கோடைகாலம் வந்தால்தான் நாம் பழங்களையும் பழச்சாறுகளையும் தேடுவோம். காரணம், கோடையின் வெப்பத்தையும் அதிக தாகத்தையும் இயற்கையான பழச்சாறுகள் தணிக்கும் என்பதனால்தான். ஆனால், குளிர் காலங்களில் இந்தப் பழங்களை நாம் சளி, இருமலுக்கு பயந்து தவிர்த்துவிடுவோம். ஒவ்வொரு சீசனுக்கும் சிலவகைப் பழங்கள் கிடைக்கும். பழங்கள் கிடைக்கும்போதெல்லாம் அவற்றைக் கடித்தோ, ஜூஸாகவோ சாப்பிடலாம்.
பழங்களிலிருந்து பல வகை வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்பு, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்தச் சாறு குடித்தால் இந்த நோய் போகும் என யாரும் குடிப்பதில்லை. காய்கறிகள் மற்றும் மருந்தாகும் பழங்களின் சாறுகள், எந்தெந்த நோய்களைத் தீர்க்கும் என்பதைச் சொல்கிறார், சித்த மருத்துவர் தி.வேணி.
சளியைக் கரைக்கும் ஆரஞ்சு + இஞ்சி பழச்சாறு:
ஆரஞ்சு, காரட், எலுமிச்சை, முள்ளங்கி, உரித்த பூண்டுப் பல் ஆகியவற்றை சம அளவு எடுத்து, மிக்ஸியின் போட்டு சாறாக்கிக்கொள்ளவும். அத்துடன் தோல் நீக்கிய இஞ்சி மற்றும் எலுமிச்சைச் சாறுகளைச் சிறிதளவு கலந்து, காலை மாலை இரு வேளை உட்கொள்ள, சளி கரையும்.
இருமலுக்கு விடைகொடுக்கும் காரட்+வெங்காயச் சாறு:
உரித்து எடுத்த சாம்பார் வெங்காயம் 10, பூண்டுப் பல் 10, காரட் இரண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கிக்கொள்ளவும். அதில், சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலக்கவும். அதோடு தேன் கலந்து, நீர் விடாமல் குடிக்க, இருமல் தணியும்.
வரட்டு இருமலைப் போக்கும் பூண்டு+வெங்காயச் சாறு:
உரித்த சிறிய வெங்காயம் 10, பூண்டுப் பல் 10 இந்த இரண்டுடன் சம அளவு அன்னாசிப் பழத் துண்டுகளைக் கலந்து, சாறாக்கிக் குடிக்கத் தீரும், வரட்டு இருமல்.
மாதவிலக்குப் பிரச்னை தீர்க்கும் மாதுளை + அன்னாசிப் பழச்சாறு:
தோல் நீக்கிய இஞ்சி, எலுமிச்சை, உரித்த பூண்டுப் பல், மாதுளை, பப்பாளி, அன்னாசி ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, நீர் விடாமல் அரைத்துச் சாறு எடுத்து, அதில் சிறிதளவு தேன் கலந்து, இரண்டு வேளை அருந்த, மாதவிலக்குக் கோளாறு சரியாகும்.
அனீமிக், பருமன் காரணமாக வராத மாதவிலக்கைச் சரியாக்கும் பேரீச்சம்பழச் சாறு:
பூண்டுப் பல், பேரீச்சை, பனைவெல்லம், தேன் ஆகியவற்றை சம எடை எடுத்து, சாறு பிழிந்து, தினம் இரு வேளை அருந்த மாதவிலக்கு பிரச்னை சரியாகும்.
வாந்தியை நிறுத்தும் இஞ்சி+எலுமிச்சைச் சாறு:
இஞ்சி, எலுமிச்சை, நாரத்தைச் சாறுடன் தேன் கலந்து அருந்த, வாந்தி நிற்கும்.
கர்ப்ப காலத்தில் அருந்தவேண்டிய சாறு:
காரட், தக்காளி, ஆப்பிள், அத்தி, பீட்ரூட், பாகற்காய், பூசணிக்காய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, நீர் விடாமல் சாறு தயாரித்து, அத்துடன் தேன் கலந்து குடித்துவந்தால், குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். கர்ப்ப கால நீரிழிவு வராது, உடம்புக்குத் தேவையான நீரைச் சமநிலையில் வைக்கும். உடல் பருமன் ஏற்படாது. கால் வீக்கம், முக வீக்கம் வராது. அனீமிக் ஏற்படாது, பசி இன்மையைப் போக்கும், உள்ளுறுப்புகளில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
பருக்கள்: டீன் ஏஜ் பெண்களுக்கு எதிரி, பருத்தொல்லைதான். முகத்தில் மொட்டு மொட்டாகத் தோன்றி, அழகைக் கெடுக்கும். சிலருக்கு தழும்பு உண்டாகி அதனால் மன உளைச்சலைக்கூட ஏற்படுத்திவிடும். இதனைத் தவிர்க்க, காரட்டுடன் சிறிதளவு பசலைக்கீரையைச் சேர்த்துச் சாறு எடுத்துக் குடிக்கவும்.
மலச்சிக்கல்: உலர் பழங்கள், பசலைக்கீரை, காரட், வெள்ளரி, ஆப்பிள், அத்தி, கொய்யா ஆகியவற்றைச் சம அளவு எடுத்துச் சாறாக்கிப் பருக, மலச்சிக்கல் சரியாகும்.
தலைவலி: இஞ்சி, காரட், பீட்ரூட், வெள்ளரி, தக்காளி, முட்டைக்கோஸ், ஆப்பிள் ஆகியவற்றைச் சம அளவு கலந்து, நீர் கலக்காமல் அரைத்துச் சாறெடுத்து அருந்த, தலைவலி போகும்.