மருத்துவ குறிப்பு

தைராய்டு புற்றுநோயைத் தவிர்ப்போம்!

சாதாரண தொண்டை வலி என்று சென்றவருக்கு, கழுத்து வீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தவே, சில பரிசோதனைகளை செய்து வரும்படி அனுப்பினார் மருத்துவர். பரிசோதனை முடிவுகள் அவர் சந்தேகத்தை உறுதி செய்தது. ஆம், அவருக்கு வந்திருப்பது தைராய்டு புற்றுநோய். தைராய்டு சுரப்பியில் கூட புற்றுநோய் வருமா என்று வியந்தது அந்த பெண்ணின் குடும்பம். `உலகம் முழுவதும் புற்றுநோயால்

பாதிக்கப்படுபவர்களில் சுமார் நான்கு சதவிகிதம் பேர் தைராய்டு புற்றுநோய் பாதிப்பு உடையவர்கள்’ என்கிறது அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை ஒன்று. சாதாரண கட்டியாக வந்து, புற்றுநோயாக மாறி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது தைராய்டு புற்றுநோய். ஏன் வருகிறது? இதற்கான சிகிச்சை என்ன?

தைராய்டு

தைராய்டு, நமது முன் கழுத்தில் பட்டாம்பூச்சி வடிவில் அமைந்து உள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஒன்று. இந்த சுரப்பியில் இருந்து தைராக்சின் (Thyroxine), டிரையடோதைரோனின் (Triiodothyronine) என இரண்டு முக்கியமான சுரப்புகள் உற்பத்தியாகின்றன. இதில், தைராக்சினை, `டி4′ (T4) என்றும் டிரையடோதைரோனினை, `டி3′ (T3) என்றும் சொல்வார்கள். இந்த இரண்டு ஹார்மோன்களையும், பிட்யூட்டரியில் இருந்து உருவாகும் தைராய்டு ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் (டி.எஸ்.ஹெச்) (Thyroid stimulating hormone) தூண்டுகிறது. நமது இதயத்துடிப்பைப் பராமரிப்பது, ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிப்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கண்காணிப்பது உட்பட எண்ணற்ற, முக்கியமானப் பணிகளை இந்த தைராய்டில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் செய்கின்றன.

தைராய்டு பிரச்னைகளும் புற்றுநோயும்

பொதுவாக, தைராய்டு டி3, டி4 ஹார்மோன்கள் குறைவாகவோ அதிகமாகவோ சுரக்கும் பிரச்னைதான் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பி மிகக் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை, `ஹைப்போ தைராய்டிஸம்’ என்றும் தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை `ஹைப்பர் தைராய்டிஸம்’ என்றும் சொல்வார்கள்.

இந்தப் பிரச்னையைத் தவிர தைராய்டு சுரப்பியில் கட்டி (சிஸ்ட்) உருவாகும் பிரச்னையும் சிலருக்கு ஏற்படும். இவர்களுக்கு கட்டியை அறுவைசிகிச்சை மூலம் நீக்கிவிட்டு, தைராக்சின் மாத்திரைகள் கொடுப்பார்கள்.

தைராய்டு புற்றுநோயின் வகைகள்.

பாப்பிலரி தைராய்டு புற்றுநோய் (Papillary thyroid cancer), ஃபாலிகுலர் தைராய்டு புற்றுநோய் (Follicular thyroid cancer), மெடுல்லரி தைராய்டு புற்றுநோய் (Medullary thyroid Cancer), அனபிளாஸ்டிக் தைராய்டு புற்றுநோய் (Anaplastic thyroid cancer) என்று பொதுவாக நான்கு வகைகளாக தைராய்டு புற்றுநோயைப் பிரித்துள்ளார்கள். இந்த ஒவ்வொரு வகையிலும் சில நிலைகள் (Stages) உள்ளன.

பரிசோதனைகள்.

ரத்தத்தில் டி3, டி4, டி.எஸ்.ஹெச் சுரப்பின் அளவை அறிவதற்காக ரத்தப்பரிசோதனை செய்யப்படும்.

சிலருக்கு தைராய்டு புற்றுநோய் இருந்தாலும்கூட தைராய்டு சுரப்பின் அளவு இயல்பாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தைராய்டு கட்டியை எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்து அதன் உடலியல் மாறுபாடு (பிசியாலஜிக்கல் வேரியேஷன்) பரிசோதிக்கப்படும். இதில் தைராய்டு கட்டியின் அளவு எவ்வளவு என்று கண்டறியப்படும். தொடர்ந்து, எஃப்.என்.ஏ (FNA – Fine Needle Aspiration) பரிசோதனை மூலம் தைராய்டு கட்டி உள்ள இடத்தில் இருக்கும் திசுவை எடுத்துப் பரிசோதிக்கப்படும். இதில், அந்தக் கட்டி சாதாரணக் கட்டியா அல்லது புற்றுநோய்க் கட்டியா என்பதைக் கண்டறியலாம்.

