மருத்துவ குறிப்பு

மார்பக புற்றுநோய்-

உங்கள் மார்பகத்தில் கட்டிகள் இருக்கிறதா என்பதை நீங்களே எவ்வாறு பரிசோதித்து பார்ப்பது?
மார்பக புற்றுநோயானது பெண்களுக்கு ஏற்படும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாகும். இது உருவாவதற்கான சாத்தியக்கூறானது வயதானவர்களிலும், குடும்பத்தில் மார்பக புற்றுநோய் உள்ளவர்களிலும் , பிள்ளைகள் அற்றவர்களிலும், மாதவிடாய் நின்றபின் அதற்காக மருந்துகள் பாவிப்பவர்களிலும், இளவயதில் கதிர்வீச்சுக்கு உள்ளானவர்களிலும் அதிகமாக காணப்படுகிறது.

இப் புற்றுநோயானது சிறிதாக இருக்கும்போது கண்டுபிடிக்கப்படின் இதற்கு முறையான சிகிச்சை வழங்கமுடியும். இவ்வாறு இதை கண்டுபிடிக்க உங்கள் மார்பகங்களை ஒழுங்கான இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும்.

எப்போது இதை செய்ய வேண்டும்?

இப்பரிசோதனையை நீங்கள் ஒழுங்குமுறையாக குறிப்பிட்டகால இடைவெளியில் செய்துவந்தால் உங்கள் சாதாரண மார்பகத்தைப்பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வீர்கள். இதனால் கட்டிகள் உருவாகும் போது அவற்றை இலகுவாக அடையாளம் காண முடியும்.

உங்களுக்கு மாதவிடாய் இப்போதும் வருகின்ற தெனின், நீங்கள் இரத்தப்போக்கு முடிந்து மூன்று நான்கு நாட்களின் பின் செய்யுங்கள். ஏனெனில் மாதவிடாய் நேரத்தில் உங்கள் மார்பகங்கள் வீக்கமாகவும், நோத்தன்மை உள்ளதாகவும் காணப்படும். இதனால் மார்பகத்தை சோதிப்பது சிரமமாகும்.

உங்களுக்கு மாதவிடைச்சக்கரம் நின்றுவிட்டதெனில் மாதத்தில் குறிப்பிட்ட திகதியை தேர்ந்தெடுத்து ஒழுங்காக பரிசோதியுங்கள்.

இப்பரிசோதனையில் எதை நீங்கள் அவதானிக்க வேண்டும்?

  • கட்டிகள் உருவாதல்
  • முலைக்காம்பினுடாக பால் தவிர்ந்த ஏனைய பதார்த்தங்கள் வெளியேறல் (இரத்தம்)
  • மார்பு வீக்கமடைதல்
  • முலைக்காம்பில் மாற்றங்கள் உருவாதல்
  • மார்பகத்தில் உள்ள தோலில் பள்ளங்கள் உருவாதல்


எவ்வாறு இந்த பரிசோதனையை சுயமாக செய்வது?

  • நீங்கள் உங்கள் மார்பகங்கள் இரண்டும் அடங்கக்கூடிய வகையில் அகலமான கண்ணாடியின் முன் சென்று நில்லுங்கள்
  • உங்கள் மார்பகங்களில் ஏதும் வித்தியாசம் இருக்கிறதா என்பதை பாருங்கள்
  • பின்னர் உங்கள் கைகளை கோர்த்து பிடரியில் வைத்துக்கொண்டு மீண்டும் அவதானியுங்கள். இதன்மூலம் உங்கள் மார்பகத்தின் கீழ்பகுதியை அவதானிக்க முடியும்.
  • பின் உங்கள் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நெஞ்சை சிறிது முன்னோக்கி வளைத்து மீண்டும் அவதானியுங்கள்
  • பின்னர் முலைக்காம்புகளை அழுத்திப் பாருங்கள் ஏதும்முலைக்கம்பினுடாக வருகிறதா என்று
  • பின்னர் வசதியாக படுத்துக்கொள்ளுங்கள்
  • பின் ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்து, மற்ற கையால் அப்பக்க மார்பகத்தை பரிசோதியுங்கள்
  • பரிசோதிக்கும் போது கை விரல்கள் நெருக்க மாகவும் கை மடியாமலும் இருக்க வேண்டும்
  • பரிசோதிக்கும் போது சுழற்சி முறையில் மார்பகத்தை அழுத்த வேண்டும்.
  • மார்பகத்தின் எல்லாப்பகுதிகளையும் நடு நெஞ்சுப் பகுதியையும் கமக்கட்டு பகுதியையும் பரிசோதிக்க வேண்டும்வ
  • லது கையால் இடது மார்பகத்தையும், இடது கையால் வலது மார்பகத்தையும் பரிசோதிக்க வேண்டும்
  • இதன் பின்னர் நின்ற நிலையில் குளித்துக் கொண்டு மேற்கூறியவாறு மீண்டும் மார்பகங்களை பரிசோதிக்க வேண்டும்.
  • எப்போதும் பரிசோதிக்கும் போது குறிப்பிட்ட ஒழுங்கை கடைப்பிடியுங்கள்.
  • இவ்வாறு பரிசோதிக்கும் போது ஏதும் பிரச்சினைகள் தென்படின் வைத்தியரை நாடுங்கள். அவர் உங்களை பரிசோதித்துவிட்டு வேறு பரிசோதனைகளை செய்வார்

Dr.க.சிவசுகந்தன்

photo2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button