26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
shutterstock 272204330 15026
ஆரோக்கிய உணவு

விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்!

ஏலக்காய்… கேசரி, அல்வா, பாயசம், லட்டு உள்பட பல இனிப்புகளில் தவறாமல் இடம்பெற்றிருக்கும். திருப்பதி லட்டுப் பிரசாதத்தின் தனி மணத்துக்குக் காரணமாக இருப்பதும் இதுதான். இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்தது. தமிழில் `ஏலக்காய்’, இந்தியில் ‘எலைச்சி’, மலையாளத்தில் ‘ஏலக்கா’, தெலுங்கில் ‘யேலகுலு’, கன்னடத்தில் ‘ஏலக்கி’, மராத்தியில் ‘வெல்ச்சி’, குஜராத்தியில் ‘இலாய்ச்சி’ என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. உணவில் மணம் சேர்க்கப் பயன்படுத்தப்பட்டாலும், எக்கச்சக்கமான மருத்துவப் பலன்களைத் தரக்கூடியது. பொட்டாசியம், கால்சியம், சல்ஃபர், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீஸ் ஆகியவை ஏலக்காயில் நிறைந்துள்ளன. ஏலக்காய், பல உடல் பிரச்னைகளுக்கு எளிய முறையில் தீர்வு தரக்கூடியது. அவை…

ஏலக்காய் அல்வா

செரிமானத் தொல்லை

இது செரிமானத் தொல்லைகளுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படக்கூடியது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அஜீரணம், வயிற்றெரிச்சல் போன்ற பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு தீர்வு தரும். வாய்வு, வயிறு உப்புசம், வயிற்றில் தசைப்பிடிப்பு, வயிற்றுவலி போன்றவற்றுக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. ஏலக்காய் விதைகளை அப்படியே மென்று விழுங்குவதன் மூலம் செரிமானப் பிரச்னைகளைக் குறைக்கலாம் அல்லது இதன் விதைகளைப் பொடியாக்கி, உணவில் தூவலாம்; ஏலக்காயில் டீ தயாரித்தும் குடிக்கலாம்.

வாய் துர்நாற்றம் நிறுத்தும்!

ஏலம், பாக்டீரியாவுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது. எனவே, வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும். நறுமணம் தரக்கூடியது என்பதால், உணவு சாப்பிட்டவுடன் இரண்டு ஏலத்தை எடுத்து மென்றுவந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும். இது தவிர ஏலக்காயில் டீ செய்து குடிப்பதும், வெதுவெதுப்பான ஏலக்காய் டீயில் வாய் கொப்பளிப்பதும் வாய் துர்நாற்றத்துக்குச் சிறந்த தீர்வு தரும். வாய்ப்புண் மற்றும் வாயில் ஏற்படும் பல்வேறு கிருமித்தொற்றுகளுக்கும் தீர்வாக அமையும்.

விக்கல் போக்கும்!

விக்கலை நிறுத்த உதவுவது ஏலக்காய். இரண்டு ஏலக்காய் விதைகளை மென்று தின்றால் விக்கல் தீரும். இதேபோல் தசைபிடிப்புப் பிரச்னைக்கும் தீர்வு தரும்.

ஏலக்காய் குவியல்

நச்சு நீக்கும்!

இதில் வைட்டமின் ஏ, பி, சி, நியாசின் (Niacin), ரிபோஃபிளேவின் (Riboflavin) போன்றவை இருக்கின்றன. இவை ரத்தத்தைச் சுத்திகரிக்கும். அதிகப்படியான யூரியா, கால்சியம் மற்றும் நச்சுப்பொருட்களை சிறுநீரகத்தில் இருந்து வெளியேற்றும். சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் வலி, எரிச்சல், சிறுநீரகக்கல் போன்றவற்றைக் குறைக்கும். சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கிருமித்தொற்று சிகிச்சையில் இது பயன்படுத்தப்படுகிறது.

மனஅழுத்தம் குறைக்கும்!

மனஅழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக, ஏலக்காய் டீ ஆயுர்வேத மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த டீ உடல் நச்சுகளை வெளியேற்றி, உடலில் உள்ள செல்களைப் புதுப்பிப்பதால் மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.

சளித்தொல்லைக்கு நிவாரணம்!

சளித்தொல்லையிலிருந்து மீள ஏலக்காய் டீ சிறந்த வழி. தலைவலி, ஆஸ்துமாவுக்கும் இது நல்ல மருந்து. வாந்தி மற்றும் குமட்டலுக்கும் தீர்வு தரும். ஏலக்காயுடன் சிறிது லவங்கப் பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறும்.

ஏலக்காய்

பசியின்மை விரட்டும்!

இது, பசியைத் தூண்டும் பொருள்களில் ஒன்று. பசியில்லாமல் இருக்கும் வேளைகளில், ஒன்றிரண்டு ஏலக்காய் விதைகளை மென்றால் பசியெடுக்க ஆரம்பிக்கும்.

தோல் பிரச்னைகள் துரத்தும்!

ஏலக்காய் எண்ணெய் தோலில் உள்ள புள்ளிகளை நீக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் சரும அழகு கூடும். கறுப்பு ஏலக்காய் தோலில் ஏற்படும் அலர்ஜிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

இதயத் துடிப்பை சீர்ப்படுத்தும்!

ஏலக்காயில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்றவை இதயத்துக்கு நன்மை செய்பவை. பொட்டாசியம் உடல் திரவங்கள் மற்றும் செல்களில் உள்ள முக்கியமான ஒன்று. தேவையான அளவு பொட்டாசியத்தை உடலுக்குத் தருவதன் மூலம் இதயத்துடிப்பை சீராக்கவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் முடியும். தினமும் இரண்டு கப் ஏலக்காய் டீ குடித்துவந்தால், இந்தப் பலன்களைப் பெறலாம்.

ஏலக்காய்

ஏலக்காயின் பெரும்பாலான நன்மைகளை ஏலக்காயில் தயாரித்த டீயைக் குடிப்பதன் மூலமே அடைய முடியும்.

ஏலக்காய் டீ தயாரிப்பது எப்படி?

தேவையானவை:

* டீ தூள் – 3 டீஸ்பூன்

* தண்ணீர் – அரை கப்

* ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்

* பால் – ஒரு கப்

* சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் தண்ணீரைக் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அதில் டீத்தூளைக் கலந்து சுமார் ஒரு நிமிடம் கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் இதில் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் சிறிதுநேரம் கொதித்ததும், அதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூளைக் கலக்க வேண்டும். பால் பொங்கியதும், டீயை இறக்கிவிட வேண்டும். இந்த டீயை தினமும் குடித்துவந்தால், ஏலக்காயின் எல்லா நன்மைகளையும் பெறலாம்.

shutterstock 272204330 15026

Related posts

இரகசியத்தை தெரிஞ்சு வச்சுக்கோங்க… மசாலா பொடிகள் சீக்கிரமே வண்டு புடிச்சு கெட்டு போகுதா..?

nathan

கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

சுவையான பூசணிக்காய் தட்டைப்பயறு கூட்டு

nathan

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan

வயதாவதை தள்ளிப்போடும் இந்த உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

nathan

கொழுப்பை குறைக்கும் குடைமிளகாய்

nathan

இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்.. வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா?

nathan

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan