காய்கறிகளில் கீரை வகைகள் மனிதனுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கின்றன. இதில் என்னென்ன சத்துக்கள், எந்தெந்த அளவுகளில் உள்ளன என்பதை அறிந்து கொண்டால், கீரையை எடுத்துக் கொள்வது அதிகமாகும். சில கீரைகளின் சத்து விபரம்:
முளைக்கீரையில் இரும்பு 22.9 மி.கி., கால்சியம் 397 மி.கி., பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும் திறனுள்ளது.
இக்கீரையை சிறிது நேரமே வேகவைக்கவும். அகத்திக் கீரையில் கால்சியம் 1,130 மைக்ரோ கிராம், இரும்பு 3.9 மி.கி., வைட்டமின் ஏ 5,400 மைக்ரோ கிராம் உள்ளன. வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. ரத்தசோகை, எலும்பு வலுக்குறைவு ஆகிய நோய்கள் வராமல் காக்கும். இதனை மூடப்பட்ட பாத்திரத்தில் வைத்து சமைக்கவும்.
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு 1.63 மி.கி, கால்சியம் 510 மி.கி, பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. இரும்புச் சத்துக் குறைவால் ரத்த சோகை உண்டாகும். கால்ஷியம் குறைவால் பற்களும் எலும்பும் வலிமை குறையும். இவையிரண்டுக்கும் பொன்னாங்கண்ணி கீரை மிகவும் ஏற்றது. இக்கீரையை அதிக நேரம் வதக்க வேண்டாம்.
பசலைக் கீரையில் வைட்டமின் ஏ 5,580 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு 1.14 மி.கி., பொட்டாசியம் 306 மி.கி போன்றவை உள்ளன.
பார்வைக் கோளாறைக் தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத் தடுக்க உதவும் பொட்டாசியச் சத்து ஆகியவை பசலைக் கீரையில் உள்ளன.
வெந்தயக் கீரையில் கால்சியம் 395 கிராம், வைட்டமின் ஏ 2340 மைக்ரோ கிராம், இரும்புச் சத்து 1.93 மி.கி. உள்ளன. பார்வைக் கோளாறு ரத்த சோகையைப்
போக்கும். இக்கீரையை நன்கு கழுவி பயன்படுத்தவும்.
புளிச்ச கீரையில் இரும்புச் சத்து 2.28 மி.கி, வைட்டமின் ஏ 2,898 மைக்ரோ கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும்.
கீரைகள் சமைத்த நீரை கீழே ஊற்றாமல் சாம்பார், சூப் அல்லது மாவு பிசையப் பயன்படுத்தவும். முட்டைகோஸில் வைட்டமின் சி 124 மி.கி. வைட்டமின் ஏ, போலிக் அமிலம், வைட்டமின் பி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை சிறிதளவு உள்ளன.
இதிலுள்ள நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவும்.
முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ 6780 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 200 மி.கி. இரும்புச் சத்து, கால்சியம் 440மி.கி. பாஸ்பரஸ் மற்றும் சிறிதளவு வைட்டமின் பி போன்றவை உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மற்றும் மாலைக்கண் நோய் ஏற்படும். எனவே முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ 75,000 மைக்ரோகிராம் கால்சியம் 830 மி.கி. போலிக் அமிலம் 93.9 மைக்ரோ கிராம் மற்றும் வைட்டமின் பி. சி. சிறிதளவு உள்ளன. முருங்கைக் கீரையைப் போன்று கறிவேப்பிலையிலும் வைட்டமின் ஏ அதிகம். பார்வைக் கோளாறுகளைக் தடுக்கும்.
புதினா கீரையில் போலிக் அமிலம் 114 மைக்ரோ கிராம், கால்ஷியம் 200மி.கி. இரும்புச் சத்து 15.6 மி.கி. வைட்டமின்கள் ஏ.பி.சி சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்க வல்லது.
கொத்தமல்லி கீரையில் கால்சியம் 184 மி.கி. இரும்பு 1042 மி.கி, வைட்டமின் ஏ 8918 மைக்ரோகிராம் உள்ளன. பாஸ்பரஸ், வைட்டமின் பி.சி, உள்ளன. பார்வைக்கோளாறு, ரத்த சோகை ஆகியவற்றைப் போக்கும்.