மார்பக புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது?
இதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களில் ஏற்படக்கூடிய அபரிமிதமான வளர்ச்சியே, புற்றுநோய்க்கு காரணம்.
இதில் வகைகள் உள்ளதா?
மார்பக புற்று நோயில் வகைகள் கிடையாது. எல்லா புற்றுநோய்களையும் போல, இதிலும் நான்கு நிலைகள் உள்ளன.
எவ்வாறு பரவுகிறது?
மார்பக செல்லில் ஏற்பட்ட மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக, உடலில் எங்கு வேண்டுமானாலும் பரவலாம். ஆரம்பத்தில், பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. பின், இது மற்ற செல்களுக்கும் பரவுகிறது.
மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?
பரம்பரையாக வரலாம். வயது கடந்து திருமணம் செய்வது; 35 வயதிற்கு மேல் குழந்தை பெறுவது; தாய்ப்பால் தராதது; வாழ்க்கை முறை மாற்றம்; சுற்றுச்சூழல் மாசு என்று பல காரணங்கள் உள்ளன.
தாய்ப்பால் தராதவர்களை அதிகம் பாதிக்க காரணம் என்ன?
தாய்ப்பால் தருவதால், புற்றுநோய்க்கு காரணமாகும் சில ஹார்மோன்களின் அளவு உடலில் கட்டுக்குள் வைக்கப்படும். எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.
புற்றுநோய் கட்டியா என, எப்படி தெரிந்து கொள்வது?
முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மாதம் ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கட்டியோ அல்லது மார்பகங்களின் வடிவத்தில் மாற்றமோ தெரிந்தால், உடனடியாக, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அறிகுறிகள்?
மார்பகத்தில் தொடர்ந்து வலி, அசவுகரிய உணர்வு, மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம், மார்பு காம்பு சிவந்து உட்பக்கமாக திரும்புதல் போன்றவை.
சுய பரிசோதனை செய்து கொள்வது எப்படி?
கண்ணாடி முன் நின்று, கைகள் இரண்டையும் மேலே துாக்கி, இரு மார்பகங்களும் ஒரே அளவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மார்பகங்களின் எல்லாப் பகுதிகளிலும், விரல்களால் அழுந்தத் தடவி, கட்டிகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
சிகிச்சை முறைகள்?
நோயின் நிலை, புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை நோயின் தீவிரம் என, இவற்றின் அடிப்படையில் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு, கீமோதெரபி, ஹார்மோன் தெரபி என, சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.
செயற்கை மார்பகம் எவ்வாறு பொருத்தப்படுகிறது?
செயற்கை மார்பகம் என்பது, சம்பந்தப்பட்டவர்கள் உடலின் வேறு பாகத்தில் இருக்கும் தசையை எடுத்தோ அல்லது செயற்கை சிலிக்கான் மூலமோ உருவாக்குவது. நோயாளிகளின் உடல் நிலையைப் பொருத்தே, அதற்கான சாத்தியம் நிர்ணயிக்கப்படும்.
ஜெ.ஜெயக்குமார்
புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர்