29.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
ld4161
மருத்துவ குறிப்பு

அந்தத் திருப்தி மிக அருமையான ஸ்ட்ரெஸ் ரிலீவர்!

செடிகள் வைப்பதற்கான அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். அதற்கு வரக்கூடிய பிரச்னைகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் என எல்லாவற்றையும் அலசினோம். செடிகளை வளர்ப்பதோ, தோட்டத்தைப் பராமரிப்பதோ அத்தனை சுலபமான காரியமல்ல. நிறைய மெனக்கெட வேண்டும். அத்தனை மெனக்கெடல்களும், கஷ்டங்களும் அவசியம்தானா? அதெல்லாம் எதற்கு? அது கொடுக்கப்போகிற பலன்கள் என்னென்ன? அவற்றைத்தான் இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.

காய்கறிச் செடி வளர்க்கிறீர்கள். அதில் முதல் முதலாக ஒரு பூ வருகிறது. அதைப் பார்த்ததும் உங்கள் மனதில் ஒரு துள்ளல் வரும். அடுத்து பிஞ்சு… பிறகு காய்… அது பழுத்து பழம் கிடைக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகும். சிலதை நாம் காயாக எடுப்போம். சிலதை பழமாக எடுப்போம். இதற்கெல்லாம் முன்பாக முதலில் பூ மலர்கிற அந்த நிகழ்வே நமக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும். அத்தனை நாட்களாக பச்சைப் பசேலெனப் பார்த்த செடியில் எங்கோ ஒரு மூலையில் சின்னதாகப் பூக்கும் அந்தப் பூ தரும் இனம் புரியாத மகிழ்ச்சிக்கு இணையே இருக்காது.

அந்த மகிழ்ச்சிக்காகத்தான் அத்தனை நாள் மெனக்கெட்டிருப்போம். இத்தனை நாட்களாக நாம் செலவழித்த நேரம், பணம், சக்தி என எல்லாவற்றுக்குமான பலன்தான் அந்த ஆத்ம திருப்தி. அந்த திருப்தி மிக அருமையான ஸ்ட்ரெஸ் ரிலீவர். இது நமக்கே நமக்குக் கிடைக்கிற ஆத்ம ரீதியான பலன்.அடுத்தது பொருளாதார ரீதியாக செடிகள் கொடுக்கும் பலன்கள். குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை நாம் ஃப்ரெஷ்ஷாக பறித்துப் பயன்படுத்திக் கொள்வதில் இன்னொரு திருப்தி. நமக்குத் தேவையானது போக, மீதமுள்ள செடிகளை வைத்து எவ்வளவு பணம் ஈட்ட முடியும் என்பதையும் பார்க்க வேண்டும்.

செடிகளை வளர்ப்பது மட்டும் முக்கியமல்ல. அவற்றில் இருந்து எடுக்கக்கூடிய விளைச்சலை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு தெளிவு வேண்டும்.சில காய்களை முற்றலாக இருக்கும் போது பறிக்க வேண்டும். சிலதை பிஞ்சாக இருக்கும் போது பறிக்க வேண்டும். பிஞ்சாக எடுக்க வேண்டியதை முற்ற விட்டாலோ, காயாக எடுக்க வேண்டியதை பழுக்க விட்டாலோ உபயோகம் இருக்காது. சரியான நேரத்தில் சரியான பருவத்தில் அவை அறுவடை செய்யப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு…

வெண்டைச் செடி வைத்திருக்கிறீர்கள்… அதில் நிறைய பிஞ்சுகளைப் பார்க்கிறீர்கள். இளசாக, பொரியல் செய்ய சரியான பக்குவத்தில் இருக்கும். ஒரு சின்ன சோம்பேறித்தனம் காரணமாக நாளைக்கு பறித்துக் கொள்ளலாம் என விட்டாலும், அடுத்த நாளைக்கேகூட அடுத்த பருவத்துக்கு மாறிவிடும். அப்படி மாறிவிட்டால் அத்தனை காலம் நீங்கள் போட்ட உழைப்பின் பலனில் நிச்சயம் முழுமை இருக்காது. அதே போல ரொம்ப பிஞ்சாகவும் பறிக்க முடியாது. பறிப்பு என்கிற விஷயத்தை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். நமது வீட்டு உபயோகத்துக்கு என்கிற போது எப்படி அறுவடை செய்ய வேண்டும், வெளியில் விற்பனைக்குக் கொடுக்கும் போது எப்படி அறுவடை செய்ய வேண்டும் என்கிற விஷயம் முக்கியம்.

வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், 6:30 மணிக்கு சமைக்க, 6 மணிக்குப் போய் பறிக்கலாம். Maturity indices எனச் சொல்வோம். அதாவது, அறுவடைக்கு ஏற்ற பருவம். இந்தப் பருவமானது ஒவ்வொரு காய்க்கும் வேறு வேறாக இருக்கிறது. தக்காளி எனப் பார்த்தால் வீட்டில் சமையலுக்கு ரசம் வைக்க உடனே பிழிந்து போடுகிற பதத்தில் இருக்க வேண்டும். இதுவே வணிக ரீதியாகப் பார்த்தால் முக்கால் பாகம் பழுத்ததாக இருக்க வேண்டும். எல்லா காய்கறிகளையுமே வெளியில் விற்றுக் காசாக்க நினைத்தால் முக்கால் பாகம் பழுத்த நிலையில்தான் அறுவடை செய்ய வேண்டும்.

அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அந்தக் காயில் மேலாக மஞ்சள் கலந்த ஒருவித சிவப்பு வடிய ஆரம்பிக்கும். அதுதான் சரியான பருவம். வெண்டை என்றால் பிஞ்சாகவே இருக்க வேண்டும். கத்தரிக்காய் என்றால் மீடியம் அளவில் இருக்க வேண்டும். ரொம்பவும் பெரிதாகவும் இல்லாமல் ரொம்பவும் சின்னதாகவும் இல்லாமல் மீடியம் அளவில் பறிக்க வேண்டும். மிளகாயில் டார்க் பச்சை மற்றும் வெளிர் பச்சை என இரண்டு உண்டு. அந்தந்த நிறம் வந்ததும் பறித்துவிடலாம். ஆனால், பச்சை மிளகாயாக வேண்டும் என்றால் சிவப்பாக மாறுவதற்கு முன் பறிக்க வேண்டும். அதுவே வற்றலுக்கு உபயோகிக்கவோ, விதைக்காக பயன்படுத்தவோ நினைத்தால் அதை நன்கு பழுக்க விட்டு, பறித்து, காயப் போட்டு பிறகு உபயோகிக்கலாம். எனவே, பறிக்கிற தேவைக்கேற்ப பருவங்களை மாற்றி எடுக்க வேண்டும்.

அடுத்து கீரைகள்… இவற்றை முற்ற விடாமல் பறிப்பது நல்லது. பொதுவாகப் பார்த்தால் 25 நாட்களில் கீரைகளில் முதல் அறுவடை செய்யலாம் என்போம். எனவே 25, 26வது நாட்களில் பறிப்பது நல்லது. அதே போல கொடி வகை காய்கறிகள். இவற்றை ரொம்பவும் பிஞ்சாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றவும் விடாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட பருவத்தில் பறிக்க வேண்டும். புடலை, பாகல், பீர்க்கன் போன்றவை இந்த ரகம். அவரையை பிஞ்சாகப் பறிக்கலாம்.

இதுவே அடுத்த சீசனுக்கு உங்களுக்கு விதைகள் வேண்டும் என்றால் அதற்காக நன்கு முற்ற விட்டு, பிறகு விதைகளைப் பிரித்து எடுக்கும் தன்மையும் இருக்கிறது. இந்த பறிப்பை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். பறிக்கிற காய்கறிகளை இன்னும் எத்தனை நாள் அடுப்படியில் வைத்திருக்கலாம் என்பதையும் கவனிக்க வேண்டும். வீட்டுத் தேவைக்கு எனும் போது, தேவைக்கு அதிகமாகப் பறிக்க வேண்டாம். அன்றைய சமையலுக்கு நான்கு தக்காளிதான் தேவை என்றால் நான்கை மட்டும் பறித்தால் போதும். மீதியை முக்கால் பாகம் பழுத்த நிலையில் வணிக ரீதியாகப் பயன்படுத்திக் கொள்வதே நல்லது.

ஒரு மொட்டை மாடியில் தோட்டம் வைத்தே, அதை வணிக ரீதியாக எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதை நாம் அடுத்து வரும் இதழ்களில் பார்க்கப் போகிறோம். வீட்டுத் தேவைக்கு உபயோகித்தது போக மீதமுள்ளவற்றை நமக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கலாம். அதுவும் போக மீதியை விலைக்குக் கொடுக்கலாம். அப்போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன.பதம் பார்த்துப் பறித்த காய்கறிகளை ஒரு மண் சட்டியில் ஒரு நியூஸ் பேப்பரை விரித்து அதில் வைத்து வீட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிந்தவரை பிளாஸ்டிக் தட்டு மற்றும் கூடைகளைத் தவிர்க்கவும்.

பிறகு தரம் பிரிக்கலாம். வீட்டுத் தோட்டம் என்பது சின்ன அளவிலானது என்பதால் பறிக்கும் போதே தரம் பார்த்துப் பறிக்கலாம். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால் பறித்துக் கொண்டு வந்த பிறகு தரம் பிரிக்கலாம். அவற்றில் மிகவும் நல்ல காய்கறிகளைத் தனியேவும் அதற்கடுத்த தரத்தில் உள்ளவற்றைத் தனியேவும் பிரித்துக் கொள்ளலாம். பிறகு வெள்ளை டவல் அல்லது சுத்தமான காட்டன் துணியால் ஒவ்வொரு காயையும் நன்கு துடைக்க வேண்டும். ஆர்கானிக் முறையில் விளைவித்த வீட்டுக் காய்களை வாங்க உங்களைத் தேடி வந்து வாங்கிச் செல்கிறவர்கள், அவர்களது பைகளிலேயே போட்டு எடுத்துச் செல்வது ஒரு வழி. அது நட்பு முறையில் செய்யக்கூடியது.

