23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 4
ஆரோக்கிய உணவு

30 வகை இரவு உணவு – அரை மணி நேர அசத்தல் சமையல்

இரவு வீட்டுக்கு வந்து நிம்மதியோடு உறங்க மிகவும் முக்கியம் சாப்பாடு. அதுவும் திருப்தியாக சமைத்து பரிமாறினால் சந்தோஷம்தானே! உங்களுக்காக இரவு நேர க்விக் சமையலை இந்த இதழில் சொல்லித் தந்திருக்கிறார் சமையல் கலை நிபுணர் சுதா செல்வக்குமார்.

குதிரைவாலி சொஜ்ஜி

தேவையானவை: பச்சைப் பட்டாணி – கால் கப், குதிரைவாலி அரிசி – அரை கப், கோதுமை குருணை – அரை கப், உப்பு – தேவையான அளவு, பாசிப்பருப்பு – கால் கப், தேங்காய்த் துருவல் – கால் கப்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், உடைத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு உப்பு, குதிரைவாலி அரிசி, கோதுமை குருணை, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி மூடி, 3 விசில் வரும் வரை வேகவிடவும். இத்துடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

1

நொடியில் சத்தான சொஜ்ஜி ரெடி.

குறிப்பு: குதிரைவாலி, கோதுமை குருணையை அலசி 10 நிமிடம் சுடுநீரில் ஊறவைக்கவும்.

சீராளக் கறி

தேவையானவை: பாசிப்பருப்பு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – கால் கப், பொட்டுக்கடலை பொடி – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 2 (நறுக்கிக் கொள்ளவும்), சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப், பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள்தூள் – சிறிதளவு.

தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, பட்டை – சிறிதளவு, கிராம்பு – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன்.

2

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், தேங்காய் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு பாசிப்பருப்பு, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கிளறி, பாசிப்பருப்பு சிறிது வெந்ததும் இறக்கவும். இதனை இட்லித்தட்டில் பரப்பி வைத்து, 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து இறக்கி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும். புரோட்டீன் நிறைந்த சத்தான சிற்றுண்டி இது.

வடப்பி

தேவையானவை: சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு, கேழ்வரகு மாவு – தலா கால் கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரிப்பிஞ்சு – ஒரு கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – சிறிது, இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், புளிக்காத தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

3

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து, மீதி உள்ள எல்லாப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும். பிறகு, உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்பு: வெள்ளரியில் நீர் அதிகம் சுரக்கும் என்பதால் மாவு பிசையும்போது குறைவான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஈஸி அப்பம்

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த வெல்லம் – அரை கப், நன்கு பழுத்த பெரிய வாழைப்பழம் – ஒன்று (மசித்துக்கொள்ளவும்), சிறு பல்லாக நறுக்கிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, ஜாதிக்காய் பொடி – அரை டீஸ்பூன், பால் – தேவையான அளவு.

4

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்கள் அனைத்தையும் பால் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கலந்துகொள்ளவும். பின் சூடான எண்ணெயில் குழிக்கரண்டியால் மாவினை எடுத்து அப்பமாக ஊற்றி இருபுறமும் நிறம் மாறாமல் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

கிரீன் சாண்ட்விச்

தேவையானவை: பிரெட் துண்டுகள் – 6, நெய் – சிறிது, தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், கோஸ் – கேரட் (இரண்டும் சேர்த்து) – கால் கப், துருவிய பனீர் – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – சிறிதளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

சட்னி செய்ய: புதினா – ஒரு கைப்பிடி, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – ஒன்று, உப்பு – தேவையான அளவு.

5

செய்முறை: துருவிய கேரட், கோஸ், பனீர், உப்பு ஆகியவற்றுடன் தக்காளி சாஸ் ஊற்றிக் கலந்துகொள்ளவும். சட்னி செய்ய கொடுத்துள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். பிரெட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி, ஒருபுறத்தில் சட்னியைத் தடவவும். இதன் மீது கலந்து வைத்துள்ள காய்கறி – சாஸ் கலவையை வைத்து, சட்னி தடவிய மற்றொரு பிரெட் துண்டை வைத்து மூடவும். தோசைக்கல்லில் நெய் சிறிது ஊற்றி சாண்ட்விச்சை இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

கலர்புஃல் மினி பூரி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன், பீட்ரூட் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன் (மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

6

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். பிறகு, சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும். பச்சைப் பட்டாணி, கொத்தமல்லித்தழை, பீட்ரூட் சேர்வதால் பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருக்கும். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகள்கூட விரும்பி சாப்பிடும்.

