போன முறை அவன் தவறு செய்தான் மன்னித்தேன்; இனியும் என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படும். அதோடு, உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். மருத்துவ ரீதியாகவும் இதற்கு நல்ல பலன் உண்டு.
உங்கள் மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கோபத்திற்கு மற்ற எல்லோரையும் மன்னிப்பதன் மூலம் வடிகால் ஏற்படுத்திக் கொடுங்கள். அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிஞ்சோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம்.
அப்படி நீங்கள் மன்னிப்பு கேட்கும் போது, உங்கள் எதிராளி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார் என்பதில் சந்தேகம் வேண்டாம். அப்படி எதிராளி மன்னிக்காவிட்டாலும், கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள்.
இதன் மூலம், குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலைப் பெறலாம். மன அமைதியும் கிடைக்கும். மனக்கசப்பு நீக்குவதற்கு மன்னிக்கும் மனப்பான்மை மற்றும் மன்னிப்புக் கேட்கும் தன்மை இரண்டும் வேண்டும். ப்ளீஸ், தாங்க்யூ, ஸாரி ஆகிய வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
இந்த வார்த்தைகள் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அதே போல், வணக்கம், வாங்க போன்ற சொற்களையும் தேவையான இடத்தில் தவறாமல் பயன்படுத்துங்கள். அவை உங்களை பண்புள்ளவர்களாகக் காட்டும்.