27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
shutterstock 120516334 1 12524
ஆரோக்கிய உணவு

காலை உணவாக கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவோர் கவனத்துக்கு…!

வைட்டமின்கள் நிறைந்தது, கொலஸ்ட்ரால் இல்லாதது, எடை குறைக்கும் என்பதுபோன்ற வாசகங்களோடு வெளிவரும் கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn flakes) விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். தினமும் காலையில் சாப்பிட ஏற்றது என்ற ஆலோசனையை நம்பி, நம்மில் பலர் வாங்கிப் பயன்படுத்தியும் இருப்போம். பாலில் கலந்து அப்படியே சாப்பிடலாம் என்பதால் நிறைய வீடுகளில் குழந்தைகளின் தினசரி காலை உணவாக இது இடம் பிடித்திருக்கிறது. மக்காச்சோளத்தில் இருக்கும் அதே சத்துகள் கார்ன் ஃப்ளேக்ஸிலும் இருக்கிறதா? இது குழந்தைகளுக்கு ஏற்றதா? இதைச் சாப்பிடுவதால் எடை குறையுமா? கார்ன் ஃப்ளேக்ஸ் குறித்த சந்தேகங்களை உணவியல் வல்லுநர் டாக்டர் பி.வி.லக்ஷ்மியிடம் கேட்டோம்.

என்ன வேறுபாடு?

மக்காச்சோளத்தில் நார்ச்சத்து, மாங்கனீஸ், வைட்டமின் பி-6, வைட்டமின் பி-3, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளம் அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு கார்ன் ஃப்ளேக்ஸாக மாற்றப்படுகிறது. இதனால் சத்துகளின் அமைப்பு மாறுவதோடு சத்துகளும் இழக்கப்படுகின்றன. சுவை கிடைக்கவேண்டும் என்பதற்காக சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதில் பல வைட்டமின்கள் செயற்கையாகச் சேர்க்கப்படுகின்றன. மக்காச்சோளம் ஓர் இயற்கை உணவு. ஆனால் கார்ன் ஃப்ளேக்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவு. ஆக, இயற்கையாகக் கிடைக்கும் உணவின் நன்மை பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஒரு பொருளில் நிச்சயமாக இருக்காது.

மருத்துவர் லக்ஷ்மிகுழந்தைகளுக்குத் தரலாமா?

மக்காச்சோளத்தை அப்படியே கொடுத்தால் குழந்தைகளுக்கு அதன் சுவை பிடிக்காது. அதனால் கார்ன் ஃப்ளேக்ஸில் இனிப்புச் சுவை தரும் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் எண்ணின் (Glycemic index) அளவு அதிகமாக உள்ளது. இதன் அளவு அதிகமாகும்போது ரத்தத்தில் மிக வேகமாகச் கலந்துவிடும். அதனால் இதைக் குழந்தைகளுக்குத் தினமும் கொடுப்பது சரியல்ல.

சத்துக் குறைபாடுகள் வரும்!

கார்ன் ஃப்ளேக்ஸில் கலோரியும், சத்துகளும் மிகக் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான சத்துகளும் இல்லை. தினமும் இதை மட்டும் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு எல்லாச் சத்துகளும் நிரம்பிய சரிவிகித உணவு கிடைக்காது. இதனால் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிடும் குழந்தைகளுக்குச் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. மிக விரைவில் மீண்டும் பசி எடுக்கும்.

என்ன கொடுக்கலாம்?

கார்ன் ஃப்ளேக்ஸ்க்குப் பதிலாக ஓட்ஸ், ராகி மால்ட், அரிசிக் கஞ்சி போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். கேழ்வரகில் உள்ள சத்துகள் குழந்தைகளுக்கு மிக மிகத் தேவையானது. குழந்தைகளுக்கு உணவு தரும்போது ஸ்பூனைத் தவிர்த்துவிட்டு கையால் ஊட்ட வேண்டும். அப்போதுதான் தாயின் ஸ்பரிசத்தோடு உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிடுவதற்கான பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கும். இது சுகாதாரமானதும்கூட. திரவ உணவுகளை இப்படிக் கொடுக்க முடியாது என்பதால் எளிதில் செரிமானமாகும் புட்டு, கேழ்வரகு தோசை மாதிரியான திட உணவுகளைக் கொடுக்கலாம்.

எடை குறைக்கிறதா?

shutterstock 120516334 (1) 12524கார்ன் ஃபிளேக்ஸ்

கார்ன் ஃப்ளேக்ஸில் சத்துகள் குறைவாக இருப்பதால், வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் உடல்எடை குறையும் என்பது உண்மைதான். ஆனால், இது பட்டினி கிடப்பதற்கு ஒப்பானது. கார்ன் ஃப்ளேக்ஸை மட்டும் சாப்பிட்டால் நமக்குத் தேவையான சத்துகளும் கிடைக்காது, பசியும் அடங்காது. ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் பசி எடுக்கும். அப்போது நான்கு இட்லி சாப்பிடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அதன்பிறகு நமது உடல் எடை கண்டிப்பாகக் குறையாது. எனவே கார்ன் ஃப்ளேக்ஸைச் சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பதில் கொஞ்சம்கூட உண்மையில்லை.

வேறு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

கார்ன் ஃப்ளேக்ஸில் கிளைசமிக் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடக்கூடாது. கார்ன் ஃப்ளேக்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கலாம். இதனால் ஃபேட்டி லிவர் நோய் (Fatty Liver Disease) என்ற நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

செயற்கையாகத் தயாரிக்கப்படும் பொருட்கள் எப்போதுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலிருந்து கார்ன் ஃப்ளேக்ஸ் ஒன்றும் விதிவிலக்கல்ல. இது சத்துகள் நிறைந்த உணவுப்பொருளே அல்ல. குறைந்த நேரத்தில் சாப்பிடலாம் என்பது மட்டும்தான் இதிலுள்ள ஒரே நன்மை. ஆகவே, விளம்பரங்களைப் பார்த்து உணவுப்பொருளை வாங்குவதற்குமுன் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்த தெளிவு நமக்கு இருக்கவேண்டும். அது நமது உடல்நலத்துக்கு உகந்ததா? சத்தானப் பொருட்கள் இருக்கிறதா? என்பது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்காச்சோளம் சாப்பிட ஆசையாக இருந்தால் இயற்கையாகக் கிடைக்கும் மக்காச்சோளத்தை வாங்கிச் சாப்பிடலாமே தவிர ஒருபோதும் கார்ன் ஃப்ளேக்ஸ் வாங்கிச் சாப்பிடாதீர்கள். அதேபோல் தினமும் குழந்தைகளுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்காதீர்கள். உங்கள் குழந்தைக்குச் சத்துக்கள் இல்லாத சக்கை உணவை தருகிறீர்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகள் ஏன் நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு கிண்ணம் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… வெள்ளை ஒயின் உடலுக்கு ஆபத்தானதா?

nathan

பருமனைக் குறைக்கும் பப்பாளி அடை! உணவே மருந்து!!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் டோனட்ஸ் தயாரிப்பது எப்படி?

nathan

மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!

nathan

உடல் எடையைக் கூட்டும் உளுந்தங்களி

nathan

பிரேக் ஃபாஸ்ட் !

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலில் கொழுப்புகளை கரைக்கும் பாசிப்பயறு!…

nathan