக்க..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

nathan

தங்கத்தை இடுப்புக்கு கீழ் அணியக்கூடாது ஏன்?

nathan