கருப்பை இருக்கும் இடத்தில் இல்லாமல், சற்று அல்லது அதிகமாக கீழிறங்கி இருக்கும் நிலையே கருப்பை இறக்கம். இது பிரசவ கால அஜாக்கிரதையால் பெரும்பாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.கருப்பை என்பது ஒரு உள்ளுருப்பாகும். இது பெரும்பாலும் வெளியே வருவதில்லை. கருப்பையை முக்கிய தசைகள் கீழிருந்து தாங்கிக் கொண்டு இருக்கின்றன. கருப்பை சரியான இடத்தில் பத்திரமாக இருக்கும் வகையில், பல்வேறு அரண்கள் அதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
பல காரணங்களால், கருப்பையை தாங்கிக் கொண்டிருக்கும் தசைகள் தளர்வடைந்தாலோ, கருப்பை அரண்கள் வலுவிழந்தாலோ, உள்ளுருப்பாக இருக்கும் கருப்பை கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்குகிறது. இதுவே கருப்பை இறக்கம் எனப்படும். இது நான்கு வகைகளில் அமைகிறது. அதாவது, எப்போதாவது முக்கும் போதும், இரும்பும் போதும், தும்பும் போதும் சிறிதளவு அடி இறங்குவது.
மற்றொன்று நாக்கின் நுனி போல எப்போதுமே ஓர் சதைப் பகுதி அடியில் தோன்றும். இந்த நிலையில் படுத்துக் கொள்ளும் போது அது உள்ளே சென்று விடும். மூன்றாவதாக, சற்று வெளியில் தொங்கும் சதையானது, எப்போதுமே வெளியே தொங்கியவாறு இருத்தல். இந்த நிலையில், சிறுநீர் கழிக்கவும் சிக்கல் ஏற்படும்.
நான்காவது நிலைதான் மிகவும் மோசமான நிலையாகும். இதில், கருப்பை வெளியே தொங்கும். இதனால் பெண்களுக்கு பல சிரமங்கள் ஏற்படும். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படும் போது, பெண்கள் உடனடியாக மருத்துவமனையை அணுகுவது நல்லது.
முதல் கட்டத்திலேயே பெண்கள் மருத்துவரை அணுகுவதால், சில தகுந்த உடற்பயிற்சிகள் மூலமாக சரி செய்யலாம் என்பது ஆறுதலான விஷயமாகும்.