தோசை ஃப்ரை (அ) தாளிச்ச தோசை

தேவையானவை: கேழ்வரகு மாவு, கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு (அனைத்தும் சேர்த்து) – ஒன்றரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், ரவை – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, தேங்காய்த் துருவல் – கால் கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – கால் கப், பச்சை மிளகாய் – 4.

தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கடலைப் பருப்பு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிது, உடைத்த முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – கால் கப்.

7

செய்முறை: மாவு வகைகளை ஒன்றாகச் சேர்த்து உப்பு, ரவை கலந்து கரைத்துக்கொள்ளவும். இத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் சேர்த்து கலக்கிக்கொள்ளவும். இதனை தோசைகளாக ஊற்றி, துண்டுகளாக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். பின் தோசைத் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

கீரை ஜிஞ்சர் ரொட்டி

தேவையானவை: கோதுமை மாவு, கேழ்வரகு மாவு – தலா அரை கப், பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை (அ) முளைக்கீரை – அரை கப், இஞ்சித் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப், பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்.

8

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, கெட்டியாக பிசைந்துகொள்ளவும். பின்னர் மாவு உருட்டி, ஒரு ஈரத்துணியின் மேல் மாவு உருண்டையைப் பரப்பி, சிறு சிறு ரொட்டிகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவைத்துப் பரிமாறவும்.

அவல் – ஸ்பிரவுட் உப்புமா

தேவையானவை: அவல் – ஒரு கப், முளைவிட்ட பச்சைப்பயறு – கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு, தேங்காய்த் துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, புளி – நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

9

செய்முறை: கரைத்த புளித்தண்ணீரில் அவலை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும், பின் வெங்காயம் சேர்த்து வதக்கி, புளிக்கரைசலில் ஊறிய அவலை (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்த்துக் கிளறவும். இத்துடன் உப்பு, மஞ்சள்தூள், முளைவிட்ட பச்சைப்பயறு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி இறக்கி பரிமாறவும். எளிதில் ஜீரணமாகக்கூடிய சுவையான உப்புமா இது.

சேவ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) – 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்), கொத்தமல்லித்தழை – புதினா விழுது – 2 டேபிள்ஸ்பூன்.

10

செய்முறை: கோதுமை மாவினை உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய பூரியாக தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதன்மீது நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழை தூவி, ஓமப்பொடி போட்டுக் கிளறி, கொத்தமல்லித்தழை – புதினா விழுது ஊற்றி, அதன் மேலே வேர்க்கடலை பொடி தூவி பரிமாறவும்.

குறிப்பு: ரெடிமேடாக கிடைக்கும் பானிபூரியை பயன்படுத்தியும் இதே மாதிரி செய்யலாம்.

பிரெட் – காராமணி பாக்ஸ்

தேவையானவை: கோதுமை பிரெட் துண்டுகள் – 8, தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன், எள் – ஒரு டீஸ்பூன், சிவப்பு காராமணி – கால் கப், எண்ணெய் – தேவையான அளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்.

11

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் எள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காரமணியை வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த எள் சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த காராமணியை சேர்த்து வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறினால் பூரணம் ரெடி. கோதுமை பிரெட்டின் ஓரங்களை நறுக்கிவிட்டு தண்ணீரில் பிரெட்டை நனைத்து எடுத்து பிழிந்து கிண்ணம் போல செய்து வைத்துக்கொள்ளவும். காராமணி மசாலாவை பிரெட் கிண்ணத்துக்குள் வைத்து ஆவியில் வேகவிட்டும் எடுக்கலாம். அல்லது சூடான எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

குறிப்பு: காராமணிக்குப் பதில் பச்சைப்பயறு, ராஜ்மா, சோயா போன்ற தானியங்கள் சேர்க்கலாம். அவற்றை நன்றாக ஊறவைத்து பிறகு வேகவைத்து உபயோகிக்கவும்.

பாக்ரி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பால், எண்ணெய், தேன் – தேவையான அளவு.

12

செய்முறை: கோதுமை மாவுடன் சீரகம், உப்பு, வெண்ணெய், பால் சேர்த்து கெட்டியாக பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்துக்கொள்ளவும். இதனை தோசைக்கல்லில் போட்டு ஆங்காங்கு கீறிவிட்டு, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து தேன் தடவி பரிமாறவும்.

குறிப்பு: பாக்ரி செய்யும்போது அடுப்பை குறைந்த தணலில் வைத்தே செய்யவும். இது ஒரு வாரம் வரை கெடாது.

ஸ்பிரிங் ஆனியன் குல்ச்சா

தேவையானவை: மைதா – ஒரு கப், பொடியாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் (வெங்காயத்தாள்) – கால் கப், சில்லி சாஸ் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, ஃப்ரெஷ் ஈஸ்ட் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.

