பற்கள் வரிசையாக வெளையாக இருந்தால் எவரின் மனதையும் கொள்ளையடித்துவிடும். குழந்தைகளின் பற்கள் அவ்வாறே. நாளடைவில் சாப்பிடும் உணவுகளாலும், முறையற்ற பராமரிப்பினாலும் பற்கள் வலுவிழந்து, சொத்தை, சிதைவு மஞ்சள் கறை ஆகியவை ஏற்பட்டு பாதிப்படைகின்றன.
பற்கள் அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் கூட. பற்களின் வேர்ப்பகுதிகளிலிருந்து நரம்புகள் உடல் முழுவதும் செல்வதால், பற்களில் ஏற்படும் சின்ன தொற்று கூட உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
விளம்பர பேஸ்ட் கூடாது : விளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப் பயன்படுத்தக் கூடாது. அதில் பிளீச்சிங் ஏஜென்ட் கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். ஆகவே மூலிகைகள் அடங்கிய இயற்கை பேஸ்ட் உங்கள் பற்களுக்கு உன்னதமானது
அதிக நேரம் பல் விளக்குதல் கூடாது : அதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும். ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும்.
ஈறுகளுக்கு மசாஜ் : காலையில் பற்களைச் சுத்தப்படுத்திய பின், ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு பல்லின் மேல் இருக்கும் ஈறின் மேலும் மென்மையாக அழுத்தம் கொடுக்கலாம். அழுத்தம் தருவதால், பற்களும் ஈறுகளும் நன்றாகப் பதிந்து வலுவடையும். ரத்த ஓட்டம் சீராக நடக்கும். பல் தொடர்பான பிரச்னைகள் வருவதும் குறையும்.
இனிப்பு வகைகள் : பற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள்,ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், வொயின் ஆகியவற்றை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சூழலில், சாக்லெட்டோ, சர்க்கரை கலந்த உணவையோ சாப்பிட்ட பின், அரை மணி நேரத்திற்குள் வாய் கொப்பளித்துவிட வேண்டும்.
நார்ச்சத்து உணவுகள் : நார்ச்சத்துக்கள் மிகுந்த உணவு நச்சுகளை வெளியேற்றும். முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே.
பால் பொருட்கள் அனைத்தும் பற்களுக்கு நல்லது. கால்சியம் அடங்கிய கேழ்வரகு, உருளை, பசலைக் கீரை, ஆரஞ்சு, சோயா, முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால், பற்களில் காறை படுவது தவிர்க்கப்படும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மைகளையே செய்யும். கரும்பைக் கடித்து சுவைத்து சாப்பிடுதல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்களை இயற்கையாகவே இது சுத்தமாக்கும்.
சர்க்கரை நோயளிகள் கவனிக்க : சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம்.