தைராய்டு புற்றுநோய்க்கான சிகிச்சைகள்.

தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு, உடனடி சிகிச்சையாக எந்த இடத்தில் கட்டி உள்ளதோ அந்த இடத்தில் அறுவைசிகிச்சை செய்து தைராய்டு கட்டியை அகற்ற வேண்டும்.

சிலருக்கு முழு தைராய்டு சுரப்பியையுமே அகற்றவேண்டி இருக்கலாம். சிலருக்கு, பட்டாம்பூச்சி போன்ற தைராய்டு சுரப்பியின் ஏதேனும் ஒரு பாகத்தை (Lobe) மட்டும் நீக்கவேண்டி இருக்கலாம். இந்த முதல் கட்ட அறுவைசிகிச்சை முடிந்த பின்னர் அறுவைசிகிச்சையில் நீக்கப்பட்ட பகுதி, பயாப்சி (Biopsy) பரிசோதனைக்கு அனுப்பப்படும். இந்தப் பரிசோதனையின் முடிவில்தான், என்ன வகை தைராய்டு புற்றுநோய் என்றும் எந்த நிலை என்றும் துல்லியமாக அறிய முடியும். பிறகு அதற்கு ஏற்ப அயோடின் சிகிச்சையோ கீமோதெரப்பியோ செய்யப்படும்.

ரேடியோஆக்டிவ் அயோடின் டீரிட்மென்ட் (Radioactive Iodine Treatment)

பொதுவாக, தைராய்டு புற்றுநோய்க்கு கீமோதெரப்பி பெரும்பாலும் தேவைப்படாது. அதற்குப் பதிலாக, `ரேடியோஆக்டிவ் அயோடின் டீரிட்மென்ட்’ என்று ஒரு சிகிச்சை தரப்படுகிறது. புற்றுநோய் செல்கள் உடலின் வேறு பாகங்களில் எங்கேனும் பரவி இருந்தால், அதைக் களைவதற் காகவே இந்த சிகிச்சைத் தரப்படுகிறது. தைராய்டு நீக்க அறுவைசிகிச்சை (Thyroidectomy) செய்த ஆறு வாரங்கள் வரை உடலில் தைராய்டு சுரப்பு இருக்கும் என்பதால், அறுவைசிகிச்சை முடிந்த ஆறு வாரங்கள் கழித்தே இந்த அயோடின் சிகிச்சை செய்யப்படும்.

தைராய்டு உடலில் இருந்தால், அயோடின் சிகிச்சைத் துல்லியமாக இருக்காது. இந்த சிகிச்சையின்போது நோயாளிக்கு அயோடின் மருந்து அளிக்கப்படும்.

பிறகு, 24 மணி நேரம் கழித்து, நோயாளியின் முழு உடலும் ஸ்கேன் செய்யப்படும். புற்றுநோய் செல்கள் வேறு எங்கும் பரவி இருந்தால், அந்த இடங்களில் அயோடின் படிந்து ஸ்கேனில் காட்டும். பிறகு, ரேடியோ ஆக்டிவ் அயோடின் என்ற கதிரியக்கச் சிகிச்சை மூலம், நோயாளியின் உடலில் பரவி உள்ள புற்றுசெல்கள் அழிக்கப்படும்.

தைராய்டு புற்றுநோய் ஆபத்தானதா?

உண்மையில் தைராய்டு புற்றுநோய், ஒரு புற்றுநோயே அல்ல. ஏனெனில், இதற்கு கீமோ போன்ற கடுமையான சிகிச்சைகள் ஏதும் இல்லை. தைராய்டு சுரப்பியை நீக்கியபின், ரேடியோ ஆக்டிவ் அயோடின் டீரிட்மென்ட் எடுத்துக் கொண்டால் போதும், வாழ்நாள் முழுதும் தைராக்சின் மாத்திரை எடுத்துக்கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் முழு ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழலாம்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள்.

திடீரென எடை இழப்பு.

முன் கழுத்து வீக்கம் மற்றும் வலி.

உடல் சோர்வு.

மூட் ஸ்விங்ஸ்.

முடி உதிர்தல்.

மலச்சிக்கல்.

சீரற்ற மாதவிடாய் சுழற்சி.

அதிக ரத்தப்போக்கு, குறைந்த ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்க் கோளாறுகள்.pp52a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button