உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். தினமும் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
உணவில் தினமும் ஒரு கீரையை சேர்ப்பது நல்லதா?
உணவில் தினம் ஒரு கீரையை சேர்ப்பது உடலுக்கு ஆரோக்கியம் தரும். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினமும் ஒரு கீரை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ரத்த சோகை பிரச்சினைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரை தான்.
கீரைகள் குறுகிய காலப் பயிர் வகை என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம். கீரைகள் பிரெஷ்சாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது. பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.
கீரைகளை வாங்கிய பின் 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும். பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.
கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேக வைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும். கீரைகளை வேக வைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.
மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்சினைகளையும் உருவாக்கும். கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.