13

செய்முறை: கொடுத்துள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். இதனை ஈரத்துணியால் 15 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து பரிமாறவும். தயிரில் சாட் மசாலாத்தூள் தூவி தொட்டு சாப்பிடலாம்.

குறிப்பு: ஃப்ரெஷ் ஈஸ்ட் கிடைக்க வில்லையென்றால், உலர்ந்த ஈஸ்ட்டை வெதுவெதுப்பான பாலில் ஊற வைத்து ஈஸ்ட் கரைந்ததும் அதை மாவில் ஊற்றி பிசைய வேண்டும்.

பனீர் ஸ்டப்ஃடு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், உப்பு – தேவையான அளவு. கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப், பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது), பனீர் துருவல் – அரை கப், பொடித்த முந்திரி – ஒரு டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பேரீச்சை – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்.

14

செய்முறை: கோதுமை மாவில் உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தியாக தேய்த்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பனீர், முந்திரி சேர்த்து கலவையாகும்வரை வதக்கி இறக்கவும். இத்துடன் பேரீச்சை சேர்த்துக் கிளறவும். இந்த மசாலா கலவையை இரண்டு சப்பாத்திக்கு நடுவே வைத்து ஓரங்களை ஒட்டி ஒரே சப்பாத்தியாக கவனமாக தேய்த்து வேகவைத்து பரிமாறவும்.

மலையாள கடிகார அடை

தேவையானவை: பச்சரிசி, துவரம் பருப்பு – தலா ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை மூடி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 8, சீரகம் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு.

15

செய்முறை: சுடுநீரில் அரிசி, பருப்பை 15 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் எண்ணெய், நறுக்கிய வெங்காயம் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் ஊறவைத்த அரிசி, பருப்புடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். மாவை சூடான தோசைக்கல்லில் சிறு சிறு அடைகளாக ஊற்றி, வெங்காயத்தை தூவி எண்ணெய் ஊற்றி மொறுமொறுப்பாக வேக விட்டு பரிமாறவும்.

கோதுமை பிரெட் சியாலி

தேவையானவை: இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன், கோதுமை பிரெட் – 4 (ஓரங்களை எடுத்துவிட்டு நீள நீளமாக வெட்டிக்கொள்ளவும்), ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு.

16

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கி அது வெந்ததும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தனியாத்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். வேர்க்கடலைப்பொடி தூவி இறக்கி பரிமாறவும்.

தால் கிச்சடி

தேவையானவை: தோலுடன் உடைத்த பச்சைப்பயறு (வறுத்தது) – ஒரு கப், சேமியா – கால் கப், பொடியாக நறுக்கிய (விருப்பமான காய்கறிகள்) – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு.

17

செய்முறை: பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். இதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இத்துடன் பச்சைப்பயறு, சேமியா சேர்த்துக்கிளறி, பயறு, காய்கள் வெந்ததும் இறக்கவும்.

மேத்தி தேப்லா

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், வெந்தயக்கீரை – அரை கட்டு, ஓமம் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – சிறிது, தயிர் – மாவு பிசைய தேவையான அளவு.

18

செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்களில் எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக்கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சப்பாத்திகளாக தேய்க்கவும். இதை தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

பனங்கற்கண்டு பால் பொங்கல்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பால் – தேவையான அளவு, நெய் – தேவையான அளவு, ஏலக்காய் – 2, உலர் திராட்சை, முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், பனங்கற்கண்டு – 100 கிராம், தேங்காய்த் துருவல் – கால் கப்.

19

செய்முறை: வெறும் வாணலியில் பாசிப் பருப்பை நிறம் மாற வறுத்துக்கொள்ளவும். அரிசியை கழுவி சுத்தம் செய்து, பாசிப்பருப்பு, பால் சேர்த்து குழைய வேகவிடவும். சூடான நெய்யில் ஏலக்காய், உலர்திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து இதில் சேர்க்கவும். இறுதியாக பொடித்த பனங்கற்கண்டு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி, பனங்கற்கண்டு கரைந்ததும் சிறிது நெய் ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். பரிமாறும்போது பாதாம் துருவலை சேர்த்து பரிமாறவும்.

உலையாப்பம்

தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், உலர்திராட்சை – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 50 கிராம், தேங்காய்த் துருவல் – கால் கப், முந்திரி, பாதாம் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – சிறிது.

