நல்லது என்று கூறினால் கண்மூடித்தனமாக அதை பின்பற்றும் மனோபாவம் கொண்டுள்ளவர்கள் நாம். அதையும் சரியான முறையில் செய்பவர்கள் குறைவு தான். சிலர் கூறிய சிலநாட்கள் பின்பற்றுவார்கள், சிலர் ஓரிரு மாதங்கள் பின்பற்றி மெல்ல மெல்ல மறந்துவிடுவார்கள், சிலர் அதிகபிரசங்கியாக அளவிற்கு அதிகமாக செய்ய தொடங்குவார்கள்.
இப்படி செய்வதால் நல்ல பழக்கங்கள் கூட நமது உடலுக்கு தீய பலனை தான் அளிக்கின்றன. இது நாம் காலையில் பல் துலக்குவதில் ஆரம்பித்து, இரவு உணவு சாப்பிடும் வரை என கூறிக் கொண்டே போகலாம். இதில் முக்கியமாக நாம் நல்ல பழக்கம் என்ற பெயரில் செய்யும் தவறுகளை பற்றி காணலாம்…
சாப்பிட்டபிறகு பல் துலக்கும் பழக்கம் உடல்நல நிபுணர்கள் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பல் துலக்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறுவார்கள். ஆனால், பிளாஸ்டிக் ப்ரிஷல்ஸ் கொண்ட டூத் பிரஷை கொண்டு அதிக முறை பல் துலக்குவது பற்களின் எனாமலை அரித்துவிடுகிறது. இது உங்களது பற்களின் வலிமையை குறைத்துவிடும்.
ஆன்டிபயோடிக் சோப்பு சுற்றுப்புற மாசினால் சருமம் சீர்கெடும் என்பதால் வெளியில் சென்று வந்தாலே ஆன்டி-பயோடிக் சோப்பு பயன்படுத்தி முகம் கழுவுகிறோம். இதனால் சருமத்தில் இருக்கும் நச்சுகள் அழிகிறது என்பது நமது நம்பிக்கை. சில நிபுணர்கள் இவற்றுக்கு பதிலாக சாதாரண சோப்பு பயன்படுத்தினாலே போதும் என கூறுகிறார்கள். ஏனெனில், அதிகம் ஆன்டிபயோடிக் சோப்பு பயன்படுத்துவதால் சரும வறட்சி போன்ற பாதிப்பு ஏற்படலாம்.
சிறு சிறு உணவுகள் மூன்று வேளை அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக, ஆறு வேளையாக பிரித்து சாப்பிடுவது உடல் எடை கூடாமல் தடுக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவற்றை மாலை ஏழு மணிக்குள் முடித்துக் கொள்வது நல்லது. சிலர் பசியின் காரணமாக நள்ளிரவில் எல்லாம் சாப்பிட முயல்கிறார்கள், இது உடல் எடையை அதிகரிக்க தான் செய்யும்.
தினமும் எடை தூக்குவது தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது தான். ஆனால், தினமும் எடை தூக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், தொடர்ந்து ஒரே தசை பகுதிகளுக்கு பயிற்சி தருவது தவறான அணுகுமுறை ஆகும். உங்கள் தசைகள் உடல்நலன் பெறுவதற்கான நேரம் அளிக்க வேண்டியது அவசியம்.
கூடுதல் பொருட்கள் உடல்நலனை அதிகரிக்க, உடல்சக்தியை அதிகரிக்க அதிகப்படியாக கூடுதல் பொருட்கள் (ப்ரோடீன் பவுடர்கள் போன்றவை) எடுத்துக் கொள்வது உடல்நலனுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதிகப்படியான தூக்கம் தூக்கமின்மை எப்படி உடல்நலனுக்கு தீமையானதோ, அதே போல தான் அதிகப்படியான தூக்கமும். இது உடல்நல சமநிலையை கெடுக்கிறது. உடல் சோர்வு, களைப்பு போன்றவை ஏற்பட இது காரணமாக இருக்கிறது.
பாட்டில் குடிநீர் தினமும் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் குடிநீர் பருக வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். இது உடல்நலத்திற்கு நல்லதும் கூட, ஆனால், இதை பாட்டிலில் பருக வேண்டாம் என்று கூறப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் இருக்கும் பி.பிஏ (Bisphenol A) உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்பது தான் இதற்கான காரணம்.
சன்பாத் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி மனிதர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஊட்டச்சத்து தான். ஆனால், அது அதிகாலையில் பெறவேண்டும். மொட்டை வெயிலில் குப்புறப்படுத்துக் கொண்டு சன்பாத் எடுப்பது தவறான முறை.
தியானம் தியானம் செய்வது உங்களது மனநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால், இதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் செய்ய வேண்டும். நினைக்கும் போதெல்லாம் கண்ட இடத்தில் செய்வதால் உங்களுக்கு சரியான பலன் கிடைக்காது.