நோ ஆயில்… நோ பாயில்! இதுவே இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமாரின் தாரக மந்திரம். `உணவே மருந்து’ என்ற வாசகத்தை நாம் பல இடங்களில், நம் முன்னோர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் உண்ணும் உணவை எப்படி மருந்தாக மாற்றுவது என்பது பற்றிப் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அப்படியான இயற்கை சமையல் முறை பற்றியும், அதை எப்படி மருந்தாக மாற்றுவது என்பது பற்றியும், இந்தத் துறையில் அவர் நுழைந்த அனுபவத்தையும் விவரிக்கிறார் படையல் சிவக்குமார்…
இயற்கை சமையல் முறை
“கோவையில் பிறந்து வளர்ந்தேன். சிறு வயதில் இருந்தே இயல்பாகவே எனக்குள் ஓர் ஆன்மிகத் தேடல் இருந்தது. சிவ வழிபாடு செய்வதும், விரதங்கள் மேற்கொள்வதும் என் வழக்கமாக இருந்தது. அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சிகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. அவற்றையும் முறையாகக் கற்றுக்கொண்டேன். அவரது மறைவுக்குப் பின்னர் ஸ்ரீலஸ்ரீ ஜெய்குருஜீ அவர்களின் ‘ஞானோதயம்’ என்கிற ஆன்மிக அமைப்பில் இணைந்தேன். அங்கே உடல், மனம் , உயிர் ஆரோக்யத்துக்கான பயிற்சிகள், உணவு முறைகள், உணவை எப்படி மருந்தாக மாற்றுவது என பல நுட்பமான விஷயங்களைக் கற்றுத் தந்தார்கள். அவற்றையும் கற்றுக்கொண்டேன்.படையல் சிவக்குமார்
இயற்கை மருத்துவர் சிவகாசி மாறன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் இயற்கை உணவின் சிறப்பு மற்றும் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை ஆகியவற்றைக் கற்றுக்கொண்டேன். நான் கற்றுக்கொண்ட இயற்கை உணவு வகைகளை மேலும் மெருகேற்றினேன். வகை வகையாக, வண்ணமயமாக, எண்ணெயில்லாமல், அடுப்பில்லாமல் சுமார் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை இந்த முறையில் செய்ய முடியும். இப்போது இந்த எளிய சமையல் முறையை தயாரிக்கப் பலருக்கும் பயிற்சியளித்தும் வருகிறேன்.
இயற்கையான முறையில் எண்ணெய், அடுப்பில்லாமல் பீட்ரூட் சாதம், பீர்கங்காய் சாதம், இயற்கை தயிர் சாதம், கறிவேப்பிலை கீர், இயற்கை தேங்காய்ப்பால் இட்லி, கறிவேப்பிலைக் குழம்பு, வாழைப்பூ பசும் பொரியல், புடலங்காய் கட்லெட், வரகு அவல் லட்டு, சுவையூட்டப்பட்ட முளைப் பயறு (காரம்), சுவையூட்டப்பட்ட வெண்டை (இனிப்பு), சுவையூட்டப்பட்ட வெண்டை (காரம்), இயற்கை ஊறுகாய், இயற்கை அல்வா, இயற்கை பீடா… என 100-க்கும் மேற்பட்ட வகைகளைச் செய்ய முடியும்.
இயற்கை உணவைப் பற்றியும், அடுப்பில்லா சமையல் முறை பற்றியும் தெரிந்துகொள்வதற்கு முன்னர் உணவைப் பற்றிய சில புரிதல்கள் நமக்கு வேண்டும். அவை…
உணவே மருந்து
நாம் உண்ணும் உணவு உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் உருவாக்கி, வளர்த்து, காத்தும் வருகிறது. நமக்கு வரும் 90 சதவிகித உடல் கோளாறுகளுக்கு உணவே முக்கியக் காரணம்.
அன்னத்தால் உண்டாக்கப்பட்டது இந்த உடல். ஆகாரமே ஒவ்வோர் உயிருக்கும் வாழ்வின் ஆதாரம். உணவின் இன்றியமையாமை பற்றி வேதங்களில்கூடத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இயற்கை உணவு
எதற்கு சாப்பிட வேண்டும்?
நம் உடல், மனம், உயிர் ஆரோக்கியத்துடன் இருக்க உணவு அவசியம். உணவில்லையேல் உயிர் வாழ முடியாது.
