‘மலச்சிக்கல்’ என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது குழந்தைகளுக்கு. பள்ளிக்குச் செல்லும் போதும், வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் காலையிலேயே மலம் கழிக்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளால், அவர்களை அப்படிப் பழக்கப்படுத்தாத பெற்றோர்களால் இருவருமே சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இப்பிரச்னையை சரிசெய்ய மதுரை ஆயுர்வேத மருத்துவர் ஹரிணி அளிக்கும் டிப்ஸ்….
* காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரைப் பருகக் கொடுக்கலாம்.
* இரவு ஒரு டம்ளர் தண்ணீரில், 10 உலர் திராட்சையை ஊற வைத்து காலையில் ஊறிய உலர் திராட்சையைப் பிழிந்து, அத்தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கச் செய்யலாம்.
* காலையில் வெறும் வயிற்றில் 10 உலர் திராட்சையை உண்ணச் செய்து ஒரு டம்ளர் வெது, வெதுப்பான தண்ணீர் கொடுக்கலாம்.
* மதிய உணவுக்குப் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து நார்ச்சத்துக்கள் நிறைந்த கொய்யா, பனங்கிழங்கு போன்றவற்றை உண்ணக் கொடுக்கலாம். இது மலச்சிக்கலை அறவே தீர்க்கும்.
* மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக பாதாம்பருப்பு, பேரீச்சை, முந்திரிப்பருப்பு, பிஸ்தா போன்றவற்றை ஊற வைத்தோ அல்லது அப்படியோ சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.
* துவரம்பருப்பு வேக வைக்கும் போது, ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கவும். பிறகு சாதத்தில் பருப்பை நெய் விட்டு பருப்பு சாதமாக கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.
* காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கலாம்.
* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
* சூடான, காரமான, புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* பேக்கரி உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* பரோட்டா, பீட்சா, பர்க்கர் போன்று மைதாவில் செய்யப்படும் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்தாலே உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு பை பை சொல்லிவிடலாம்.