20

செய்முறை: தோசை மாவில் உலர்திராட்சை, சர்க்கரை கலந்து நெய் தடவிய இட்லித்தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவிடவும். வெந்ததும் இத்துடன் பாதாம், முந்திரி, தேங்காய்த் துருவல் தூவி சாப்பிடக் கொடுக்கலாம். தேவைப் பட்டால் சிறிதளவு டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கலாம்.
உலையாப்பம் என்பது வேறொன்றும் இல்லை. ஸ்வீட் இட்லிதான்.

ராயல் பிடிகொழுக்கட்டை

தேவையானவை: பிளெய்ன் கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) ஓட்ஸ் – ஒரு கப், முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடி, இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – சிறிது, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், தக்காளிச்சாறு – கால் கப், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், துருவிய கேரட் – கால் கப், மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்.

21

செய்முறை: கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) ஓட்ஸை ஒன்றிரண்டாக மிக்ஸியில் உடைத்து தக்காளிச்சாற்றில் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை அலசி, ஆய்ந்து வைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தக்காளிச்சாற்றில் ஊறிய கார்ன் ஃப்ளேக்ஸைப் போட்டு, அத்துடன் இஞ்சி விழுது, உருக்கிய நெய், முருங்கைக்கீரை, பச்சை மிளகாய், உப்பு, சீரகத்தூள், துருவிய கேரட், தனியாத்தூள் போட்டு பிசிறி உருண்டைகளாக பிடித்து, ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

மினி மீல்மேக்கர் உப்புமா

தேவையானவை: மினி மீல்மேக்கர் (சோயா சங்க்ஸ்) – ஒரு கப் (வேகவைக்கவும்), சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப் உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – கால் கப், தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கியது), சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

22
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி… உப்பு, மிளகுத்தூள், உருளைக்கிழங்கை சேர்த்து மேலும் வதக்கவும். உருளைக்கிழங்கு வெந்ததும், வேகவைத்த மீல்மேக்கரை நீரை ஒட்ட வடித்துவிட்டு இதில் சேர்த்துக் கிளறவும். பரிமாறும்முன் சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: விருப்பப்பட்டால் பனீர் துருவலும் தூவி சாப்பிடலாம். மினி மீல்மேக்கரில் சூடான நீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்தால் போதும், வெந்துவிடும். சின்ன பீஸ் கிடைக்கவில்லை என்றால் பெரிய மீல்மேக்கரை நீரில் வேகவிட்டு நீரை ஒட்டப் பிழிந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

குவிக் டோக்ளா

தேவையானவை: கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன், பாம்பே ரவை – ஒரு கப், இஞ்சி – மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டித்தயிர் – ஒரு கப், எண்ணெய், உப்பு – சிறிதளவு, ஃப்ரூட்சால்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பச்சை மிளகாய் – 2, தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க (சிறிதளவு), இட்லி மிளகாய்ப்பொடி – ஒரு டீஸ்பூன்.

23
செய்முறை: கடலை மாவு, ரவை, மஞ்சள்தூள், உப்பு, இஞ்சி – மிளகாய் விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் போட்டு ஃப்ரூட் சால்ட்டை சேர்க்கவும். கலவை பொங்கி வரும்போது, கலக்கி விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வெந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து அதன்மேல் போடவும். இட்லி மிளகாய்ப்பொடி, நறுக்கிய பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

ஸ்பைசி அப்பளம்

தேவையானவை: மிளகு அப்பளம் – 5, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் – தலா கால் கப், ஓமப்பொடி (அ) பொரி – கால் கப், சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை மூடி, பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் – 2 டேபிள்ஸ்பூன்.

24

செய்முறை: மிளகு அப்பளத்தை பொரித்து பொடித்துக்கொள்ளவும் அல்லது அப்பளத்தை சுட்டு பொடித்துக் கொள்ளலாம். பெரிய பேஸினில் தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி, உப்பு, சாட் மசாலாத்தூள், வெள்ளரிக்காய் சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழியவும். பரிமாறும் முன் உடைத்த அப்பளம் போட்டு, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

கார்ன் டொமேட்டோ

தேவையானவை: வெள்ளை சோள முத்துக்கள் – அரை கப், சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு – கால் கப், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு, கடுகு, வெள்ளை மிளகுத்தூள் – தலா அரை டீஸ்பூன், தக்காளிச் சாறு – தண்ணீருக்கு பதில்.

25

செய்முறை: வெள்ளை சோளத்தை நீரில் இரவே ஊறவைத்து, பிறகு நீரை வடித்துவிட்டு குக்கரில் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு வேகவிடவும். ஆறியதும் ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, தக்காளி சாறு விட்டு உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, வெந்த சோளம், தேங்காய்த் துருவல் போட்டு புரட்டி குறைந்த தணலில் வேகவிட்டு எடுக்கவும்.