நாம் உண்ணும் உணவு ரசமாகி, ரத்தமாகி, கொழுப்பாகி, எலும்பாகி, எலும்பு மஜ்ஜையாகி, விந்துவாகவும் மாறுகிறது. ஆக, நாம் உண்ணும் உணவின் தன்மை எப்படியோ அப்படியே நம் வித்தின் தன்மையும் இருக்கும். நம் வித்தின் தன்மை எப்படியோ அப்படியே நமது சந்ததியினரும் இருப்பார்கள். ஆக, நாம் உண்ணும் உணவை சத்துக் குறையாமல், அழியாமல் உடல், மன, உயிருக்கான ஆற்றலாக மாற வேண்டும்.
உணவு தயாரித்தல்
சமைத்தல் என்றால் என்ன… சமைப்பதால் ஏற்படும் தீமைகள்
சமைத்தல் என்றால் `பக்குவப்படுத்துதல்’ என்று பொருள். எப்படிப் பக்குவப்படுத்துவது?
உணவுப் பொருளின் சத்துக் குறையாமல், அழியாமல் இருப்பதையே பக்குவப்படுத்துதல் என்கிறோம். அதுபோல் நாம் உண்ணும் உணவு, முழுமை அடைய வேண்டும். சரி… எப்போது முழுமை அடையும்? உணவு, உயிராற்றலாக மாறும்போதுதான் உண்ணுதல் முழுமையடையும். ஆனால், நாம் அடுப்பில் சமைக்கும்போது இவை எதுவும் நிகழ்வதில்லை. இந்த வகையில், நாம் சமைக்கும்போது உணவுப் பொருள்களின் உயிர்ச்சத்துகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. உயிரற்ற சக்கையையே உண்கிறோம். எனவே, உண்ணுதலின் நோக்கம் முற்றிலும் மாறிவிடுகிறது.
இயற்கை உணவு
இயற்கை படைத்த, சூரியனால் சமைத்த உணவை அதன் தன்மை மாறாமல், சத்துக் குறையாமல், அழியாமல் உண்ணும் வகைகளை `இயற்கை உணவு’ என்கிறோம்.
அதாவது ஆங்கிலத்தில், `This is uncooked food; But sun cooked Food’
இயற்கை உணவுகள்
இயற்கை உணவை உண்பதால் ஏற்படும் நன்மைகள்
* சமைக்காமல் உண்பதால், உணவுப் பொருள்களின் உயிர்ச்சத்துகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்தாக மாறுகிறது.
* கழிவுகளின் தேக்கமே நோய். இயற்கை உணவு உண்பதால், உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் முற்றிலும் நீக்கப்படும். இதனால் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
* உமிழ்நீரை, `உயிர் நீர்’ என்பர். இயற்கை உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு சேர்த்துச் சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகும்.
* உணவுக்கும் குணத்துக்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு. இயற்கை உணவு நாளடைவில் நம்முள் சாத்வீக குணத்தை மேலோங்கச் செய்யும். மனம் அமைதி பெறும். செயல்களில் நிதானம் கைகூடும். நிதானம், பலவிதங்களில் நம்மைப் பண்படுத்தும்.
* எண்ணெயில்லாமல் சமைக்கப்படுவதால், இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். இதய நோய் இருந்தால், இந்த இயற்கை உணவே மருந்தாகிக் காக்கும்.
* சமைத்து உண்ணும் உணவின் அளவைவிட, சமைக்காமல் உண்ணும் உணவின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இது உடல் எடை அதிகரிக்காமல், சீராகப் பராமரிக்க உதவும்.
வெண்டைக்காய்
* சமைக்கும் நேர அளவு மிகவும் குறைவு.
* நாள்பட்ட நோய்களான நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களும் உயிர்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்ற நோய்களும் குணமாக இயற்கை உணவு துணைநிற்கும்.
* உடல் பருமன், மாதவிடாய்ப் பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறு, செரிமானமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இயற்கை உணவின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.
இயற்கை உணவு முறைப் பயிற்சி
மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை. நாமும், நம் சந்ததியினரும் ஆரோக்கியமாக வாழ அடுப்பில்லாமல், நெருப்பில்லாமல் தயாரிக்கப்படும் இயற்கை உணவுகளே தீர்வு” என்கிறார் படையல் சிவக்குமார்.