சைவம் சாப்பிடுவபவரோ, அல்லது அசைவம் சாப்பிடுபவரோ வீக் எண்டு… விடுமுறை நாட்களில் விருந்து சாப்பாட்டை, ஃபுல் கட்டு கட்டுவதே ஒரு தனிசுகம்தான். இதற்காகவே காலை எழுந்து காய்கறி சந்தை, இறைச்சிக் கடைக்குப் போய் கூட்டத்துக்கு நடுவில் நின்று பொருட்களை வாங்கிவந்து வீட்டில் கொடுத்து, சமைக்கும்போது அடுப்படியிலிருந்து வரும் வாசனையை நுகர்ந்தபடி சாப்பிடும் நேரத்தை ஆவலாக எதிர்பார்த்திருப்பர்.
காலை உணவில் மிச்சமான கோழிக் குழம்பு, அவித்த முட்டை, காளான், கீரை, உருளைக்கிழங்குப் பொரியல் ஆகியவற்றை ஃபிரிஜில் வைத்து, மாலை எடுத்து சுடவைத்து இரவு உணவான சப்பாதி, தோசை அல்லது இட்லியோடு சேர்த்து சாப்பிடுவர். இன்று பெரும்பாலான வீடுகளில் வழக்கமாகிப்போன விஷயம் இது. உணவை மீண்டும் மீண்டும் சுடவைப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் குறைவதுடன், அவை உடலில் பல எதிர்வினைகளை உண்டாக்குவது பலரும் அறிந்திராத செய்தி. எந்தெந்த உணவுகளை இவ்வாறு மீண்டும் சூடுபடுத்தக்கூடாது எனத் தெரிந்துகொள்வோமா?
முட்டை
உடலுக்குத் தேவையான கலோரிகள், புரதம், வைட்டமின்கள் நிறைந்தது முட்டை. முட்டையை அளவான சூட்டிலேயே வேகவைக்க வேண்டும். அளவுக்கு அதிகமான வெப்பத்தில் இருக்கும் போது முட்டை நச்சுத்தன்மையை பெற்றுவிடும். இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மீண்டும் சூடுபடுத்தப்பட்ட முட்டைகளை கட்டாயமாகப் பத்துவயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அவித்த முட்டை, தாளிக்கப்பட்ட முட்டை ஃப்ரை, ஆம்லெட் ஆகியவற்றை கட்டாயம் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. முட்டை ரெசிபிக்களை சமைத்து ஒருமணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடவேண்டும்.
கோழி இறைச்சி
பெரும்பாலான ரோட்டோர ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கோழி இறைச்சி மீண்டும் மீண்டும் சுடவைக்கப்படுகிறது. இது போன்ற இறைச்சிகளை விற்கும் கடைகளில் சாப்பிடுவதை, முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும். இவ்வாறு சமைத்த கோழிஇறைச்சியை மீண்டும் சுடவைத்து, உண்ணுவது மிகவும் ஆபத்தானது.
இதற்கு முக்கியக் காரணம், இந்த உணவில் உள்ள அதிகமான புரதம். பச்சையான கோழி இறைச்சியைக்காட்டிலும் சமைத்த கோழியில் புரதஅளவு அதிகம். இதனை மீண்டும் சுடவைக்கும் போது, இதன் அதிகமான புரத அளவால் கடுமையான செரிமான பிரச்னைகளான, வாந்தி, ஒவ்வாமை ஏற்படலாம். கோழி ஃப்ரை, குழம்பு ஆகியவற்றை சூடுபடுத்தாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.
கீரைகள்
கீரைகளை மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. கீரைகளில் நைட்ரேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களின் அளவு அதிகமாக இருக்கும். கீரைகளை சமைத்து மீண்டும் சூடுபடுத்தும்போது, கீரையில் நைட்ரேட் அளவு அதிகரிக்கும். இதனால் செரிமானக் கோளாறு, நாளடைவில் குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிக அளவில் உள்ளது. நெடுநேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் ஊட்டச்சத்துக்களை அது இழந்துவிடும். அவற்றை மீண்டும் சுட வைப்பதால் பொடூலிசம் (botulism) என்னும் பாக்டீரியா தாக்கி, நச்சுத்தன்மையை அடைந்துவிடும். இதனை சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் மாவுச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. நைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. அதை மீண்டும் சுட வைக்கும் போது, சத்துக்கள் பலனளிக்காமல் போய்விடுகிறது.
காளான்
காளானை, அதனை சமைத்த நான்கு மணிநேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் சராசரியான காலநிலையில் வைத்தால் அவற்றில் பாக்டீரியாத் தொற்று ஏற்படும். முதல்நாள் சமைத்த காளானை மறுநாள் மீண்டும் சுடவைக்கும்போது, அதிலுள்ள புரதத்தின் அளவில் மாற்றம் ஏற்படும். இதனால் செரிமானக் கோளாறு, வயிற்று உபாதைகள், இதயநோய்கள் ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்ட இதய நோயாளிகள் காளானை மீண்டும் சுடவைத்து சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.