டார்டில்லா ரோல்

தேவையானவை: மைதா, சோள மாவு – தலா அரை கப், உருளைக்கிழங்கு, குடமிளகாய் – தலா 1 (பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – கால் கப், துருவிய முட்டைகோஸ், கேரட் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்.

26

செய்முறை: மைதா, சோள மாவை சலித்து உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை சப்பாத்தியாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு வைத்துக் கொள்ளவும், டார்டில்லா ரெடி. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தாள், கேரட், முட்டைகோஸ் துருவல் ஆகியவற்றை வதக்கி… உப்பு, மிளகாய்த்தூள், குடமிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, மசாலா தயாரிக்கவும். தக்காளி சாஸை மைதா சப்பாத்தியில் தடவவும். அதன் உள் இந்த மசாலாவை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.

சுருள் ஸ்வீட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், பழக்கூழ் – கால் கப், எண்ணெய் – தேவைக்கேற்ப, வெல்லத் துருவல் – அரை கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – கால் கப், உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு – 10, உப்பு – ஒரு சிட்டிகை.

27

செய்முறை: கோதுமை மாவுடன் சீஸனுக்கு தகுந்த மாதிரி பப்பாளி பழக்கூழ், மாம்பழக்கூழ், வாழைப்பழம் மசித்து கலந்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்
தில் வெல்லத் துருவல், சிறிதளவு நீர் சேர்த்து வெல்லப்பாகு செய்து வடிகட்டிக்கொண்டு அதில் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும். இந்த ஸ்வீட் பூரணத்தை பொரித்து எடுத்த பூரியில் வைத்து சுருட்டி பரிமாறவும்.

சட்புட் புட்டு

தேவையானவை: சம்பா புட்டு மாவு – ஒரு கப் (ரெடிமேடாக கிடைக்கிறது), தேங்காய்த் துருவல் – அரை கப், நாட்டுச்சர்க்கரை – கால் கப், முந்திரி – 4, ஏலக்காய் – 2, நெய் – சிறிது, உப்பு- ஒரு சிட்டிகை.

28

செய்முறை: வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து புட்டு மாவில் தெளித்து 10 நிமிடம் பிசிறி வைக்கவும். பிறகு ஆவியில் 7 நிமிடங்கள் வேகவிடவும். இதில் தேங்காய்த் துருவல், நாட்டுச்சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

ஜவ்வரிசி காரப்பணியாரம்

தேவையானவை: தோசை மாவு – ஒரு கப், ஜவ்வரிசி – கால் கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – கால் கப்.

29

செய்முறை: ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.தோசை மாவில் கடுகு, நறுக்கிய பச்சைமிளகாய் தாளித்துப் போடவும். மேலும் ஜவ்வரிசி, உருளைக் கிழங்கை போட்டு கொத்தமல்லித்தழை, உப்பு தூவி கலக்கவும்.குழிப்பணியாரக்கல் ஒவ்வொன்
றிலும் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு குழியிலும் ஜவ்வரிசி கலவையை ஊற்றி வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

இன்ஸ்டன்ட் பருப்பு இடியாப்பம்

தேவையானவை: ரெடிமிக்ஸ் இடியாப்பம் – ஒரு கப், கடலைப்பருப்பு – கால் கப், வேகவைத்த பாசிப்பருப்பு – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, கடுகு – அரை டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – கால் கப், பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்

301

செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை 10 நிமிடம் நீரில் ஊறவிட்டு பிறகு குழையவிடாமல் முத்து முத்தாக வேகவிட்டுக்கொள்ளவும். சுடு நீரில் ரெடிமிக்ஸ் இடியாப்பத்தை போட்டு வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதாவது இடியாப்பம் மூழ்கும் வரை நீர் விட்டு கொதிக்கவிட்டு நீர் சுண்டியதும் பொல பொலவென்றும் உதிர்த்துக் எடுத்துக் கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு போட்டு, உப்பு சேர்த்து வெந்த இடியாப்பம், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும். கொத்தமல்லித்தழை, பனீர் துருவல் தூவி
பரிமாறவும்.

Related posts

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் சர்க்கரை

nathan

கல்லீரலை பலப்படுத்தும் அதிமதுரம் டீ!

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகள்!

nathan

4 வாரம் கொள்ளு சூப் சாப்பிடுங்க…சூப்பர் டிப்ஸ்..

nathan

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

nathan

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

nathan

அத்திப்பழம் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்குமா?எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரஷ்ஷான சிக்கனை எப்படி கண்டுபிடிப்பது?

nathan