‘இல்லை… நான் புரொபஷனலாக செய்ய விரும்புகிறேன்’ என நீங்கள் நினைத்தீர்களானால் முடிந்தவரை பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கவும். அந்தக் காலத்து மஞ்சப்பை அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும் மக்கக்கூடிய பிளாஸ்டிக் கலப்பில்லாத பைகளில் போட்டு எடை பார்த்துக் கொடுக்கலாம். அதிக அளவிலான விளைச்சல் எடுக்கிறீர்கள்… அதாவது, ஒரு வீட்டுக்கே 5 கிலோ கணக்கில் வருகிறது என்றால் அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக் கொடுக்கலாம்.

இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தை முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டும். காய்கறிகளை பேக் செய்யும் போது, அவை செடிகளில் இருந்தபோது எந்த நிலையில் காய்த்துத் தொங்கினதோ, அதே நிலையில் வைத்துக் கொடுப்பதன் மூலம் அவற்றின் வாழ்நாளை நீடிக்கச் செய்ய முடியும். இதற்கு நல்லதொரு உதாரணம் வெண்டைக்காய். அது எப்படி செடியில் நிற்கும்? மேல் நோக்கி நிமிர்ந்துதானே… அதே மாதிரி நீங்கள் பேக் செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து மூட்டையாகக் கட்டியோ, படுக்க வைத்தோ கொடுக்கவேண்டாம்.

நிமிர்ந்த நிலையில் அடுக்கி, அப்படியே ஒரு நூல் அல்லது சணல் கயிறால் கட்டி விற்பனைக்கு கொடுங்கள். வாங்கிச் செல்பவரும் அப்படியே கொண்டு போய் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். அந்தக் காயின் ஆயுளும் நீடிக்கும். தக்காளியையும் கத்தரிக்காயையும் காம்புப் பகுதி மேல் நோக்கித் தெரிகிற மாதிரி அடுக்க வேண்டும். காய்கறிகள் சீக்கிரமே முற்றாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும்.வீட்டுக் காய்கறிகள்தான் வேண்டும் எனத் தேடி வாங்குகிறவர்களும் தினம் தினம் ஃப்ரெஷ்ஷாக வாங்குவதே சிறந்தது. முடிந்தவரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தப் பழக வேண்டும். அதெப்படி முடியும் என்கிறவர்களுக்கு ஒருசின்ன டெக்னிக் சொல்லித் தருகிறேன்.

ஒரு சின்ன மண் தொட்டி வாங்கிக் கொள்ளுங்கள். அந்தத் தொட்டிக்குள் ஆற்றுமணல் நிரப்புங்கள். அதற்கு ேமல் சின்ன அளவு பூந்தொட்டி அல்லது மண் சட்டிகளை வையுங்கள். அதன் மேல் காய்கறிகளை வையுங்கள். ஆற்று மணலை மட்டும் கொஞ்சம் ஈரப்படுத்தி வைக்க வேண்டும். இதை ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி என்று சொன்னாலும், எளிய முறையில் காய்கறிகளை ஸ்டோர் செய்து வைக்கிற ஒரு முறை. இப்படி வைப்பதன் மூலம் 5 – 6 நாட்கள் வரையிலும்கூட காய்கறிகள் காய்ந்து போகாமலும் அழுகாமலும் இருக்கும். இதில் எலுமிச்சைப் பழம், சாத்துக்குடி போன்றவற்றை வைத்தால் ஒருவாரம் வரை அவற்றின் சாற்றின் தன்மை மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

இயற்கையான முறையில், செயற்கை உரங்களோ, ரசாயனங்களோ இல்லாமல் விளைவிக்கப்படுகிற காய்கறிகளில் இயல்பிலேயே ஒரு தனி சுவை இருப்பதை உணர முடியும். அவற்றை மண் பாண்டங்களில் பத்திரப்படுத்தி சமைப்பதன் மூலம் அந்த சுவை இன்னும் அதிகரிக்கும்.ld4161

Related posts

பெருங்காயம்… கடவுளின் அமிர்தம்!

nathan

பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க…சாப்பிட்டதும் ஏன் குளிக்கக்கூடாது? அப்ப எவ்வளவு நேரம் கழிச்சு குளிக்கலாம்?

nathan

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து

nathan

இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தா?டெங்குவோட அறிகுறியாம்…!

nathan

இன்ஹேலர் பயன்படுத்தலாமா?

nathan

விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள். கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க.

nathan

எந்த வயதில் விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்..?

nathan

பரிசுக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்காதீர்

nathan