மருத்துவ குறிப்பு

கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் தேவையா?

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, திருமண வாக்குறுதி அளித்து பலாத்காரம் செய்துள்ளார் ஒரு நபர். அந்தப் பெண் கருவுற்ற நிலையில் அதனைக் கலைக்க 24 வாரங்களுக்குப் பிறகு முயற்சி செய்த போது கருக்கலைப்பு குறித்த சட்டம் அதற்கு இடையூறாக இருந்தது. அதாவது 20 வாரங்களுக்கு மேலான கருவை கலைக்கக் கூடாது என்று 1971ம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு மீதான விசாரணையை, நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், அருண் மிஸ்ரா அடங்கிய அமர்வு மேற்கொண்டு, அந்தப் பெண்ணின் கருவைப் பரிசோதிக்க உத்தரவிட்டது. அதன்படி கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக்கல்லூரி மற்றும் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 7 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அந்தப் பெண்ணின் கருவில் குறைபாடுகள் இருப்பதும், கர்ப்பத்தைத் தொடர்ந்தால் அவர் உடல் மற்றும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுவார் என்றும் அறிக்கை அளித்தது.

தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தால், 20 வாரங்களுக்கு மேற்பட்டதாக இருந்தாலும் கருவைக் கலைக்கலாம் என்கிற நிலையில், அந்தப் பெண் விரும்பினால் கருவைக் கலைக்க அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுவாக 12 வாரங்களுக்கு மேலான கருக்கலைப்பே பாதுகாப்பானதல்ல என்கிற மருத்துவர்கள், இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறார்கள்?சென்னையை சேர்ந்த மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ நிபுணர்களான ஜெயஸ்ரீ சீனிவாசன் மற்றும் மல்லிகா சாமுவேல் இருவரும் கருத்து பகிர்கிறார்கள்.

”1971ல் மருத்துவ கருக்கலைப்பு சட்டம் (Medical Termination of Pregnancy Act) கொண்டுவரப்பட்டது. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை கண்டறிய உதவும் கருவிகளோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியோ கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது அந்தச் சட்டம். இப்போதோ மிகத் துல்லியமாக குழந்தையின் வளர்ச்சியை கண்டறியும் ஸ்கேன் கருவிகள் வந்துவிட்டன.

இதனால் ஒவ்வொரு பெண்ணும் 16 முதல் 18வது வாரங்களுக்குள் கட்டாயம் செய்ய வேண்டிய பரிசோதனை பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தையின் அசாதாரண உடல்நிலையை முதல் 1012 மற்றும் 1618 வாரங்களுக்குள்ளாகவே கண்டறிந்துவிட முடியும். குழந்தையின் இதய சம்பந்தமான நோய்களைக்கூட 22வது வார இறுதிக்குள் கண்டறியலாம். இப்படியிருக்கையில், கடைசி நிலையான 24 வாரங்கள் வரை மெத்தனமாக இருந்துவிட்டு பிறகு கருக்கலைப்பு செய்வது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

இதுபோன்று பாலியல் பலாத்காரங்களால் கருவுற்ற பெண்கள் 5 மாத கர்ப்பம் வரை கலைக்கக்கூடிய கர்ப்பத்தடை மருந்துகள் இப்போது வந்துவிட்டது. ஒரு குழந்தை பிறந்தவுடன் சாதாரணமாக உயிர் வாழ முடியும் எனும்போது அந்தக் கருவை கலைக்க வேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட பெண்ணின் கருவில் உள்ள குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கோளாறுகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தக் குழந்தை பிறந்தால் உடனே இறக்க நேரிடலாம் என்பதால், இதுபோன்ற குறைபாடுள்ள கருவை கலைத்துவிடலாம்”என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ சீனிவாசன்.

வருத்தம் கலந்த குரலில் தொடர்கிறார் டாக்டர் மல்லிகா சாமுவேல்…”இதுபோன்ற வழக்குகளின் வெற்றி, அவ்வப்போது சட்டத்தை வளைத்துக் கொள்ளலாம் என்ற தவறான நம்பிக்கையை மக்களிடத்தில் உருவாக்கிவிடும். ஏற்கனவே நம் நாட்டில் பிரசவத்தில் இறக்கக்கூடிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நிலையில், மேலும் மரணங்கள் அதிகரிக்கக்கூடும். இந்தத் தீர்ப்பை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் நிலையும் உருவாகும்.

ஆரோக்கியமான உறவில் உருவான கருவிலேயே பிரச்னை ஏற்படும்போது, இதுபோன்ற பாலியல் பலாத்காரத்தால் உருவான கருவை கூடிய வரை உடனே கலைத்துவிடுவதே நல்லது. குறைந்த மாத கருவை கலைக்கும்போதே மனதளவில் பாதிக்கப்படும் பெண்களை என் மருத்துவமனையிலேயே பார்த்திருக்கிறேன். 24 வாரங்களில் அது வளர்ச்சியடைந்த குழந்தையாகி விடுகிறது. கிட்டத்தட்ட ஒரு முழு பிரசவம் போலத்தான் என்கிற போது, அந்தத் தாய் மனதளவிலும் உடலளவிலும் அதிக அளவில் பாதிக்கப்படுவாள். அப்பெண்ணின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கருவை கலைப்பது சரியில்லை” என்கிறார்.ld45801

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button