மருத்துவ குறிப்பு

மாதவிலக்கு சந்தேகங்கள்

மகளிர் மட்டும்

நேற்று பூப்பெய்திய சிறுமி முதல் மெனோபாஸை எட்டிவிட்ட பெண் வரை மாதவிலக்கு குறித்த சந்தேகங்கள் எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் தொடரவே செய்கிறது. எது சரி… எது தவறு என்கிற குழப்பங்களும் தீர்ந்த பாடாக இல்லை. எத்தனை முறை கேட்டாலும் தீராத மாதவிடாய் தொடர்பான சில அடிப்படை சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார் மருத்துவர் நிவேதிதா.

மாதவிலக்கு எத்தனை நாட்கள் வரை நீடிப்பது சரியானது?

பொதுவாக 3 முதல் 5 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால், 2 முதல் 7 நாட்கள் வரை ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஒரு வாரத்துக்கு மேலும் தொடர்ந்தாலோ, எப்போதும் இல்லாதது போல திடீரென அந்த சுழற்சியில் வித்தியாசங்கள் தெரிந்தாலோ மருத்துவரை அணுக வேண்டும்.

மாதவிலக்கின் போது எவ்வளவு ரத்தம் வெளியேறலாம்?

2 டேபிள்ஸ்பூன் என்பது பொதுவான அளவு. ஆனால், எந்தப் பெண்ணாலும் இந்த ரத்தப் போக்கின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. அதுவே ரத்தப் போக்கு அதிகரிப்பதை அவர்களால் உணர முடியும். ஒரு மணி நேரத்துக்கொரு முறை நாப்கின் மாற்றும் அளவுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

மாதவிலக்கு வராமலிருப்பது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

இள வயதுப் பெண்களிடம் இது மிகவும் சகஜம். மன அழுத்தம், திடீரென எடை குறைப்பது, அளவுக்கதிக உடற்பயிற்சி போன்றவற்றின் காரணமாக மாதவிலக்கு வராமல் இருக்கலாம். கர்ப்பத் தடை மாத்திரைகளின் விளைவாலும் அப்படி நிகழலாம். எப்போதும் சுழற்சி முறையாக இருந்துவிட்டு, திடீரென தடைப்பட்டால் மட்டும் மருத்துவரை அணுகலாம்.

எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வரலாம்?

21 முதல் 35 நாட்களுக்கு ஒரு முறை வருவது இயல்பானது. பூப்படைந்த புதிதிலும், அதைத் தொடர்ந்த சில வருடங்களிலும் இந்த சுழற்சி 21 முதல் 45 நாட்கள் வரைகூட நீளலாம். ஒவ்வொரு மாதவிலக்கின் தேதியையும் குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் பின்னாளில் அது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா என மருத்துவர் ஆராய வசதியாக இருக்கும்.

பழுப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் ரத்தப் போக்கு இருப்பது ஆபத்தானதா?

அடர் சிவப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறம் வரை ரத்தப் போக்கின் நிறமானது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு மாதவிலக்கிலேயே இப்படி நிறமாற்றம் நிகழலாம். பயம் வேண்டாம்.

மாதவிலக்கின் போது ரத்தப் போக்கானது கட்டிகளாக வெளிப்படுவது சகஜமானதா?

பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கின் போது இதை சந்திக்கிறார்கள். குறைந்த அளவில் சின்னக் கட்டிகளாக வெளியேறினால் பயப்படத் தேவையில்லை. பெரிய ரத்தக் கட்டிகளாக வெளியேறினாலோ, உடனடியாக நாப்கினை நனைக்கிற அளவுக்கு ரத்தப் போக்கு அதிகமாக இருந்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

மாதவிலக்கு நாட்களில் ஏற்படுகிற வயிறு மற்றும் முதுகு வலி சாதாரணமானது தானா?

லேசான வலி ஏற்படுவது சாதாரணமானதுதான். பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்தாலோ, நீண்ட நேரம் நீடித்தாலோ அது ஏதேனும் பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம். எண்டோமெட்ரியாசிஸ் எனப்படுகிற கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் ஏற்படுகிற வளர்ச்சியின் விளைவாகவும் இருக்கலாம். அலட்சியம் வேண்டாம்.

ld3792

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button